பார்பி (நாவல்), சரவணன் சந்திரன், கிழக்கு வெளியீடு, ரூ 150
நான் வாசிக்கும், சரவணன் சந்திரனின் இரண்டாவது நாவல். கிழக்கு பதிப்பக வெளியீடாக வெளியாகி இருக்கிறது.
கோவில்பட்டி/
பார்பி என்ற ஒரு பொம்மையைத் திருடி அதையே தன் நாவலின் உயிராக மாற்றிக்கொண்டுவிட்டு பின்னர் எந்த ஒன்றையும் அந்த பார்பியுடன் இணைத்துவிடுகிறார் சரவணன் சந்திரன். அதேபோல் மிக சாகவாசமாக நாவலின் நிகழ்வுகளையெல்லாம் பல இடங்களில் ஓடவிட்டு, இடை இடையே ஓடவிட்டு, நம் கவனம் கலையும் நேரத்தில் சட்டென இவரது கோச்களில் யாரேனும் ஒருவர் சொல்லும் கருத்தைக் கொண்டு மைதானத்தில் பிணைத்துவிடுகிறார். இந்த நிகழ்வுகளில்தான் சாதிப் பிரச்சினை முதல் வட இந்திய தென்னிந்திய ஹாக்கி வீரர்களின் பிரிவுகள் வரை அனைத்தையும் விவரிக்கிறார்.
கோவில்பட்டி திருநெல்வேலியில் ஹாக்கி இந்த அளவு முக்கியத்துவம் பெற்றிருந்தது என்பதைப் படிக்க ஆச்சரியமாக இருந்தது. ஹாக்கி நட்சத்திர வீரர்களின் பெயர்கள் நாவலில் சொல்லப்படும்போது இன்றைய ஹாக்கியின் வீழ்ச்சியை உணரமுடிகிறது.
தன்னிலையில் செல்லும் நாவல் என்பதால் நாவல் முழுக்க சொல்லப்படும் நிகழ்ச்சிகளில் ஒரு உணர்வுபூர்வ பந்தம் இருப்பதை உணரமுடிகிறது. கூடவே எந்த ஒரு பெண்ணையும் அக்கா என்று அழைப்பதும் தன்னைப் பற்றிய பிம்பங்களை நாயகன் கதாபாத்திரம் உருவாக்குவதும் உடனேயே அதை உடைப்பதுமென கோல்போஸ்ட்டை வெகு வேகமாக முன்னேறுகிறார்.
ரோலக்ஸ் வாட்ச் நாவலுக்கும் இந்த நாவலுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம், ரோலக்ஸ் வாட்ச் நாவலில் பல கதை மாந்தர்களின் கதைகளுக்கிடையே ஒரு மைய இழை சரியாக உருவாகிவரவில்லை. பல இடங்களில் சென்றதால் நாவல் பல இழைகளின் தொகுப்புகளில் உருவாக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. பார்பியிலும் அப்படித்தான் என்றாலும் ஒருமை ஒன்று கைகூடி வந்திருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம், நாவலில் சொல்லப்படும் விஷயங்களில் இருக்கும் ஹாக்கி விளையாட்டு தொடர்பான புதுத்தன்மை மற்றும் ஒரு கதாபாத்திரத்தின் வழியாகவே மற்ற அனைவரும் நோக்கப்படும் விதம்.
இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கும் வறுமையும் உணவுக்கான அலைச்சலும் மிக முக்கியமானவை. எந்த ஒரு வறுமைக்காரனின் கொதிப்பும் இதுவாகவே இருக்கும்போது, அங்கிருந்து தொடங்கும் ஒரு விளையாட்டுக்காரரின் வெறி பல மடங்கு அதிகமானதாக இருக்கும். ஏனென்றால் அதற்கான தேவையும் அவசியமும் விளையாட்டுக்காரனுக்கு உள்ளது. இதை நாவல் முழுக்கப் பல இடங்களில் பார்க்கலாம்.
மிக எளிய நாவல். ஒருகட்டத்தில் பெண்ணுடல் மீதான தீரா வேட்கையும் அதற்குச் சமமான, மிடில் க்ளாஸ் வளர்ப்புக்கே உரிய தயக்கமும், மோகமுள் நாவலின் உச்சத்துக்குக் கொண்டு போகுமோ என நினைத்தேன். அப்படித்தான் ஆனது, கூடுதலாக இரண்டு அத்தியாங்களுன். இந்தக் கடைசி இரண்டு மிகச் சிறிய அத்தியாயங்கள் நாவலுக்கு ஓர் அழகியல்தன்மையைக் கொண்டுவருகிறது.
மொத்தத்தில் மிக எளிய அழகிய நாவல். இனி எழுதப் போகும் நாவலில் சரவணன் சந்திரன் மனதில் வைத்துக்கொள்ளவேண்டியது என்று ஒன்றைச் சொல்லவேண்டுமானால், முன்னுரையில் அரவிந்தன் சொன்னதைத்தான்.
ஹரன் பிரசன்னா
ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/