ப்ரவீண் – ஹிந்தி

என் மகன் அபிராம் ப்ரவீன் தேர்ச்சி பெற்றுவிட்டான் என்று பதிவிட்டதில் சில நண்பர்கள், இதனால் என்ன பயன் என்றும் இது ஒரு மாணவனுக்கு அதீத அழுத்தத்தை ஏற்படுத்தாதா என்றும் கேட்டிருந்தார்கள். இது தொடர்பான என் எண்ணங்கள் இங்கே:
 
01. ஹிந்தியைத் தனியே படிப்பது என்பது அவசியத் தேவை அல்ல. தமிழும் ஆங்கிலமுமே முழுமுதல் அவசியத் தேவை. இதைத் தாண்டி ஹிந்தி படிப்பது என்பது, ஒரு மாணவனின் திறமையைப் பொருத்தது. இது அவனுக்கு எந்த வகையிலும் எவ்வித அழுத்தத்தையும் தரமுடியாது என்ற நிலையில் மட்டும் ஹிந்தி படித்தால் போதும்.
 
02. பள்ளிகளில் தமிழைக் கைவிட்டுவிட்டு ஹிந்தியைப் படிப்பது அநியாயம், அக்கிரமம்.
 
03. தனியாக ஹிந்தி படித்து தேர்வு எழுதி வெற்றி பெறுவது மிகப்பெரிய பலனை நிச்சயம் தராது. இதனால் ஹிந்தியைப் பேசவோ தடையின்றி வாசிக்கவோ முடியவே முடியாது. அப்படியானால் இப்படி படித்து ப்ரவீண் வெல்வது தரக்கூடிய பயன்கள்தான் என்ன? என் நோக்கில், ஒன்று இது மற்ற மொழி மீதான வெறுப்பை முதலில் தகர்க்கிறது. அதுவும் தமிழ்நாட்டில் ஹிந்தி மீது ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் வெறுப்பு கொஞ்சம் நஞ்சமல்ல. அது இதனால் மாறும். இரண்டு, எந்த ஒரு கூடுதல் மொழியைக் கற்க முடிந்தாலும் அது நல்லதே. அது ஹிந்தியாக இருக்கும்பட்சத்தில், பின்னாளில் அதிகம் உதவலாம். சுத்தமாக ஹிந்தியே தெரியாமல், ஹிந்தி பேசும் மாநிலங்களுக்குச் சென்று சமாளிப்பதைவிட இந்த ஹிந்தியைத் தெரிந்துகொண்டு சமாளிப்பது கொஞ்சம் கொஞ்சமேகொஞ்சம் சுலபம். ஒப்பீட்டளவில் சீக்கிரமே ஹிந்தி பேச வரலாம். மூன்று, ஹிந்தி வார்த்தைகள் பல நம் வசமாகும். பின்னாளில் ஹிந்தி பேசத் தேவை ஏற்பட்டுப் பேசத் தொடங்கும்போது இந்த அடிப்படை பெரிய அளவில் உதவும். இவற்றைத் தவிர பெரிய பலன்கள் இல்லை. (ஒரு மொழியைப் பேச மட்டும் செய்யவேண்டும் என்றால், நீங்கள் அந்த சூழலில் இருந்தாலே போதும். தேவை உங்களைப் பேச வைக்கும். ஆனால் எழுதப்படிக்க நீங்கள் உழைத்தே ஆகவேண்டும்.)
 
04. மாணவர்களுக்கு அதீத அழுத்தத்தைக் கொடுக்கிறோமா என்றால், ஓரளவுக்கு அது உண்மை என்றே சொல்லவேண்டும். ஏற்கெனவே பள்ளிகளில் தரப்படும் வீட்டுப்பாடத் தொல்லைகள், ஆக்டிவிட்டி, அசைன்மெண்ட். இந்த நெருக்கடியில் ஒரு மாணவன் மனம்விட்டுப் பேச சிரிக்க விளையாட ஏகப்பட்ட தடைகள். இதற்கிடையில், ஹிந்தி தனிப்பயிற்சி ஒரு கூடுதல் சுமைதான். அதுவும் எப்படியாவது தன் பிள்ளை ஹிந்தி படித்துவிடவேண்டும் என்று, தன் பிள்ளையின் தகுதியைப் புரிந்துகொள்ளாது கொடுமைக்குள்ளாக்கும் பெற்றோர்களே இங்கே அதிகம். இதை வைத்துப் பார்த்தால் ஹிந்தி தரும் அழுத்தம் அதிகமானதுதான். (தனிப்பட்ட முறையில் நான் அபிராமைப் படிக்க வைத்தது மூன்று காரணங்களுக்காக. ஒன்று, வீட்டிலேயே ஹிந்தி ஆசிரியை. இரண்டு, நான் முதலில் அபிராமைப் பள்ளிக்குச் சேர்க்கும்போதே, எவ்வித கெடுபிடியும் இல்லாத, வீட்டுப்பாடம் அதிகம் தராத, மதிப்பெண் அதிகம் வாங்கவில்லை என்றாலும் தொல்லை தராத, சனி மற்றும் ஞாயிறு நிச்சயம் விடுமுறை அளிக்கக்கூடிய பள்ளியாக இருக்கவேண்டும் என்று நினைத்தே சேர்த்தேன். எனவே அபிராமுக்கு அதிக அழுத்தம் எப்போதும் இல்லை. மூன்று, அபிராம் இயல்பிலேயே கொஞ்சம் கெட்டி. எனவே இதைப் படித்துவிடுவான் என்று உறுதியாகத் தெரியும். இத்தனைக்கும் மீறி, ஹிந்தி படிக்கும்போது அபிராமின் மற்ற தேடல்கள் நிச்சயம் குறைந்தன என்பதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். உண்மையில் அபிராம் ஹிந்தி படிப்பதில் தொடக்கத்தில் இருந்தே எனக்கு அத்தனை விருப்பமில்லை. இன்று மகிழ்ச்சி என்பது வேறு விஷயம்.)
 
05. இப்படித் தனியாக ஹிந்தியைப் படித்துவிட்டு, கொஞ்சம் விட்டுவிட்டால், இதைப் படித்ததற்கான பலனே இல்லாமல் போய்விடும். பலர் இப்போதும், ‘நான் அந்தக் காலத்திலேயே ராஷ்ட்ரபாஷா’ என்று சொல்வதைப் பார்க்கலாம். ஆனால் ஒன்றும் அவர்களுக்கு நினைவிருக்காது. எனவே தொடர்ச்சியான செயல்பாடு இல்லையென்றால், இதை எத்தனை படித்தாலும் வேஸ்ட் என்பது உண்மைதான்.
 
06. எந்த ஒரு படிப்பும் வேஸ்ட் அல்ல என்பது உண்மைதான். ஆனால் இப்படிச் சொல்லும்போதே அதன் முக்கியத்துவம் நமக்குத் தெரிந்துவிடுகிறது. ஏன் படிக்கிறோம், எதற்காகப் படிக்கிறோம், யாரால் முடியும் முடியாது என்றெல்லாம் தெரிந்து படித்தால் மட்டுமே ஹிந்தி (எதுவாக இருந்தாலும்) நமக்கு நல்லது. இல்லையென்றால், இது ஜஸ்ட் இன்னுமொரு சான்றிதழ் மட்டுமே.
Share

Comments Closed