சீக்ரெட் சூப்பர் ஸ்டார் (ஹிந்தி)
புல்லரிக்க வைக்கும் இன்னுமொரு ஹிந்தித் திரைப்படம். இந்தப் புல்லரிப்பு, காட்சிகள் தரும் உணர்ச்சிவசத்தால். முதல் காட்சியிலிருந்து இறுதிக்காட்சி வரை நாம் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலேதான் இருக்கவேண்டி இருக்கிறது. கொஞ்சம் பிசகினாலும் பேத்தல் என்று சொல்லிவிடும் ஒரு சூழலில்தான் ஒட்டுமொத்த படமும் நகர்கிறது. இறுதிக்காட்சி உணர்ச்சிகளின் மகுடம்.
இஸ்லாம் குடும்பம், நடுத்தர வர்க்கம், கண்டிப்பான கொடூரமான அப்பா. பெண்ணுக்கு பாடுவதில் ஆர்வம். பர்தா போட்டுக்கொண்டு யூ ட்யூப்பில் தனது வீடியோவை வெளியிட்டு, அதற்கான போட்டியில் பிரபலமாகிறாள். யார் அந்த ரகசிய சூப்பர் ஸ்டார் என்று பெரிய தேடல் நடக்கிறது. அமீர்கான் மிக அலட்டலான ஒரு இசையமைப்பாளர் – போட்டி நடுவராக வருகிறார். என்ன அலட்டல். அட்டகாசம். அவர் மூலம் ஒரே பாடலில் பிரபலாகும்போது தந்தையின் பிடிவாதத்தால் அனைத்தையும் மூட்டை கட்டிவிட்டு சவுதிக்குச் செல்லத் தயாராக இருக்கும் அப்பெண்ணின் அம்மா ஒரு முடிவெடுக்கிறாள். பர்தாவை விடுத்துப் பெண் மேடை ஏறுகிறாள். அம்மாவின் கண்ணீருடன் படம் நிறைவடைகிறது. அம்மாவாக நடிக்கும் பெண் ஒட்டுமொத்த படத்தையும் ஹை ஜாக் செய்கிறார். அமீர்கான் துணை நடிகராக வந்துபோகிறார். இவையெல்லாம் தமிழில் நிகழுமா என்பதைக் கேட்காமல் விடுகிறேன். தமிழில் செய்திருந்தாலும் வேறொரு வகையில் விக்கிரமன் படம் போலப் புல்லரிக்க வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
யூ டியூப்பில் முதன் முதலாக அந்தப் பெண் வலையேற்றும் பாடலும், முதன்முறையாகத் திரைப்படத்துக்குப் பாடும் அந்தப் பாடலும் நிஜமாகவே அட்டகாசம். இசை அமித் த்ரிவேதி.
மிக அட்டகாசமான தனித்துவமான படம் என்றெல்லாம் சொல்லமுடியாது. ஆனால் ஃபீல் குட் முவீ என்று தமிழில் எதை எதையோ சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஹிந்தியில் நிஜமான ஃபீல் குட் முவீ எடுத்துத் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள்.