கருணாநிதி மரணத்தை ஒட்டி ஹிந்துக்களின் திடீர் ஆதரவு

கருணாநிதியின் மறைவை ஒட்டிப் பல ஹிந்து ஆதரவாளர்களும் ஹிந்துத்துவ ஆதரவாளர்களும் தொடர்ச்சியாகத் தங்களது விதவிதமான கருத்துக்களையும் விதவிதமான கோணங்களையும் நிலைப்பாடுகளையும் பகிர்ந்த வண்ணம் இருக்கிறார்கள். இவர்கள் கருணாநிதியை இத்தனை நாள் எப்படிப் புரிந்துகொண்டார்கள் என்பதையும் இப்போது விதவிதமாக எப்படியெல்லாம் புரிந்து கொள்ளப் பார்க்கிறார்கள் என்பதையும் ஒப்புநோக்கும்போது பெரிய அதிர்ச்சியும் அதைவிடப் பெரிய ஆச்சரியமும் ஒருங்கே உண்டாகிறது.

பொதுவாகவே நாம் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுச் சிந்திப்பவர்களே – என்னையும் சேர்த்து. அது ஜெயலலிதா மரணம் என்றாலும் கருணாநிதியின் மரணம் என்றாலும் நாம் அவர்களது பழைய வரலாற்று நிலைப்பாடுகளையெல்லாம் மறந்துவிட்டு, நம் கண்ணெதிரே நிகழும் மனிதன் ஒருவனின் மரணத்தை மட்டுமே சிந்திக்கத் தலைப்பட்டு விடுகிறோம். ஆனால் ஒரு அரசியல் நிலைப்பாடுள்ள, அரசியலில் சாதித்த மனிதனின் மரணம் என்பது நாம் எப்போதும் காணும் ஒரு சாதாரண மனிதனின் மரணத்துடன் ஒப்பிடத் தகுந்தது அல்ல.

எந்த ஒரு மரணமும் வருத்தப்பட வேண்டியதுதான். எந்த ஒரு மனிதனின் மரணமும் அஞ்சலி செலுத்தப்பட வேண்டியதுதான். ஆனால் அந்த அஞ்சலியின் பின்னால் ஒளிந்துகொண்டு நாம் புதிய புதிய கருத்துக்களை அந்த அரசியல்வாதியின் மீது ஏற்றி வைப்பது சரியானதல்ல. நம் வீட்டோடு இருக்கும் ஒருவரின் மரணத்தை ஒட்டி அவர் தனிப்பட்ட மனிதர்களுக்கு மட்டுமே செய்த தீமைகளை மறப்பது வேறு. அவர் கொடுத்த பல துன்பங்களை மறப்பது வேறு. ஆனால் ஒரு சமுதாயத்திற்கு ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்த அரசியல்வாதியை நாம் இப்படி அணுகிவிட முடியாது. அணுகக்கூடாது.

இன்று சமூக வலைத்தளங்களில்நாம் செய்வதெல்லாம் என்ன என்று கவனித்துப் பார்க்கும் போது அதிர்ச்சியாக உள்ளது. தனிப்பட்ட ஆன்மீக ஹிந்துக்கள் மட்டுமே இப்படி யோசித்தால் கூட அதில் உள்ள உணர்ச்சிப் பெருக்கைப் புரிந்துகொண்டு விட முடியும். ஆனால் நல்ல அரசியல் முதிர்ச்சி பெற்ற ஹிந்துத்துவ ஆதரவாளர்கள்கூட, இத்திக்கில் இதயத்தால் மட்டும் யோசிப்பது அதிர்ச்சியாக உள்ளது.

விதவிதமான கற்பனைகளை கருணாநிதியின் மீது ஏற்றி வைக்கப் படாதபாடு படுகிறார்கள். அவர் ஹிந்துக்களின் ஆதரவாளர் என்கிறார் ஒருவர். அவர் பிராமணர்களுக்குத் தீமை பெரிதாகச் செய்யவில்லை என்கிறார் இன்னொருவர். ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டால் கருணாநிதி எவ்வளவோ மேல் என்கிறார் வேறொருவர். பொதுப்புத்தி ஒன்றைச் சிந்தித்து, அதே வழியில் நாமும் சிந்திப்பது என்பது ஒரு பழக்கம். ஒரு வகையில் நோய். இந்த நோய் பீடிக்கப்பட்டு, இப்படி யோசிக்கத் துவங்குகிறார்கள். ஒரு புதிய கருத்தை திடீரென அடைந்து, அதை ஒட்டி இவர்கள் பெரும் மகிழ்ச்சி கொள்கிறார்கள். தொடர்ச்சியாக, தாங்கள் நினைத்த கருத்துக்கு வலுச்சேர்க்கும் மேலதிகக் கருத்துக்களை எழுதி எழுதிச் சேர்கிறார்கள். இதுதான் பிரச்சினை.

