சுஜாதா (சிறுகதை)
சுஜாதா போர்வையை விலக்கிக் கண்களைக் கூசிக்கொண்டே பார்த்தபோது விடிந்திருந்தது. மெத்தையின் இன்னொரு ஓரத்தில் கலைந்து கிடந்த ஷ்யாமை மீண்டும் கட்டிக்கொண்டாள். இன்னும் அவன் உடம்பு சூடாக இருப்பதை நினைத்து வெட்கத்துடன் சிரித்துக்கொண்டாள்.
அவனை உலுப்பி, “இன்னும் எத்தன நாள் இப்படி?” என்றாள் சுஜாதா. திரும்பிப் படுத்தான் ஷ்யாம். வீட்டின் சுவர்களில் இருந்த பளபளப்பில் காலை நேரத்தில் கலைந்திருந்த உடையில் அவள் தேவதை போல் இருந்தாள். ஷ்யாமின் கண்கள் அவளை அளவெடுத்துக்கொண்டிருந்தன. “உன்னைத்தாண்டா கேட்கறேன்” என்றாள் சுஜாதா.
பதினாறு வயதுப் பெண்ணின் உடல் என்றால் அவளைப் பார்க்கும் யாரும் நம்பமாட்டார்கள். வாழ்க்கை முழுக்க வறுமையில் வளர்ந்த ஷ்யாமிடம், இப்படி இரவுகளில் செண்ட் மணக்க மணக்க ஒரு பெண் ‘நின்னு விளையாடுவா’ என்று யாராவது சொல்லி இருந்தால் சிரித்திருப்பான். தன் கையை அனிச்சையாய் முகர்ந்து பார்த்தான். சுஜாதாவின் வாசனை.
“போதும், கேட்டதுக்கு பதில் சொல்லுடா.”
அவளை இழுத்துத் தன் மேல் போட்டுக்கொண்டான். பஞ்சுப் பொதி போல இருந்தாள். “இல்ல. எனக்கு இப்ப 22 வயசுதான் ஆகுது. நீ ராணி மாதிரி வளர்ந்திருக்க. உன்னை இப்படி வெச்சு பார்த்துக்கறதெல்லாம் கனவுல கூட நடக்காது.”
“ஸ்டாப் இட் இடியட். இதையே எத்தனை தடவை சொல்லுவ. நைட்ல நீ சொல்றதை நான் கேக்கறேன். பகல்ல இனிமே நான் சொல்றதை நீ கேக்கற. இன்னைக்கு நைட் கோயம்பேட்ல எட்டு மணிக்கு ரெடியா இரு. பெங்களூரு போறோம். குட்பை சென்னை. குட்பை மம்மி டாடி. நம்ம உலகம். நம்ம வாழ்க்கை. நம்ம உடல்” என்று சொல்லிக் கண்ணடித்தவளின் உறுதி கண்டு ஷ்யாமுக்கு ஆச்சரியமாக இருந்தது. இவளுக்கு பயமே கிடையாதா? எப்படிச் சமாளிப்பாள்? இவளை எப்படிச் சமாளிக்கப் போகிறோம். பயம் வயிற்றில் சுழன்றது.
சுஜாதா ஷ்யாமின் கையைப் பிடித்தபோது கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்த காஃபி ஷாப்பில் மணி எட்டைக் காண்பித்தது. அவள் அவன் கையை இறுக்கப் பிடித்துக்கொண்டான். கை வியர்த்திருந்தது.
“பயப்படாதடா பொறுக்கி. எதுக்கு பயப்படணுமோ அதுல பயம் இல்லை. இப்ப என்ன” என்றாள். ஷ்யாம் மையமாகச் சிரித்தான்.
பெங்களூரு பஸ்ஸில் ஏறி உட்கார்ந்துகொண்டார்கள். ஷ்யாம் கையில் ஒன்றுமே கொண்டு வரவில்லை. எதுவும் கொண்டுவரக்கூடாது என்று சுஜாதா சொல்லி இருந்தாள். சுஜாதாவிடம் ஒரு ஹேண்ட் பேக்கும், ஒரு பெரிய சூட் கேஸும் இருந்தது. பக்கத்தில் இருந்த ஷ்யாம் கையைப் பிடித்து இழுத்து அந்தப் பெட்டியின் மேல் வைத்து, “இது சூட் கேஸ் இல்லை, சூட் கேஷ். 2 கோடி ஹாட் கேஷ். இனி கவலையே இல்லை” என்று ரகசியமாக அவன் காதில் மட்டும் விழுமாறு சொன்னாள். பின்னால் உட்கார்ந்திருந்த இன்னொரு ஜோடி இவர்களைக் கவனிக்காமல் தெருவில் ஓடிக்கொண்டிருந்த ஆங்கில செய்தி சானல் ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்தது.
“ரெண்டு கோடின்னா இந்தப் பெட்டிக்குள்ள அடங்கிடுமா?” என்று அப்பாவியாகக் கேட்ட ஷ்யாமின் கன்னங்களில் யாரும் அறியாமல் உரசிக்கொண்டே சிரித்தாள் சுஜாதா. “இந்த அப்பாவித்தனம்தாண்டா என்னை சாச்சிடுச்சு.”
தன் ஹேண்ட் பேக்கைத் திறந்து ஒரு ஸ்மார்ட் வாட்சை எடுத்து அவன் கைகளில் கட்டிவிட்டாள்.
“மறக்கமுடியாத இந்த நாளோட கிஃப்ட் ஒனக்கு. சோனி ப்ராண்ட். 40,000 ரூபாய். உன் கைல ஸோ க்யூட்.”
அவன் வாட்ச்சைப் பார்த்தான். November 8, Tuesday, 8.05 PM என்று காட்டிக்கொண்டிருந்தது.