அநாதியின் நெருப்பு
ஆதிமலரின்
ஆதிக்கும் ஆதி மலரின்
வாசம் கமழத் தொடங்கி இருந்தபோது
அநாதியின் நெஞ்சுத்தீ
வேகெடுக்கத் தொடங்கி இருந்தது
முதலுக்கும் முதலான சங்கு ஒன்றின் இசையில்
பெயரில்லா மூப்பனின் நடனத்தில்
சங்குகள் முழங்கத் தொடங்க
இசை பேரோசை ஆகியது
பிரபஞ்சமெங்கும் பேரோசை
யாராலும் நிறுத்த இயலாத
எவரையும் உள்ளிழுத்துப் பெருகும்
பெரும் நெருப்பு
அநாதியின் மூச்சுக்காற்று
இப்போதும் சுற்றிச் சுழல்கிறது
மாயத்தின் புதிர்கள் அவிழும்போது
எப்போதும்போல் புலர்கிறது ஒரு காலை
ஒரு பெண்ணென ஒரு ஆணென.