சுப்ரமணியம் சுவாமியின் சட்ட (சசிகலா) ஆதரவு

எல்லாரும் சுப்ரமணியம் சுவாமி சட்டத்துக்காகத்தான் பேசுகிறார் என்றனர். என் நண்பர் எனக்குச் சொன்ன தகவலை வைத்து, சுவாமி வெளிப்படையாகவே சசிகலாவை ஆதரித்துவிட்டார் என்று நானாகவே தவறாகப் புரிந்துகொண்டுவிட்டேன். சில நண்பர்கள் அப்படி இல்லை என்று சுட்டிக் காட்டியதும்தான் புரிந்தது. ஆனாலும் உள்ளே ஒரு சந்தேகம். இன்னும்.
 
* ஏன் சட்டம் தன் கடமையைச் செய்ய இம்முறை சுவாமி அதிகமாக மெனக்கெடுகிறார்?
 
* சட்டம் கொஞ்சம் தாமதமாகச் செயல்படுவதால் என்ன பெரிய கேடு வந்துவிடப்போகிறது? சசிகலா முதல்வராகப் போவது தள்ளிப் போனால் நல்லதுதானே?
 
* இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வரப்போகிறது என்று உச்ச நீதி மன்றம் சொல்லி இருக்கும்போது, சசிகலா மீது வழக்கு தொடர்ந்தவரே ஏன் சட்டம் உடனே செயலாற்றவேண்டும் எனத் துடிக்கிறார்?
 
புரியவில்லை. சரி அமைதியாக இருக்கலாம், எப்படியும் இவ்விஷயம் வெளியே வரும் என நினைத்தேன்.
 
இன்றுவரை என்ன காரணம் என்பது புரியவில்லை என்றாலும், நிச்சயம் இதன் பின்னால் என்னவோ ஒரு மர்மம் உள்ளது. அது பாஜகவுக்கு நல்லது செய்வதாகவும் இருக்கலாம், அல்லது சுவாமிக்கு தனிப்பட்ட நலன் கிடைப்பதாகவும் இருக்கலாம். உறுதியாக இப்போது வரை தெரியவில்லை.
 
இந்தியா டுடே தொலைக்காட்சி விவாதத்தில், சசிகலா ஹிந்து பக்தி உடையவர் என்பதால் அவரை ஆதரிப்பதாக சுவாமி சொன்னதாகத் தெரிகிறது. இந்த காணொளியை நான் இன்னும் பார்க்கவில்லை. இது உண்மையென்றால், பன்னீர் செல்வமும் ஹிந்து பக்தி உடையவரே. ஏன் சசிகலாவுக்கு மட்டும் சுவாமி ஆதரவு தருகிறார் என்பது புரியவில்லை.
 
இப்போது இன்னும் ஒருபடி மேலே போய், சுவாமி ஆளுநரைச் சந்தித்திருக்கிறார். எங்கே ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு கூடிவிடுமோ, அதற்கு முன்பாக சசிகலாவை ஆளுநர் அழைத்துவிடவேணுமே என்ற பதற்றம் சுவாமிக்கு இருப்பதாக எனக்கு மட்டும்தான் தோன்றுகிறது என்று நினைக்கிறேன். என் சந்தேக புத்தி அப்படி.
 
இவர் பாஜகவில் சேர்ந்த நாள் முதலாகவே, மோதிக்கு தலைவலியாக இருப்பார் என்பதே என் கருத்தாக இருந்தது. இன்று வரை பெரிய குடைச்சல் இல்லை. காரணம், மோடியும் பாஜகவும் இவரை எந்த அளவுக்குப் பயன்படுத்தவேண்டும் என்பதில் தெளிவாக இருப்பதுதான். சுவாமி பாஜகவைப் பயன்படுத்துவதையும் கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்.
 
இதனால் சுவாமியின் ஊழலுக்கு எதிரான சாதனைகளை மறுக்கிறேன் என்று அர்த்தமல்ல. அது அசாதரணமான வெற்றி. ஊழலுக்கு எதிரான வெற்றிகளை முன்வைத்து சுவாமியை முழுமையாக நம்புகிறேன் என்பதுமல்ல. ஏனென்றால் சுவாமியின் வரலாறு அப்படி. இன்றைய நிலையில் சுவாமியின் நிலைப்பாட்டில் சந்தேகமே தொடர்கிறது.
Share

Comments Closed