அப்பா

அப்பா

அப்பாவின் 11வது ஆண்டு நினைவு நாள் (திதி) இன்று. கிருஷ்ண பக்ஷம் பால்குண மாதம் பிரதமை திதி. அப்பாவின் மரணம் எதிர்பார்த்திருந்த ஒன்றுதான். நிறைய நாளாகவே முடியாமல்தான் இருந்தார். சென்னையில் என்னுடன் இருந்தவர் வம்படியாக திருநெல்வேலிக்கு என் அண்ணா வீட்டுக்குப் போகவேண்டும் என்று சொல்லிவிட்டார். அவரை நெல்லைக்கு ட்ரைனில் அழைத்துக் கொண்டு சென்றபோதே ரொம்பவும் பலகீனமாகவே இருந்தார். முகமே களையின்றித்தான் இருந்தது. அழைத்துச் சென்ற ஒரு மாதத்தில் வைகுண்ட பிராப்தி அடைந்தார். அப்பாவின் மரணம் எனக்குப் பெரிய வேதனையைத் தரும் விஷயமாக இருந்தது. இன்னொரு பக்கம் விடுதலையாகவும் இருந்தது. அப்பாவின் சிகிச்சைக்கு அளவுக்கு மீறிப் பணம் செலவழித்திருந்தோம். இனியும் தாங்கமுடியுமா என்ற கேள்வி வந்தது. படுத்த படுக்கையாகிவிட்டால் யார் எப்படி கவனித்துக்கொள்வது என்று யோசனை செய்யத் தொடங்கி இருந்தோம். எத்தனை நாள் இப்படி சமாளிக்கமுடியும் என்று யோசிக்கத் துவங்கிய இரண்டாம் நாளில் அப்பா இறைவனடி சேர்ந்துவிட்டார் யாருக்கும் எக்குழப்பத்தையும் வைக்காமல்.

அப்பா ரொம்ப குழந்தை மனம் கொண்டவர். அப்பாவி. யாரும் அவரை ஒரு நொடியில் ஏமாற்றிவிடலாம். அசட்டுக் கோபம் கொள்பவர். கோபம் கொண்டு எதாவது சொல்லிவிட்டு, திட்டு வாங்கியவர் வருத்தப்படுவதைவிட நூறு மடங்கு அதிகம் வருத்தப்படுபவர். அம்மாவின் சொல்லை மீறி எதையும் செய்யத் தெரியாதவர். தாத்தா முன் நின்று பேசவே அப்பாவுக்கு 60 வயது தேவைப்பட்டது. குடும்பத்தில் உள்ள எல்லோர் மீதும் பாசமாக இருப்பவர். அப்பாவுக்கு ஊர் உலகத்தில் உள்ள எல்லோரும் நல்லவர்கள் மட்டுமே.

கடைசி காலத்தில் என்னுடன் இருந்த நேரத்தில் நான் அவருடன் ஓவராக விளையாடிக்கொண்டிருப்பேன். எல்லாவற்றையும் சிரித்துக்கொண்டும் பொறுத்துக்கொண்டும் இருந்தார். குழந்தைகள் என்றால் ரொம்ப பிரியம். அண்ணாவின் இரண்டாவது மகனுக்கு அரவிந்த் வாசன் என்று பெயர். அதில் உள்ள வாசன், என் அப்பாவின் நினைவாக அவனுக்கு வைக்கப்பட்டது. இதனால் அரவிந்த் மேல் கொஞ்சம் அதிகப் பாசம்.

