ரஜினி அரசியலுக்கு வரப்போகிறார் என்றும் அதற்கு ஆலோசனை நடத்தினார் என்றும் தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது. ரஜினி வருவாரா மாட்டாரா என்பது தெரியவில்லை.
ரஜினி அரசியலுக்கு வர நினைத்தால், இதைவிட நல்ல தருணம் கிடைக்காது. 96ல் மிக எளிதாக முதல்வராகும் வாய்ப்பை வேண்டாம் என்று விட்டுவிட்டார். இப்போதுவரை அரசியலுக்கு வரும் எண்ணம் ரஜினிக்கு இல்லை என்றே நான் நினைக்கிறேன். சோ மறைவுக்கு ரஜினி எழுதிய சிறந்த அஞ்சலியில், 96 சமயத்தில் அரசியலுக்கு வராததற்குக் காரணம் சோ என்ற ரீதியில் ரஜினி எழுதி இருந்தார். அதை கொஞ்சம் யோசித்ததில், அப்போது அரசியலுக்கு வரும் எண்ணம் ரஜினிக்கு இருந்திருக்கும் என்பதாகவே நான் புரிந்துகொண்டேன். அந்த எண்ணத்த்தின் மிச்சம் மீதி இருக்குமானால், இந்த சமயத்தைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது.
ஜெயலலிதாவின் மறைவு, சசிகலா மீது மக்களுக்கு இருக்கும் ஒவ்வாமை, கருணாநிதியின் அரசியல் மௌனம், ஸ்டாலினின் உத்வேகமின்மை, மற்ற கட்சிகளின் மீது மக்களுக்கு இருக்கும் அவநம்பிக்கை எனப் பல வகைகளில் இது நல்ல சமயம். ஸ்டாலினின் வளர்ச்சி உறுதியானாலும் ஸ்டாலின் எதிர் ரஜினி என்று மாறவும் நல்ல வாய்ப்புள்ளது. அதிமுகவைப் பின்னுக்குத் தள்ளுவது இந்நிலையில் ஓரளவு எளிதானதுதான். ஓபிஎஸ் நல்ல பெயர் எடுக்குமுன் ரஜினி முடிவெடுக்கவேண்டும். இது ஒன்றுதான் இப்போதைக்கு இருக்கும் ஒரே நெருக்கடி.
ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்தால் எதிர்ப்பு மிகக் கடுமையாக இருக்கும். அந்த எதிர்ப்பின் உள்ளர்த்தம், அவருக்கு வெற்றி கிடைக்க சகல வாய்ப்புகளும் உள்ளது என்பதுதான். ஏனென்றால் அதிகம் எதிர்க்கப்பட்டவர்களே வென்றிருக்கிறார்கள். இவர்கள் ஒட்டுமொத்த அரசியலையும் ரஜினி எதிர் மற்றவர்கள் என்று மாற்றும் வல்லமை கொண்டவர்களாக இருப்பார்கள். இதன் மூலம் மிக எளிதாக வெற்றியை நோக்கிச் செல்ல முடியும்.
இத்தனையையும் மீறி ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்றே என் உள்ளுணர்வு சொல்கிறது. வந்தால் நிச்சயம் முதல்வராவார் என்றும் அதே உள்ளுணர்வு சொல்கிறது.
பின்குறிப்பு: போட்டி போடாமல் வரிசையாக என்னையும் ரஜினியையும் திட்டவும். அனைவருக்கும் திட்ட சமமான வாய்ப்பு வழங்கப்படும்.