கமலின் தொடர் – இரண்டாவது வாரம்

கமற்றொடரின் இரண்டாவாது வாரம், கமல் தொடராக வந்திருக்கிறது. எந்த எடிட்டரோ உயிரைக் கொடுத்து உழைத்திருக்கிறார். மொழியில் ருத்ர தாண்டவம். அதுவும் புரியவும் செய்கிறது என்பது இன்னும் முக்கியம்.கமற்றொடரின் இரண்டாவாது வாரம், கமல் தொடராக வந்திருக்கிறது. எந்த எடிட்டரோ உயிரைக் கொடுத்து உழைத்திருக்கிறார். மொழியில் ருத்ர தாண்டவம். அதுவும் புரியவும் செய்கிறது என்பது இன்னும் முக்கியம்.

மிக நீண்ட கட்டுரை. ஆனந்த விகடனில் இத்தனை நீண்ட கட்டுரைகள் வருவது மகிழ்ச்சி.

ரஜினிக்கு பதில் சொல்வதாக ஆரம்பிக்கிறார் கமல். சாரு ஹாஸன் தன் பேட்டியிலேயே கமல் மற்றும் ரஜினியின் நட்பைப் பற்றிச் சொல்லி இருந்தார். மகிழ்வான விஷயம் அது. அதை கமலும் சொல்லி இருக்கிறார். ஆனால் கமல் ரஜினியின் கேள்விக்குச் சொல்லி இருக்கும் பதில், வழக்கான ஜல்லி.

இந்த வழக்கமான ஜல்லிகளோடு பல ஜல்லிகள் உள்ளன. முக்கியமாக “இந்து மதம் இந்த நாட்டைக் கெடுக்கும் அளவுக்கு மற்ற மதங்கள் கெடுப்பதில்லை.” கொஞ்சமாவது மனசாட்சி இருந்தால் இப்படி பேசத் தோன்றாது..

அடுத்து அண்ணாயிசம் பற்றி. அண்ணாயிசத்தைக் கிண்டல் செய்தவர்களில் சோவும் ஒருவர் என்கிறார் கமல். சொல்லிவிட்டு அண்ணாயிசத்தில் இருந்து ஒரு பாராவைத் தருகிறார். எம் எல் ஏ தன் பொறுப்புகளில் இருந்து வழுவும்போது அவரைத் திரும்ப அழைத்துக்கொள்ளும் வசதியைப் பற்றிய அண்ணாத்துரையின் ஜல்லி. அந்த ஜல்லியை விதந்தோதுகிறார் கமல். கொடுமை. கருணாநிதியும் ஜெயலலிதாவும் இந்திய அளவில் இவர்களைப் போன்ற அரசியல்வாதிகளும் இந்த சட்டத்தின் மூலம் என்னவெல்லாம் ஆட்டம் ஆடி இருப்பார்கள் என்று யோசித்தாலே போதும், இந்த ஜல்லியின் இன்னொரு முகத்தைப் புரிந்துகொள்ள. ஆனால் கமல் மிக விவரமாக (பேசுவதாக எண்ணிக்கொண்டு) அண்ணாயிசத்தை அடிப்படையாக வைத்து அதிமுகவினர் ஆட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்கிறார். ஆம், இப்படியாப்பட்ட பனைமரத்தில் அப்படியாப்பட்ட பசுவைக் கட்டிவிட்டார். சோ பற்றி ஒரு வரியில் சொல்லிவிட்டு, சோ சொன்னது தவறு என்கிற எண்ணத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் கமல். இந்த விஷயத்தில் சோ தவறாகப் போக வாய்ப்பே இல்லை.

பாஜகவின் கையாள் என்பதற்கு கமல் மறுப்பைச் சொல்லி இருக்கிறார். நாத்திகம் பேசுவதால் பத்து பைசா லாபம் உண்டா என்று கேட்கிறார் கமல். உலகில் அனைவருக்கும் தெரியும், இதில்தான் லாபம் என்று. கமலுக்கு மட்டும் தெரியவில்லை போலும். ஹிந்து மத எதிர்ப்பு, நாத்திகம், கம்யூனிஸ ஆதரவு, ஈவெரா ஆதரவு – இவை எல்லாம் ஒன்றாகப் போட்டுச் சமைத்த சாப்பாட்டுக்குத்தான் இன்று கிராக்கி. கமல் வசதியான பாதையிலேயே போய்க்கொண்டு இருக்கிறார். இந்த வசதிதான் இந்து மதத்தைப் போல் மற்ற மதங்கள் இந்தியாவைக் கெடுப்பதில்லை என்று சொல்ல வைக்கிறது. ஆனால் வெளியே மட்டும் இதனால் லாபமில்லை என்று சொல்லிக்கொள்கிறார் கமல். இந்தப் பயணம் எத்தனை தூரம் போகிறதென்று பார்ப்போம்.

Share

Comments Closed