என் சின்ன வயதில் அப்பாவுக்குத் தெரியாமல் அப்பா சேமித்து வைத்திருந்த டப்பாவில் இருந்து காசை எடுத்துக்கொண்டு போய் கல்லூர்ப் பிள்ளை கடையில் சாப்பிடுவேன். அந்த ரோஸ் நிற டப்பாவில் ஐந்து ரூபாய் காயின்களாகப் போட்டு வைத்திருப்பார். அந்த டப்பாவைத் தூக்கக்கூட முடியாது. அதிலிருந்து பத்து ரூபாய் எடுத்துக்கொண்டு போய் பூரி வடை என சாப்பிட்டுவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டுக்கு வந்துவிடுவேன். கடையின் முதலாளி என்னிடம், ‘இது மாதிரி நிறைய காயின் வெச்சிருக்கியா’ என்று கேட்டபோது சுதாரித்துக்கொண்டு, பத்து ரூபாயைத் திருடி அதைப் பணமாக மாற்றி மீண்டும் அக்கடைக்கு வந்து சாப்பிட ஆரம்பித்தேன். ஒருநாள் தற்செயலாக அப்பா சிரித்துக்கொண்டே, ‘நீ காயின் எடுக்கறன்னு எனக்குத் தெரியாதா என்ன’ என்றார். எனக்கு பக்கென்றிருந்தது. அத்தனை ஏமாளி இல்லை போல என்பதைவிட, ரொம்ப விவரமானவர் என்ற எண்ணமும், அவன் எடுத்துக்கட்டும் என்ற எண்ணமும் இருப்பது அதிகம் நெகிழச் செய்தது. இது தெரியவும் இனி பணமே எடுக்கக்கூடாது – என்று சினிமா ரேஞ்சில் எல்லாம் யோசிக்காமல் பதினைந்து ரூபாயாக எடுக்க ஆரம்பித்தேன் – குற்ற உணர்வில்லாமல். (என் அக்கா ஒரு தடவை ஐந்து ரூபாயை மட்டும் திருடி மாட்டிக்கொண்டு செமயாக அடி வாங்கினார், அவர் திருடத் தேர்ந்தெடுத்ததும் சரியாக என் அப்பாவைத்தான். இதை இங்கே சொல்வது எப்போதுமே அப்பா திருடப்படுபவராக இருக்கிறார் என்பதற்காக மட்டுமே.)

அடிக்கடி என்னிடம் சொல்வார், ‘நீ சின்ன வயசுல நடு ராத்திரில அழுவ, அந்த நேரத்துல கடைக்குப் போய் நிப்பிள் வாங்கிட்டு வருவேன், இப்ப இதையெல்லாம் ஒனக்கு சொல்ல வேண்டி இருக்கு’ என்பார். ஏன் முதல்லயே நிப்பிளை தயாரா வெச்சிக்கலை, ஒரு குழந்தை அழும்னு உனக்கு தெரிய வேண்டாமா என்று கேட்டுவிட்டுப் போய்விடுவேன். 🙂 ஆனாலும் என் நினைவில் அப்பா நிப்பிள் வாங்க இரவில் கடைக்குச் செல்வது ஒரு காட்சி போலவே பதிந்துவிட்டது. என் வீட்டில் அத்தனை பேரும் இதைச் சொல்வார்கள்.

அப்பா அவரது சின்ன வயசில் ரொம்ப நோஞ்சானாக இருந்தார் என்பார்கள். பால கண்டம் என்று என்னவோ சொன்னார்களாம். அதனால் அப்பாவை (அப்போது அவர் குழந்தை) படுக்க வைத்து அவரைச் சுற்றி ஏகப்பட்ட உணவு சமைத்து வைத்து எல்லாம் ஒனக்குத்தான் என்று சொல்லி ஒரு சடங்கு செய்ததாகச் சொல்வார்கள். அப்பா கடைசி காலம் வரையில் அதிகம் எதிர்ப்பு சக்தி இல்லாதவராகவே இருந்தார் என்பதே என் மனப்பதிவு.

