ஜனம் தொலைக்காட்சி (மலையாளம்) – தென்னிந்திய அளவில் இது ஆச்சரியப்படத்தக்க நிகழ்வு. இந்திய அளவில்கூட இருக்கலாம். ரிபப்ளிக் தொலைக்காட்சியையும் விட ஒரு படி மேல். ரிபப்ளிக்கை முழுமையாக நம்பிவிட முடியாது என்னும் சந்தேகம் எப்போதும் எனக்குண்டு. ஜனம் டிவியில் பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ்ஸுக்கு ஆதரவாகக் குரல்கள் தீவிரமாகக் காதில் விழும்போது ஆச்சரியமாக உள்ளது. திரைப்பட இயக்குநர் பிரியதர்ஷனின் தொலைக்காட்சி இது.
தமிழில் இப்படி ஒரு தொலைக்காட்சி அவசியம். அனைத்துச் செய்தித் தொலைக்காட்சிகளும் அரசியல் வலதுசாரிக்கு எதிராக இருக்கும்போது ஆதரவுக் குரல் ஒன்றாவது வேண்டும்.
இன்று புதிய தொலைக்காட்சி ஆரம்பிப்பவர்கள் மீண்டும் வலதுசாரி எதிர்ப்புக் குழுவில் ஐக்கியமாகி, தங்களுக்கென்று ஒரு பார்வையாளர் கூட்டத்தை உருவாக்கத் திணறுகிறார்கள். ஓர் உருப்படியான வலதுசாரித் தொலைக்காட்சி வருமானால் எடுத்த எடுப்பில் 20 சதவீதப் பார்வையாளர்களை ஈர்க்கமுடியும். ஜனம் டிவி ஓர் உதாரணம். ஆனால் அப்படி ஆரம்பிக்க முடியாத அளவுக்கு இங்கே கருத்து ரீதியான ஆதிக்கம் நிலவுகிறது. இதை எதிர்த்த ஒற்றை வெடிப்பு போதும். அதை நிகழ்த்தும் தொலைக்காட்சிக்கு, முதலாவது என்னும் தகுதி தரும் செல்வாக்கு எப்போதும் நீடிக்கும். அதை அறுவடை செய்யப்போகும் புதிய வரவு எது?