குற்றவாளிக் கூண்டில் மநு

குற்றவாளிக்கூண்டில் மநு?, எஸ். செண்பகப்பெருமாள், கிழக்கு பதிப்பகம்.

மிகச் சிறிய புத்தகம். மநுவின் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பின்புலமான மநு ஸ்மிருதிகளைப் பற்றி விளக்கும் நூல். இந்த நூல் சொல்லும் கருத்துகளை இப்படித் தொகுத்துக் கொள்கிறேன்.

* மொத்தம் ஏழு மநு ஸ்மிருதிகள் தொகுக்கப்பட்டுள்ளன. இப்போது இருக்கும் ஸ்மிருதி ஏழாவது மநு ஸ்மிருதி. விஸ்வேதேவர் தொகுத்தது இது.

* இந்த மநு ஸ்மிருதியில் பிரச்சினைக்குரியது ஒரே ஒரு அத்தியாயம் மட்டுமே. இந்த அத்தியாயம் பிரச்சினைக்குரிய ஆபத்துக்காலம் என்பதற்கு மட்டுமானதாகத் திருத்தம் செய்யப்பட்ட ஒன்று. அந்த ஆபத்துக்காலம் என்பது பௌத்த காலம்.

* ஆபத்துக் காலம் வரையில் சமூகம் வர்ணத்தால் மட்டுமே பிரிக்கப்பட்டிருந்தது. வர்ணம் பிறப்படிப்படையில் இல்லை. வர்ணத்தை மாற்றிக்கொள்ளமுடியும். அதை மாற்றி அறிவிக்க குழுக்கள் இருந்தன. இதன் அடிப்படையிலேயே மநு ஸ்மிருதி இருந்தது.

* ஆபத்துக்காலம் நீடித்தபடியால் வர்ணம் மெல்ல ஜாதியாகக் கெட்டிப்பட்டது. இதனால் பிறப்படிப்படையில் ஜாதிகள் நிர்ணயிக்கப்பட்டு, வர்ணத்துக்குச் சொல்லப்பட்டிருந்த மநுவின் சட்டங்கள் ஜாதிகளுக்கு என்றானது. இதுதான் பிரச்சினை.

* மநு ஸ்மிருதியின் ஒரே நோக்கம் சமூகத்தைக் காப்பதுதானே அன்றி பிராமணர்களைக் காப்பது அல்ல. அப்படியே பிராமணர்களுக்குச் சொல்லப்பட்டிருந்த விதிகளும் (ஆபத்துக்கால விதிகள் நீங்கலாக) வர்ணத்தின் அடிப்படையிலானவையே. (மநு பிராமணர்களைக் காக்க முனையவில்லை என்பதை கோவில்களில் யார் பூசாரியாக இருக்கவேண்டும் என்பதிலெல்லாம் மநு அக்கறை கொள்ளவில்லை என்பதைச் சொல்வதன்மூலம் விளக்கி இருக்கிறார் நூலாசிரியர்.)

* ஆபத்துக்காலத்தில் பிராமணர்களை சமூகத் தேவையின் பொருட்டுக் காப்பதற்காகவே சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

இப்படியாகத் தொகுத்துக் கொள்ளலாம். பத்தாம் அத்தியாயத்திலும் உள்ள சேர்க்கைகளையும் இந்நூல் சுட்டிக் காட்டுகிறது.

வர்ணம் எப்படி ஜாதியாகக் கெட்டிப்பட்டது என்பதை மிக விரிவாக விளக்கி இருக்கிறார் செண்பகப் பெருமாள். பல நிலைப்பாடுகளுக்கு அம்பேத்கரிடமிருந்து ஆதாரத்தைத் தருகிறார். அம்பேத்கரிடமிருந்து விலகும் புள்ளியையும் தெளிவாகச் சொல்கிறார் புத்தக ஆசிரியர்.

எங்கெல்லாம் மநுவின் அடிப்படைவாதக் கருத்துகள் வருகின்றனவோ அங்கெல்லாம் மிக சாமர்த்தியமாக, இணையான அல்லது அதைவிடக் கீழான அடிப்படைவாதக் கருத்துகளை பைபிளில் இருந்து சொல்லிக்காட்டிவிடுகிறார்.

பல அடிப்படைகளை விளக்கும் மிக முக்கியமான நூல்.

மநு ஸ்மிருதி நம் வரலாற்றில் எப்படி இருந்தது என்பதை அறியும் பொருட்டு மட்டும் எனக்கு முக்கியமான நூல். மற்றபடி இன்றையத் தேவைகளுக்கும் மநுவுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். புத்தக ஆசிரியரும் நம்புகிறார். இன்றைய தேதியில் நம்மைக் கட்டுப்படுத்தும் ஒரே சட்டம் இந்தியாவின் சட்டம் மட்டுமே. அதே சமயம் நம் வரலாற்றின் ஸ்மிருதிகள் எப்படி இருந்தன, நம் சமூக அமைப்பு எப்படி இருந்தது என்பதைத் தெரிந்துகொள்ள மிக முக்கியமான நூல் இது.

Share

Comments Closed