அப்பாவுக்கு எதை எப்போது எப்படிப் பேசவேண்டும் என்று தெரியாது. சரியான வார்த்தைகளைச் சொல்லவும் தெரியாது. ஒருதடவை வளைகாப்பு வீட்டுக்குப் போய்விட்டு காப்பரிசியுடன் வந்தவர், வீட்டுக்கு வந்ததும் வளைகாப்பு வீட்டில் வாய்க்கரிசி கொடுத்தாங்க என்று சொல்லி வீட்டில் வாங்கிக் கட்டிக்கொண்டார். அனந்த விரதப் பண்டிகைக்குக் கயிறு கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சியைப் பற்றி என் தாத்தாவுக்கு இப்படி கடிதம் எழுதினார், “குடும்பத்துடன் அனைவரும் கயிறு மாட்டிக்கொண்டோம்’ என்று. பக்கத்து வீட்டு மாமி என்னவோ பேசவந்தவர், ‘பொழுதே போகலை வீட்டில்’ என்று சொன்னதற்கு என் அப்பா, ‘அப்ப குதிங்கோ’ என்றார். அந்த மாமிக்கு எப்படி ரீயாக்ட் செய்வதென்றே தெரியவில்லை. ஒரு தடவை என் அண்ணியிடம், ‘தலை வலிக்குது, கடுகை தேச்சிப் போடு’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அண்ணி எத்தனை தடவை சொல்லியும், இதை உரைச்சி போட முடியாதா என்று கேட்டுக்கொண்டே இருந்தார். கொஞ்சம் நேரம் கழித்துத்தான் பிடிபட்டது அவர் சுக்கை நினைத்துக்கொண்டு கடுகைச் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பது. (கன்னடத்தில் சார்சிவ என்றால் கடுகு, சுண்ட்டி என்றால் சுக்கு.) இப்படி பல நிகழ்ச்சிகள். இன்றும் வீட்டில் சொல்லிச் சொல்லிச் சிரிப்போம்.

அப்பாவுடன் பழகியவர்கள் அப்பாவை எப்படி மதித்தார்கள் என்பது குறித்த சந்தேகம் எனக்கு எப்போதும் உண்டு. ஆனால் இதை மீறி அப்பாவுடன் அன்பாகவே இருந்தார்கள். அப்பாவை எப்போதும் மட்டம் தட்டும் ஒரு கூட்டம் ஒன்றும் உண்டு. ஆனாலும் அப்பா அவர்கள் எல்லோரிடமும் அன்பாக இருந்தார். ஏனென்றால் அப்பாவுக்கு மற்றவரை மட்டம் தட்டத் தெரியாது. அன்பாக இருக்க மட்டுமே தெரியும். மற்றவர்கள் சொல்வதை நம்ப மட்டுமே தெரியும். ஏன் ஒருத்தன் பொய் சொல்லவேண்டும் என்று மட்டுமே யோசிக்கத் தெரியும். எல்லாம் இழந்து நின்ற போதுதான் நாம் ஏமாந்துவிட்டோம் என்று புரிந்துகொள்ளத் தெரியும். அதையும் விளக்கிச் சொல்ல அம்மா வேண்டும். இன்னும் நினைவிருக்கிறது, அப்பா நான்கு பேருடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம். அப்பாவைத் தவிர மற்றவர்கள் யாரென்று நினைவில்லை. எப்போதோ எடுத்த போட்டோ. அதில் அப்பா ஒரு ஓரத்தில் கீழே விழுந்துவிடும் வாக்கில் பாதி தொடையில் உட்கார்ந்திருப்பார். அப்போது அந்த சின்ன வயதிலேயே நான் யோசித்திருக்கிறேன், ஏன் அப்பாவுக்கு நல்ல இடம் கொடுத்து அவர்கள் புகைப்படம் எடுக்கவில்லை என. ஆனால் அந்த நான்குபேரில் அப்பாதான் அதிகம் சிரித்துக்கொண்டிருப்பார். அப்பா இப்படியே உருவானவர். இதனால் அவர் இழந்தது கொஞ்சம் பணமாக இருக்கலாம். ஆனால் அன்பில் அவர் வென்றார். இன்று என் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் அப்பாவின் மீது பெரிய மரியாதையும் அன்பும் இருக்கிறது. இதுதான் அப்பாவின் சொத்து.

கடைசியாக ஒரே ஒரு வார்த்தை, இத்தனை தூரம் நான் அப்பா அப்பா என்று சொன்னது, என் அப்பா, வளர்ப்பு அப்பா, சொந்தத்தில் பெரியப்பா. இந்த தியாகத்தை எந்நாளும் வார்த்தைகளில் விளக்கமுடியாது. ஒவ்வொரு விஷுவின் போதும் (வேப்பம்பூ பச்சடி சாப்பிடச் சொல்லி உயிரை எடுப்பார்) ஆடிப் பூரத்தின் போதும் (அன்றுதான் பிறந்த நாள்) அப்பாவின் நினைவு தானாக வரும். மறக்கமுடியாத மனிதர் என்பதில் எந்தப் பொருளும் இல்லை, மறக்கக்கூடாத மனிதர் என்பதே சரியானது.

Share

Comments Closed