அராத்து எழுதிய நூல் தற்கொலை குறுங்கதைகள். அராத்து ஃபேஸ்புக்கில் தொடர்ச்சியாக எழுதிய தற்கொலை குறுங்கதைகளின் தொகுப்பு. ஃபேஸ்புக்கில் இல்லாத கதைகளும் இப்போது வெளியாகி இருக்கும் தொகுப்பில் உள்ளன என்று நினைக்கிறேன்.
அராத்துவின் பிரேக் அப் குறுங்கதைகளே எனக்குப் பிடித்திருந்தது. தற்கொலை குறுங்கதைகளைவிட ஒரு படி மேல் என்பது என் எண்ணம். இரண்டாவது புத்தகம் என்பதால் ஏற்பட்ட அனுபவம், விழிப்பு காரணமாக இருக்கலாம். ஆனால் அராத்து இதை மறுக்கக்கூடும். எப்போதும் மனதில் தோன்றுவதை அப்படியே எழுதுவதே அவரது பாணி எனக்கூடும்.
தற்கொலை குறுங்கதைகள் நூலுக்கு சாரு நிவேதிதா எழுதியிருக்கும் முன்னுரை – வாய்ப்பே இல்லை. உயிர்மை வெளியீடாக தற்கொலை குறுங்கதைகள் வெளிவந்தபோது அந்த நூலுக்கு சாரு எழுதிய முன்னுரை, இத்தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. சில முன்னுரைகளை மறக்கவேமுடியாது. முன்பு இரா.முருகன் எழுதிய அக்கம்மாதேவி பற்றிய ஒரு முன்னுரை அத்தனை அட்டகாசமாக இருந்தது. இப்போதும் அதை நினைத்துக்கொள்கிறேன். சாருவின் இந்த முன்னுரை, புத்தகத்தை எங்கோ கொண்டு போகிறது. உண்மையைச் சொல்லவேண்டுமானால் புத்தகத்தை மீறி நிற்கிறது.
முன்பு மரத்தடி யாஹூ குழுமத்தில் கேள்வி பதில் நிகழ்வு நடந்தது. முதலில் பதில் சொல்ல ஒப்புக்கொண்டவர் ஜெயமோகன். கேள்விகள் எத்தரத்தில் இருந்தாலும் சரி, தன் பதிலின் மூலம் அக்கேள்வியை வேறொரு தளத்துக்குக் கொண்டு சென்றார் ஜெயமோகன். (இக்கேள்வி பதில்கள் எதிர்முகம் என்ற தொகுப்பாக தமிழினி வெளியீடாக வெளிவந்தது.)
முன்பு சுரேஷ் கண்ணன் பாலுமகேந்திராவின் அது ஒரு கனாக்காலம் படத்துக்கு விமர்சனம் எழுதும்போது இளையராஜாவின் இசைக்கு ஈடுகொடுக்கமுடியாமல் படம் தள்ளாடுகிறது என்ற ரீதியில் எழுதி இருந்தார். ஆனால் முதலில் படம்தான் எடுப்பார்கள், பின்னர்தான் இசையமைப்பார்கள் என்றொரு பஞ்சாயத்தை வைத்தேன்.
இந்த இரண்டுக்கும் தற்கொலை குறுங்கதைகளுக்கும் உள்ள தொடர்பு – சாரு எழுதியிருக்கும் முன்னுரை தற்கொலை குறுங்கதைகள் தொகுப்பை வேறொரு தளத்துக்குக் கொண்டு செல்கிறது.
தற்கொலை குறுங்கதைகள் தொகுப்பை (பிரேக் அப் குறுங்கதைகள் தொகுப்பையும்!) வாசிக்கும்போது யார் யாரை எப்போது எதை அவிழ்ப்பார்கள் என்ற அச்சத்துடன் படிக்கவேண்டி இருக்கிறது என்பது மட்டும் ஒரு எச்சரிக்கை. என்னைப் போன்ற அடிப்படைவாதிகள் மறந்தும் ஒதுங்கக்கூடாத புத்தகம் இது என்பதும் இன்னுமொரு எச்சரிக்கை! மற்றபடி சாருவின் முன்னுரைக்காகவாவது தற்கொலை குறுங்கதைகளை நிச்சயம் வாசிக்கவேண்டும்.