வந்தார்கள் வென்றார்கள்

சின்ன வயதில் அதாவது 21 வயதில்! நான் விரும்பி வாசித்த முதல் அ-புனைவு புத்தகம் வந்தார்கள் வென்றார்கள் என நினைக்கிறேன். அதற்கு முன்பெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில புத்தகங்களை வாசித்திருக்கிறேன். திருநெல்வேலி டவுன் நூலகத்தில் ஹிட்லர் வாழ்க்கை வரலாறு வாசித்தேன். அதிலுள்ள படங்கள் ரொம்பவும் பிடித்துப்போய் அவற்றை மட்டும் கிழித்து எடுத்து வைத்துக்கொண்டேன். சில மாந்திரிகப் புத்தகங்களைப் படித்து பயந்து போய் இருந்ததும் நினைவுக்கு வருகிறது. கட்டை விரலை சூரியன் முன்னர் காண்பித்து சூரியனுடன் கட்டைவிரலைப் பார்த்து கண்ணை மூடினால் கட்டை விரல் நிழல் கண்ணுக்குள் தெரியும் விதத்தில் உங்கள் மரணத்தை நிர்ணயிக்கலாம் என்ற ரீதியில் என்னவோ படித்து சூரியனைப் பார்த்து கண்ணை மூடி சட்டெனத் திறந்து – நினைத்தாலே சிரிப்பாக வருகிறது.
 
பாடங்கள் படிக்கும் காலத்தில் ஒரு புத்தகத்தைக்கூடப் படிக்க விடமாட்டார்கள் வீட்டில். ஆனந்தவிகடன் குமுதம் என்று எதுவும் படிக்கக்கூடாது. பின்னர்தானே நாவலெல்லாம். 6ம் வகுப்பு அல்லது ஏழாம் வகுப்பு விடுமுறையில் சில புத்தகங்கள் வாசித்தேன். கே.பாலசந்திரின் மூன்று முடிச்சு நாவல், சாண்டில்யனின் ஒரே சமூக நாவல் (புயல் வீசிய இரவில்?) என்று சிலவற்றைப் படித்தேன். பள்ளி திறந்ததும் பாடப் புத்தகத்தைத் தவிர எதையும் தொடக்கூடாது. கல்லூரி செல்லவும் கொஞ்சம் தைரியமாக நிறைய வாசிக்க ஆரம்பித்தேன். அப்படியே நெல்லை நூலகம் வழி, பாலகுமாரனின் பல புத்தகங்கள் என்று விரிந்தது.
 
வேலை கிடைத்ததும் வந்தார்கள் வென்றார்கள் வாங்கினேன். மிரள வைத்த புத்தகம் அது. இத்தனை நாள் இப்புத்தகத்தைப் படிக்காமல் இருந்துவிட்டோமோ என்கிற எரிச்சல் ஒரு பக்கம். பள்ளியில் இதே முகலாயர்களை ஏன் இப்படி அறிமுகப்படுத்தவில்லை என்ற கடுப்பு இன்னொரு பக்கம். சரி, பாடப்புத்தகத்தில்தான் ஏமாற்றினார்கள் என்றால், ஒரு ஆசிரியர்கூடவா இவர்களைப் பற்றிய உண்மையான சித்திரத்தைச் சொல்லமாட்டார்கள் என்ற கோபம் ஒரு பக்கம்.
 
பள்ளிகளில் படிக்கும்போதே பாடப்புத்தகங்கள் நீங்கலாக மற்ற புத்தகங்களையும் மாணவர்களைப் படிக்கச் சொன்னால்தால் அவர்களது அறிவு துலங்கும். இல்லையென்றால் பாடங்களிலும் தேங்கவே செய்வார்கள். இதைப் பெரும்பாலான பெற்றோர்கள் புரிந்துகொள்வதே இல்லை.
 
