வாஜ்பாயி – அஞ்சலி

நன்றி வாஜ்பாயி

கச்சத் தீவு பிரச்சினையில் அன்றைய மத்திய அரசின் நிலைப்பாட்டை பாராளுமன்றத்தில் கண்டித்த முதல் தலைவர் வாஜ்பாயி என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் புகழுரை தீட்டியிருக்கிறது. கொள்கையளவில் வேறுபட்டவர் என்றாலும் அனைவர் உள்ளங்களிலும் அங்கீகரிக்கத்தக்க ஒரு தலைவர் என்ற இடத்தைப் பிடித்திருக்கிறார் வாஜ்பாயி. இத்தனைக்கும் கடந்த பதினைந்து வருடங்களாக அவர் அரசியல் வெளியில் முற்றிலுமாக இல்லை.

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தின் மிக முக்கியமான பிரச்சினை எது, எது அந்த மக்களின், இனத்தின் உணர்வுசார்ந்த உண்மையான பிரச்சினை என்பதையெல்லாம் வாஜ்பாயி அறிந்திருந்தார். மதுரையில் நடந்த டெசோ மாநாட்டில் அவர் கலந்துகொண்டது இன்று வரை அனைவரையும் நினைவுகூர வைக்கிறது.

காங்கிரஸ் எத்தனையோ மாநில அரசுகளைக் கலைத்திருக்கிறது. ஆனால், எவ்வளவோ நெருக்கடியை ஜெயலலிதா உருவாக்கியபோதும், தன் வாழ்நாளில் தான் சந்தித்திருந்தாத சிறுமைகளைச் சந்திக்கவேண்டி வந்தபோதும், வாஜ்பாயி தமிழ்நாட்டில் திமுக அரசைக் கலைக்க மறுத்தார்.

1994ல் காஷ்மீர் பிரச்சினையை ஒட்டிய ஒரு தீர்மானத்தை ஐநாவில் பாகிஸ்தான் கொண்டு வரவிருக்கிறது என்ற செய்தி இந்தியாவுக்குக் கிடைத்தது. இந்தியாவின் நிலையை ஐநாடில் உறுதிபட எடுத்துரைக்க அன்றைய பிரதமர் நரசிம்மராவ் வாஜ்பாயி தலைமையில் ஒரு குழுவை ஜெனீவாவுக்கு அனுப்பினார். தனக்குத் தரப்பட்ட மிகப்பெரிய பொறுப்பைச் சாதித்தார் வாஜ்பாயி. தீர்மானம் வந்தால், தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலை உறுதியாகிவிடும் என்று பயந்துபோன பாகிஸ்தான் அந்தத் தீர்மானத்தைக் கொண்டு வரவே இல்லை.

பொக்ரான் அணுகுண்டுச் சோதனை அனைத்து உலக நாடுகளையும் இந்தியாவை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்தது. இத்தனை பரந்து விரிந்த நாட்டில் ஒரு ரகசியத்தைக் காப்பாற்றி இத்தனை பெரிய நிகழ்வைச் சாதித்துவிட முடியும் என்று இந்தியாவின் சாதாரண மக்கள் மட்டுமல்ல, உலக நாடுகளும் பெரியண்ணன் நாடும்கூட நம்பியிருக்கவில்லை. அப்படி ரகசியமாக புத்தர் சிரித்தபோது உலக நாடுகள் ஆச்சரியத்தில் வாய்பிளந்தன. ஒவ்வொரு இந்தியன் உள்ளத்தில் எதோ ஒரு பெருமிதம். இதன் தொடர்ச்சியாக இந்தியா எதிர்கொள்ளப் போகும் பொருளாதாரத் தடைகளை எல்லாம் மீறி அனைவர் உள்ளத்திலும் என்னவோ தாங்களே சாதித்து விட்டது போன்ற உணர்ச்சி.

இந்த உணர்ச்சியின் உளவியல் முக்கியமானது. தொடர்ச்சியாக மிக பலவீனமான பிரதமர்களையே கண்டுவிட்ட இந்தியா, தன்னளவில் மிகவும் தன்னம்பிக்கையுள்ள, தேசத்தின் மீது பெரும் அபிமானமுள்ள, இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்தின் மீதும் அக்கறையுள்ள ஒரு தலைவனைக் கண்டுகொண்டது என்ற உணர்ச்சிதான் அதன் உண்மையான காரணம்.

கார்கில் போரை வாஜ்பாயி அரசு கையாண்ட விதம் மிக முக்கியமானது. லாகூர் பயணத்துக்குப்பின் இந்தியாவின் நல்லெண்ணத்துக்கு பாகிஸ்தான் செய்த அநியாயத்துக்கு வாஜ்பாயி தக்க பதிலடி கொடுத்தார். சமாதானம் என்றால் சமாதானம், போர் என்றால் போர் என இந்தியா எதற்கும் தயார் என்ற செய்தி கார்கில் வெற்றி வழியே உலகிற்குச் சொல்லப்பட்டது.

நாற்கரச் சாலைத் திட்டம் இந்தியாவை சாலை வழியே ஒருங்கிணைத்தது. இன்றும் இச்சாலைகளில் பயணம் செய்பவர்கள் வாஜ்பாயி பெயரைக் குறிப்பிடுவதைக் கேட்கலாம். தொலை நோக்கு என்பது ஒரு அரசியல் தலைவரின் அடிப்படைத் தேவை. இது இல்லாத சமயங்களில்தான் இந்தியா தள்ளாடுகிறது. இந்தியாவின் இத்தள்ளாட்டத்தைப் போக்கிய பாரதத் தாயின் பிதாமகன் வாஜ்பாயி.

ஒப்பற்ற ஒரு தலைவரை, ஒரு மாபெரும் நிகழ்வை நாம் இழந்திருக்கிறோம். வாஜ்பாயி தனக்களிக்கப்பட்ட வாழ்வை மிக அர்த்தம் மிகுந்ததாக்கியிருக்கிறார். கட்சி ரீதியாகவும் சரி, ஒரு தலைவர் என்ற நிலையில் இந்தியாவுக்காகவும் சரி, அவர் செய்துவிட்டுச் சென்றிருக்கும் சாதனைகள் என்றென்றும் நினைவுகூரத்தக்கவை. வாஜ்பாயி என்ற அந்த சாதனையாளருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.

நன்றி: குங்குமம் இதழ்

Share

Comments Closed