சசிகலாவைப் பற்றிய மீம்ஸ்கள்

சசிகலாவைப் பற்றிய மிகத் தரக்குறைவான மீம்ஸ்களும் இடுகைகளும் வந்துகொண்டே இருக்கின்றன. அனைத்திலும் உள்ள அடிநாதம், அவர் வேலைக்காரி என்பதுதான். சசிகலாவை எதிர்க்க எத்தனையோ காரணங்கள் உள்ளன. வீட்டு வேலை செய்தவர் என்ற காரணம்தான் சிலருக்கு முக்கியத்துவம் பெறுகிறது. வீட்டு வேலை செய்வது இழிசெயல் அல்ல. வேலைக்காரி என்ற சொல்லில்கூட ஒரு இழிதொனி உள்ளது. சசிகலா எவ்வித ஊழலும் செய்யாதவராக இருந்து அவர் முதல்வராகும் வாய்ப்பும் வந்திருந்தால், வீட்டு வேலை செய்தவர் முதல்வராக முடியும் என்பது பெருமைக்குரியதே. ஒவ்வொருமுறையும் அவரை வேலைக்காரி என்று இழித்துரைப்பதன்மூலம் தங்கள் ஆதிக்கத் திமிரையே ஒவ்வொருவரும் பதிவு செய்கிறார்கள். ஒருவகையில் எல்லாருமே யாருக்கோ வேலைக்காரர்கள்தான். நடிகர் நாடாள்வது, வீட்டு வேலை செய்பவர் நாடாள்வது போன்ற எல்லா விவாதங்களையும் ஒற்றைப் புள்ளியில் குறுக்கி இகழ்வதால் நாம் நம்மை வெளிப்படுத்திக்கொள்கிறோம் என்பது மட்டும்தான் உண்மை.
 
அதேபோல் சசிகலா ஜெயலலிதாவைத் திட்டமிட்டுக் கொன்றுவிட்டார் என்பது. இதை நான் சிறிதளவு கூட நம்பவில்லை. ஏன் புகைப்படங்கள் எடுக்கப்படவில்லை, ஏன் வீடியோ இல்லை என்பதெல்லாம் ஏற்புடைய கேள்விகள்தான். ஆனால் அதன் பின்னணியில் இருப்பது நிச்சயம் கொலை எண்ணம் அல்ல என்றே நம்புகிறேன். சசிகலாவின் ஆனந்தவிகடன் பேட்டி இதைத் தெளிவாக்கி இருக்கிறது. இதே காரணங்களையே நானும் நினைத்தேன். தன்புகைப்படம் எப்படி வரவேண்டும் என்பதில் ஜெயலலிதா மிகக் கறாராக இருந்தவர். தன்னை இந்நிலையில் யாரும் சந்திக்கக்கூடாது என்பதில் ஜெயலலிதா உறுதியாக இருந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம். ஆளுநர் கூடவா என்ற கேள்வியெல்லாம் ஜெயலலிதாவின் முன் எடுபடவே எடுபடாது. பிரதமரே அழைத்த போதும் தொலைபேசியில் அவர் பேச மறுத்த ஒரு சம்பவம் முன்பு நடந்த நினைவு. கூடவே, எல்லாவற்றையும் தன் பிடிக்குள் வைத்துக்கொள்ளும் சசிகலாவின் மனோபாவமும் சேர்ந்துகொண்டிருக்கலாம். ஜெயலலிதா உயிருடன் வந்துவிட்டால் இத்தனை கேள்விகளும் ஒரே நொடியில் காணாமல் போய்விடும் என்று நம்பி இருக்கவும் வாய்ப்புகள் அதிகம். இவற்றுக்குத்தான் அதிக வாய்ப்புகள் உள்ளன.
 
இப்போதெல்லாம் சாதாரணமாக எந்த முக்கியஸ்தராவது மரணமடைந்தாலும் கூட அதில் சந்தேகங்களைக் கிளப்புவது வாட்ஸப்/ஃபேஸ்புக் ஃபேஷனாகி வருகிறது. எப்போதும் எதிலும் ஏதோ ஒரு த்ரில்லரை எதிர்பார்த்துக்கொண்டே இருக்கும் நாம் இதனை உடனே நம்பத் தலைப்படுகிறோம். உண்மையில் எதாவது சந்தேகங்களை நம்பும் மாதிரி யாராவது கேட்டுவிடமாட்டார்களா என்று துடிக்கிறோம். இதன் நீட்சியே இது.
 
எந்த ஒன்றையும் அதீதமாக்கி அதன் மேல் வெறுப்பு வரவைப்பதே நம் வழக்கம். வாட்ஸப்பும் ஃபேஸ்புக்கும் இதை இன்னும் தீவிரமாக்கி இருக்கிறது. எது கையில் கிடைத்தாலும் அதை உடனே லட்சம் பேருக்கு அனுப்பும் மனநோய் எல்லோரையும் ஒளிவேகத்தில் பீடித்துக்கொண்டிருக்கிறது. இன்று அனுப்பும் நீங்கள் நாளையே உங்களைப் பற்றி இப்படி ஒரு செய்தியைப் பெறலாம். அன்றும் இதே போல் சிரித்துக் கடக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
Share

Comments Closed