என் மகன் படிக்கும் பள்ளியில் மிக நன்றாகச் சொல்லித் தருகிறார்கள். நான் என்னவெல்லாம் சொல்லித் தர நினைக்கிறேனோ அதை அவர்களே நடத்திவிடுகிறார்கள். பெரிய ஆச்சரியம் இது. தமிழ், அறிவியல், சமூக அறிவியல் என எல்லாப் பாடங்களையும் அவர்கள் நடத்தும் விதத்தைப் பெரிய அளவில் பாராட்டவேண்டும். 8ம் வகுப்பு பாடத்தில் முகலாயர்கள் பற்றிய பாடம் உள்ளது. நாங்கள் படிக்கும்போது எப்படி இருந்ததோ அதே போலத்தான் இப்போதும் இருக்கிறது. அக்பர், பாபர் போன்ற அரசர்களைப் பற்றி நல்ல விதமான எண்ணம் வரும்படியே புத்தகம் உள்ளது. மாணவர்களுக்கு இது போதும் என்று நினைத்திருக்கலாம். என்னைப் பொருத்தவரை, இந்தியாவின் மீது படையெடுத்த அனைத்து படையெடுப்புகளின் உண்மையான செயல்பாடுகளைக் கொஞ்சமாவது சொல்லவேண்டும் என்பதே. கோயில்கள் அழிப்பு, ஹிந்துக்கள் அழிப்பு போன்றவையெல்லாம் தேவையில்லை. அவை மாணவர்கள் மத்தியில் இந்நாளைய மனிதர்கள் மீது தேவையற்ற தவறான கருத்துகளைக் கொண்டு வரலாம். ஆனால் வெளிநாட்டுப் படையெடுப்பாளர்கள் கருணையானவர்கள், அக்பர், பாபர் எல்லாம் நல்லவர்கள் என்கிற பிம்பத்தைக் கொண்டுவராமல் இருந்திருக்கவேண்டும். இன்றும் இப்புத்தகங்கள் இச்செயலைச் செய்யவில்லை.
 
ஆனால் பள்ளியில் மிகத் தெளிவாகப் பாடத்தை நடத்தி இருக்கிறார்கள். முகலாயர்களுக்குள் இருந்த உள்நாட்டுச் சண்டைகள், அரச பதவிக்கான போட்டி, அதில் செய்யப்படும் கொலைகள் என எல்லாவற்றையும் மேலோட்டமாகச் சொல்லி இருக்கிறார்கள். அதே சமயம் மத விஷயங்களுக்குள் போகவில்லை. இது பெரிய விஷயம்.
 
என்னிடம் இருந்த ‘வந்தார்கள் வென்றார்கள்’ ஆடியோ சிடியை என் மகனிடம் கொடுத்துக் கேட்கச் சொன்னேன். நேற்று ஒரே நாளில் 3 மணி நேரம் கேட்டுவிட்டான். மொத்தம் 12 மணி நேரம். பொன்னியின் செல்வன் புத்தகத்தை முடித்ததும் இதைப் படிக்கச் சொல்ல நினைத்திருந்தேன். ஆனால் பள்ளியில் முகலாயர்கள் பாடம் வரும்போது இதைக் கேட்பது நல்லது என்பதால் இப்போதே கேட்கச் சொன்னேன். அதில் உள்ள பலவற்றை பள்ளியில் இருக்கும் சமூக அறிவியல் ஆசிரியர் சொன்னார் என்று சொல்லி இன்ப அதிர்ச்சி தந்தான்.
 
வந்தார்கள் வென்றார்கள் ஆடியோ அபிராமை அசைத்துப் பார்க்கிறது. எனக்கு ஏற்பட்ட அதே அனுபவம். கூடவே நான் சொன்னது – முகலாயர்கள் வேறு, இந்திய முஸ்லிம்கள் வேறு. (இந்த எண்ணத்தினால்தான் பாடத்திட்டமும் பெரும்பாலும் நல்லவற்றை மட்டுமே எழுதுகிறது என்பது புரிகிறது.) இதை அழுத்தம் திருத்தமாகச் சொன்னதன் காரணம், இப்போதே இந்தியர்கள் குறித்த வேற்றுமை கலந்த ஒற்றுமை அவன் மனத்தில் பதிய வேண்டும் என்பதாலும் நான் அதை உண்மையாக நம்புகிறேன் என்பதாலும். இவற்றையெல்லாம் விட, ஒரு குறிப்பிட்ட சமூகம் மீது மட்டும் திணிக்கப்படும் வெறுப்பைக் குறித்தும் அதன் அநியாயம் குறித்தும் இந்த திராவிடக் கட்சியின் ஆட்சி நடந்த/நடக்கும் நாட்டில் நான் இன்றுவரை உணர்ந்துகொண்டிருக்கிறேன் என்பதாலும்தான். எந்த ஒன்றையும் மீறி நம்மை இணைக்கவேண்டியது இந்தியன் என்கிற எண்ணமும் இந்தியா என்கிற கருத்தாக்கமும்தான். இதை இப்போதே விதைக்கவேண்டும். இதுவே சரியான நேரம்.
Share

Comments Closed