நான் காந்தி நிகேதன் பள்ளியில் (கல்லுப்பட்டி) படித்துக்கொண்டிருந்தபோது தினமும் பள்ளியைச் சுத்தம் செய்யவேண்டும். பள்ளி என்றால் வகுப்பறைகளை மட்டும் அல்ல, பள்ளியைச் சுற்றியுள்ள இடங்கள், மண் தரை எல்லாம். அங்கே நின்றிருக்கும் மரங்களில் இருந்து விழும் இலைகள், காக்கை எச்சம் என எல்லாவற்றையும் தினமும் சுத்தம் செய்யவேண்டும். அன்றெல்லாம் கடும் எரிச்சல் தந்த பணி அது. அந்தப் பள்ளியில் படித்ததற்காக ரொம்ப வருத்தமும் எரிச்சலும் பட்டேன். (இன்றும் பல்வேறு காரணங்களுக்காக அந்த நினைவு அப்படியே உள்ளது. நான் படித்ததிலேயே மிக மோசமான பள்ளி அதுதான்.) அப்போதெல்லாம் அக்காங்களும் ஐயாக்களும் (ஆசிரியர்களை இப்படித்தான் அழைக்கவேண்டும்) காந்தி எப்படி தன் வாழிடப் பகுதிகளைத் தானே சுத்தம் செய்தார், எப்படிக் கழிப்பறைகளையும் சுத்தம் செய்தார் என்றெல்லாம் விளக்கி, தங்கள் இடத்தைத் தாங்களே சுத்தம் செய்யவேண்டிய அவசியம் பற்றி விளக்கினார்கள். பள்ளி காந்தியத்தை பிரம்படியில் போதித்தது. சரியான உணவு இல்லாமல், மிகவும் ஏழ்மை நிலையில் மயங்கிச் சரியும் மாணவர்களைக் கொண்டு இந்த வேலைகளைச் செய்தது எப்பேர்ப்பட்ட அயோக்கியத்தனம் என்றே அன்று நினைத்தேன். வயது அப்போது 12 இருக்கலாம்.
பிற்பாடு, ஒரு மாணவன் தன் பள்ளியைச் சுத்தம் செய்வது அத்தனை பெரிய மோசமான காரியமில்லை என்ற எண்ணம் வந்தது. ஆனால் அந்தப் பள்ளியில் அத்தனை கெடுபிடியில் அதைச் செய்திருக்கக்கூடாது என்று இன்றும் தோன்றுகிறது.
இன்று இந்தச் செய்தியைப் பார்க்கிறேன். இனி பள்ளிகளில் இப்படிச் சுத்தம் செய்யச் சொன்னால் பெற்றோர்கள் சும்மா விடமாட்டார்கள் என்பது புரிகிறது. ஆசிரியர்களின் கைகளில் இருந்த பள்ளிகள் இன்று மாணவர்களின் கைகளில் உள்ளது. ஆசிரியர்களின் வேலை ஒழுங்காகப் படிப்பு மட்டும் சொல்லித் தருவது என்பதோடு சுருங்கிவிட்டது. அதற்கு மேல் கண்டித்தால் எந்த வடிவிலும் பிரச்சினைகள் எழலாம். ஆசிரியர்கள் கவனமாக இருப்பது நல்லது, அவசியமும் கூட.