கருணாநிதி ஹிந்து ஆதரவாளர் என்று சொல்ல உண்மையில் ஒருவர் கூச வேண்டும். கருணாநிதி பிராமணர்களுக்கு அத்தனை தீமை செய்யவில்லை என்று எழுத ஒருவர் நாண வேண்டும்.

கருணாநிதி இறந்த சமயத்தில் நான் இதைச் சொல்வது அவரை அவமதிப்பது செய்வதற்காக அல்ல. மாறாக அவர் இத்தனை நாள் என்ன அரசியல் செய்தாரோ அதை மீண்டும் நினைவுறுத்தும் விதமாக மட்டுமே. அதுவும் கூட கருணாநிதியைப் பாராட்ட திடீரெனத் தலைப்பட்டிருக்கும் இந்துத்துவ மக்களுக்காகத்தான்.

கருணாநிதி நல்ல தந்தை நல்ல மகன் என்றெல்லாம் யோசிக்கத் தலைப்படுகிறார்கள். கருணாநிதி மரியாதை நிமித்தம் சந்தித்த இந்துத் தலைவர்களை ஒட்டி யோசிக்கிறார்கள். ஏன் அதை அவர் வெளிப்படையாக ஒத்துக்கொள்ளவில்லை என்கிற பிரச்சினை இத்தனை நாள் அவர்களுக்குள் இருந்தது. ஆனால் கருணாநிதியின் மறைவையொட்டி அதை மறந்துவிட்டு அவர் ஹிந்து ஆன்மிகத் தலைவர்களைச் சந்தித்ததையே பெரும் பேராக எண்ணிப் பூரிப்பது தேவையற்ற செயல். உண்மையில் கருணாநிதியின் சந்திப்பில் எப்பொருளும் நமக்கு இல்லை.

என்றும் கருணாநிதி தன்னை ஹிந்து எதிர்ப்பாளராகவும் இந்துத்துவ வெறுப்பாளராகவும் பிராமணக் காழ்ப்பாளராகவும் மட்டுமே தன் அரசியலை வடிவமைத்துள்ளார். இந்தச் சமயத்தில் நாம் இதையெல்லாம் மறந்து விட வேண்டியதில்லை. ஜெயலலிதாவை எதிர்க்க கருணாநிதியை நம்மவராக்கத் தேவையே இல்லை. கருணாநிதி எதிர்ப்பும் ஜெயலலிதா எதிர்ப்பும் – கருணாநிதியும் ஜெயலலிதாவும் மறைந்துவிட்ட நிலையில் – ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றவை.

இதன் இன்னொரு பக்கத்தையும் சொல்ல வேண்டி உள்ளது. இதையெல்லாம் மனதில் கொண்டு கருணாநிதி இறந்த இச்சமயத்தில் அவர் மீது அவதூறுகளைப் பரப்புவது சரியல்ல. என் நோக்கம் அதுவல்ல. சில மிகத் தரக்குறைவான பதிவுகளைப் பார்க்கிறேன். அது தேவையற்றது. நம் எதிர்ப்பு கருத்துக்களோடுதான், தனிப்பட்ட வகையில் அல்ல. நாம் கருணாநிதியைப் பற்றி விமர்சிக்க இன்னும் நமக்குக் காலம் உள்ளது. இதற்கு முன்னரும் காலம் இருந்தது. எனவே கருணாநிதி மறைந்திருக்கும் செய்தியால் திமுகவினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாடி இருக்கும் இந்நேரத்தில் நாம் நம் தீவிரமான விமர்சனங்களைச் சொல்ல வேண்டியதில்லை. ஹிந்துத்துவர்கள் அவரைப் பாராட்ட துவங்கியிருப்பது தேவையற்ற செயல். நான் இதைப்பற்றி இந்நேரத்தில் எழுத நினைத்தது ஒரே ஒரு காரணுத்துக்காகத்தான்.

நான் மதிக்கும் இந்துத்துவ சுய சிந்தனை உள்ள சிந்தனையாளர்கள் கூட எழுத ஆரம்பித்திருப்பது பெரிய ஏமாற்றத்தைத் தந்தது என்பது மட்டுமே அதற்கான காரணம். உதாரணமாக பி.ஆர்.மகாதேவன்.

நான் பி.ஆர். மகாதேவன் எழுதியிருக்கும் ஒரு நூலுக்கு மிக முன்னர் ஒரு முன்னுரை எழுதி இருக்கிறேன். அந்த நூலில் குறிப்பிட்டவை இன்றளவும் செல்லுபடியாகக்கூடியவையே. அதன் அடிப்படை இப்படி இருந்தது – பிஆர் மகாதேவன் சுயமாக சிந்திக்கத் தெரிந்த மிகச் சிலரில் ஒருவர். என் கணிப்பு இன்றளவும் அதுவேதான். நான் அதில் எள்ளளவும் மாறுபாடு கொள்ளவில்லை. அதேசமயம் மகாதேவனின் நிலைப்பாடுகள் மிகவும் சிக்கலானவை. பல கண்ணிகளில் காலூன்றி ஒரு விருட்சம் போல எழுபவை. அதனாலேயே அதில் அடிப்படைக் குழப்பங்கள் அதிகம். பல விஷயங்களைப் பல நிலைப்பாடுகளிலிருந்து ஒரே கட்டுரையில் சொல்ல முயல்வதால் கட்டுரை என்ன சொல்ல வருகிறது என்பதைத் தீர்மானமாக அணுகுவது மிகக் கடினம். மகாதேவனின் பாணி இது. பி.ஆர். மகாதேவன் மிக முக்கியமான ஹிந்துத்துவ சிந்தனையாளர், மிக வித்தியாசமான பார்வைகள் கொண்டவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

