ஜல்லிக்கட்டு மாணவர்கள் போராட்டம்

மாணவர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம் இதுவரை மிகவும் அமைதியாக நடந்துகொண்டிருப்பது நல்ல விஷயம்தான். பாராட்டப்படவேண்டியது. ஆனால் ஜல்லிக்கட்டுக்கு இந்தத் தொடர் போராட்டங்கள் எந்த அளவுக்கு உதவும் என்பது தெரியவில்லை. ஒட்டுமொத்தமாக உணர்வு ரீதியாக தங்கள் ஆதரவைத் தெரிவிக்க மாணவர்கள் ஒருநாள் போராட்டத்தையும் ஊர்வலத்தையும் நடத்தினால் அதைப் புரிந்துகொள்ளலாம். ஆனால் ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவு தரப்படும்வரை போராட்டம் என்பதெல்லாம் நடைமுறையில் சாத்தியமா என்று தெரியவில்லை. அரசியல்வாதிகள் நடத்தும் திடீர் தொடர் உண்ணாவிரதங்கள் போல இது தோற்றமளிக்கிறது. இதுவரை மாணவர்களின் போராட்டம் அமைதியாக எவ்விதப் பிரச்சினையும் இன்றி நடந்தாலும், இதில் சில விஷமிகள் கலந்துகொண்டு போராட்டத்தில் பிரச்சினைகளை உருவாக்கும் வாய்ப்பிருக்கிறது. அப்படி ஏதேனும் நடந்தால் அது மாணவர்கள் தலையில்தான் விடியும். எனவே மாணவர்கள் அமைப்புகள் மிகக் கவனத்துடன் இருக்கவேண்டியது அவசியம். இது தன்னெழுச்சியான போராட்டம் என்பதையெல்லாம் நம்பமுடியவில்லை. உள்ளடியாக நிச்சயம் சில அரசியல் நோக்கம் கொண்ட அமைப்புகள் இருந்தே ஆகவேண்டும். இப்படி இருப்பது தவறல்ல, இயல்பானதுதான். ஆனால் மாணவர்களின் முதல் வேலை படிப்பில் கவனம் செலுத்துவது. அரசியல் ஆர்வமும் அரசியல் பங்கெடுப்பும் இரண்டாவது வேலையாக இருக்கலாம். எனவே தொடர் போராட்டங்கள் எல்லாம் சரியானதுதானா என்ற கேள்வி இருந்துகொண்டே இருக்கிறது அரசியல்வாதிகள் தங்கள் தேவைக்கு மாணவர்களைப் பயன்படுத்திக் கொள்வது புதிதுமல்ல.

இதையெல்லாம் விட முக்கியமான விஷயம், 1967ல் மாணவர் போராட்டம் திமுகவை ஆட்சிக்குக் கொண்டு வந்தது. இந்த சம்பவத்திலிருந்தே, மாணவர்கள் போராட்டம் பெரிய பிரச்சினையை மட்டுமே கொண்டுவரும் என என் மனதில் பதிந்துவிட்டது. இதை மனதில் வைத்தாவது மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு, ஜல்லிக்கட்டுக்கு உணர்வு ரீதியாக தீவிரமான ஆதரவைத் தந்தது போதும் என்று முடிவெடுத்து படிப்புக்குத் திரும்பவேண்டும். நானெல்லாம் படிக்கும்போது ஒருநாள் விடுமுறை கிடைப்பதுதான் ஸ்ட்ரைக்கின் நோக்கம் என்ற புரிதலோடு கல்லூரியில் படித்தவன். இன்று மாணவர்கள் உணர்வோடு தொடர்போராட்டம் நடத்துவது பெரிய ஆச்சரியம் என்பதையும் சொல்லி வைக்கிறேன்.

இந்தப் போராட்டத்தின் பின்னணி தனித்தமிழ்நாடு என்பதுதான் முக்கியக் காரணமாக இருந்தால், போராட்டக்காரர்கள் ஏமாந்து போவார்கள் என்பதை மகிழ்ச்சியோடு சொல்லிக்கொள்கிறேன். ஃபேஸ்புக்கிலும் மாய ஊடகத்திலும் இருக்கும் தமிழகத்தில் மட்டுமே ஜல்லிக்கட்டு இத்தனை முக்கியமான விஷயமாக இருக்கிறது. ஊருக்குள் பெரும்பாலும் இதைப் பற்றிய பேச்சே இல்லை. எனவே தமிழ்நாட்டை மையமாக வைத்து இந்தியாவை எதிர்ப்பவர்கள் வேறு விஷயத்தைத் தேடுவது நல்லது. காவிரி நீர்ப் பிரச்சினை போன்ற மிக ஆதாரமான விஷயத்தில்கூட, வடிவேலு போல ‘லைட்டா வலிக்குது’ என்று தாண்டிப் போனவர்கள் நம் மக்கள். போராட்டம் நடப்பது இவர்களை நம்பியே என்பதுதான் வரமும் சாபமும்!

Share

Comments Closed