கர்நாடகாவில் வெங்காயம் பூண்டு இல்லாமல் அக்ஷயப் பாத்ரா உணவு வழங்கும் திட்டம் குறித்து எதிர்ப்புகள் எழுந்தன. அக்ஷயப் பாத்ராவின் விதிகளுக்கு உட்பட்டே அது உணவு வழங்க இயலும். நிச்சயம் வெங்காயம் பூண்டு சேர்க்கவேண்டுமென்றால் அக்ஷயப் பாத்ராவைத் தேர்ந்தெடுத்திருக்கக்கூடாது. இப்போது அக்ஷயப் பாத்ராவை நிர்ப்பந்திப்பது சரியானதல்ல. இது கிடக்க, வெங்காயம் பூண்டு சேர்க்காவிட்டால் எல்லாக் குழந்தைகளுக்கும் நியூட்ரிசன் கிடைக்காது என்பதெல்லாம் அபத்தம். வெங்காயம் பூண்டு இல்லாமலேயே நிச்சயம் எவ்விதக் குறையும் இல்லாமல் வாழமுடியும். வெங்காயம் பூண்டு இல்லாமல் உணவு என்பது பிராமணர்களுக்குரியது என்பதால், பிராமணர்களை எதிர்க்கவேண்டும் என்பதற்காகவே, வெங்காயம் பூண்டு இல்லாவிட்டால் ஒட்டுமொத்த உடல்நலமும் நாசமாகிவிடும் என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள். வெங்காயம் பூண்டுடன் சமைப்பதைத் தவிர்க்க நினைக்கும் ஒரு அமைப்பை வலியுறுத்துவதுதான் தவறு.
(பின் குறிப்பு: வெங்காயம் பூண்டு இல்லாமல் என்னால் சாப்பிடவே முடியாது. பண்டிகை, விரத நாள்களில் தவிர்ப்பேன். மஹாளயபக்ஷத்தில் அந்தப் பதினைந்து நாளைக் கடப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும். சில சமயம் ஏமாற்றிவிடுவேன்! வெங்காயம் பூண்டின் சுவை மிகப் பிடித்தமானதுதான், ஆனால் அது இல்லாததால் எந்த நியூட்ரிஸனும் கிடைக்காது என்பதெல்லாம் அபத்தம்.)
—
ஐஐடியில் சைவ அசைவ தனித்தனி கேண்டின்கள் என்றொரு கொந்தளிப்பு. அசைவப் பழக்கம் உள்ளவர்கள் என்றாவது சைவ உணவு அருந்தினால் அவர்கள் சைவ கேண்டீனுக்குள் அனுமதிக்கப்படுவார்களா இல்லையா என்பது தெரிந்தால்தான் இதில் கருத்துச் சொல்லமுடியும். அனுமதிக்கப்படுவார்கள் என்றால் இதில் சாதிப்பாகுபாடு என்ற எதுவும் இல்லை. அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றால், இதில் பிரச்சினை உள்ளது. எத்தனையோ பிராமணர்கள் உள்ளிட்ட உயர்சாதி சைவர்கள் அசைவம் உண்பதும், எத்தனையோ பிராமணரல்லாதோர் சைவம் மட்டுமே உண்பதும் எல்லாம் இங்கே நடக்கக்கூடியதுதான். உணவுப் பழக்கம் மட்டுமே காரணம் என்றால், இப்பிரிவினையில் சாதிப்பாகுபாடு இல்லை என்றே சொல்லவேண்டும். அசைவ உணவு உண்பவர்களுடன் ஒரே இடத்தில் இருந்து நான் சைவ உணவைச் சாப்பிட்டிருக்கிறேன். ஆனாலும் அது ஒருவித ஒவ்வாமையைத் தரத்தான் செய்யும். இது உணவுப்பழக்கத்தினால் வரும் ஒவ்வாமையே அன்றி, சாதி ரீதியிலான ஒவ்வாமை அல்ல. ஆனால், கையில் கிடைப்பதையெல்லாம் வைத்து பிராமண லேபிள் ஒட்டித் தாக்க நினைத்தால், எதையும் இப்படி வளைத்துவிடலாம். வளைத்து விடுகிறார்கள்.