கருணாநிதி குறித்து அவர் எழுதியிருக்கும் அஞ்சலிக் குறிப்பு போன்ற ஒன்றை தமிழ்ஹிந்து வலைத்தளம் வெளியிட்டு இருப்பதுதான் வேதனை அளிக்கிறது. கருணாநிதி குறித்த மாயையை உருவாக்கி, அதை ‘அவர் நல்லவர் அல்ல ஆனால் நம்மவர்தான் (ஹிந்துதான்)’ என்ற ஒரு கருத்தை முன்வைத்து ஒரு அதிர்ச்சி மதிப்பீட்டை உருவாக்குகிறார். இதை வாசிப்பவர்கள் அதன் சட்டென ஒரு கருத்துக்காக ஆராதிக்கலாம். ஆனால் இதன் பின்னே உள்ள பொருள் உண்மையில் ஒன்றும் இல்லை. நல்லவர்தான் ஆனால் ஹிந்து என்று சொல்ல வருவதன் மூலம் நாம் தமிழ்ஹிந்து தளத்தில் என்ன சாதிக்கப் போகிறோம் என்று யோசித்திருக்க வேண்டும்.

அது மட்டுமல்ல, அந்தக் கட்டுரை இரண்டு முக்கியமான தவறுகளைச் செய்கிறது என்றே நினைக்கிறேன். (இப்போதைக்கு என்னால் இதை உறுதி செய்யமுடியவில்லை என்றாலும் கூட.) மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் சிலை கருணாநிதியால் நிறுவப்பட்டது என்பதை உறுதி செய்ய வேண்டும் என ஒரு நண்பர் கூறினார். இது கருணாநிதி வைத்தது அல்ல என்று குறிப்பிட்டார் அவர். இரண்டாவது அந்த நண்பர் குறிப்பிட்டது, கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையின் அடிப்படை எண்ணத்தை விதைத்தது ரானடே என்பதுதான். ஆனால் அந்தப் பெருமையும் கருணாநிதிக்கே தாரை வார்க்கப்பட்டுள்ளது. உண்மையில் ஒட்டுமொத்த கட்டுரையின் அடிப்படையுமே இந்த இரண்டு விஷயங்களில்தான் நிலைகொண்டுள்ளது. இந்த இரண்டு விஷயங்களுமே சரிதானா என்ற சந்தேகம் உள்ள நிலையில் அந்தக் கட்டுரை கட்டியெழுப்பும் கருத்துக்கள் ஆட்டம் காணுகின்றன.

ஒருவரின் மரணத்தின் போது அவரது நல்லதை மட்டுமே பேசுவது நம் மரபு. ஆனால் நாமாகவே நல்லதை அவர் மேல் கட்டி வைக்கத் தேவையில்லை. இதை புரிந்து கொண்டாலே போதும். இதுவே இக் கட்டுரையின் நோக்கமும் கூட. இந்த நேரத்தில் இதை எழுத நேர்ந்ததும் ஹிந்து நண்பர்கள் இதைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக மட்டுமே.

கல்வெட்டாய்வாளர் ராமசந்திரன் அவர்கள் தரும் ஒரு குறிப்பு: மயிலை சமஸ்கிருதக்கல்லூரிக்கு எதிரிலுள்ள திருவள்ளுவர் சிலை1966ஆம் ஆண்டில் முதலமைச்சர் பக்தவத்சலம்,குடியரசுத்தலைவர் இராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நிறுவப்பட்டது. வைகாசி அனுட நாள் திருவள்ளுவர் திருநாள் என அறிவித்து(அருகிலுள்ள திருவள்ளுவர் கோயிலில்600 ஆண்டுகளாகப்பின்பற்றப்படும் நாள் என்பதால்) அரசாணை வெளியிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கி நிறுவப்பட்டசிலை. கடற்கரையில் நின்ற வண்ணம் உள்ளசிலை1968ஆம் ஆண்டில் சிவாஜிகணேசனை மாதிரியாக வைத்து உலகத்தமிழ் ஆய்வுமாநாட்டையொட்டி அண்ணாவால் நிறுவப்பட்டது. வள்ளுவர்கோட்டத்திலுள்ளசிலை கருணாநிதியாரின் ஆலோசனைப்படி அமைக்கப்பட்டதென எண்ணுகிறேன்.

Share

Comments Closed