மகேஷிண்டெ ப்ரதிகாரம் – நமஸ்காரம் அலியன்ஸ்

இத்திரைப்படம் ஒரு சாதாரணமான திரைப்படம். மிக மோசமான திரைப்படம் அல்ல. ஆனால் நிச்சயம் கொண்டாடத்தக்க ஒரு படமும் அல்ல. இன்று மலையாளத் திரைப்படங்களைப் பற்றிய அதி தீவிரமான பிம்பம் இங்கே உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் உண்மை உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இது மட்டுமே உண்மை அல்ல. எல்லா மலையாளத் திரைப்படங்களுமே கொண்டாடத்தக்கவை அல்ல. ஃபகத் ஃபாஸில் நடிக்க வந்தபிறகு கடந்த சில ஆண்டுகளில் வந்த படங்களில் அவரது பங்களிப்பு மிகவும் குறிப்பிடத் தகுந்ததுதான். மலையாளத்தின்  மிக முக்கியமான நடிகராக இன்னும் பரிமளிக்கப் போகும் வாய்ப்பு அவருக்குப் பிரகாசமாகவே உள்ளது. ஆனால் அவர் நடித்த எல்லாத் திரைப்படங்களையுமே ஆஹா ஓஹோ என்று கொண்டாடும் ஒரு வட்டம் இங்கே உருவாகியுள்ளது. மலையாளத் திரைப்படங்களைப் பற்றி எதாவது சொன்னால் அதை உளறல் என்றும், மலையாள ரத்தம் இல்லை என்றும் மலையாள ஹ்ருதயம் இல்லை என்றும் மலையாள உயிர் இல்லை என்றும் அதனால் மலையாளத் திரைப்படங்களைப் பற்றி எதுவும் எழுதவேண்டாம் என்று அன்பாகச் சொல்கிறார்கள். அன்பதனை எதிர்கொள்வோம்.

டைமண்ட் நெக்லஸ் என்றொரு படம் வந்தது. அதுவும் ரொம்ப சாதாரண படமே. ஆனால் ஆஹோ ஓஹோ என்று ஊதிப் பெருக்கப்பட்டது. சாப்ப குரிஷு (ചാപ്പാ കുരിശ്) என்றொரு படம் வந்தது. இது தமிழிலும் ரீமேக் செய்யபப்பட்டது. இதுவும் சாதாரண படமே அன்றிக் கொண்டாடத்தக்க ஒரு படம் அல்ல. இதையும் மலையாளத்தின் புதிய அலை வகைப்படம் என்றார்கள். ஒருவகையில் மலையாளத் திரைப்படங்களின் புதிய அலைத் திரைப்படங்களில் இந்தத் திரைப்படங்கள் அடங்கும் என்பது சரிதான். ஆனால் இவை கொண்டாடத்தக்க திரைப்படங்கள் அல்ல. அதாவது அன்னயும் ரசூலும், கம்மாட்டிபாடம் வகையில் இதை வைக்கமுடியாது.

ப்ரேமம் பெற்ற வெற்றிக்குப் பிறகு எப்போதாவது போகிற போக்கில் மலையாளப் படங்கள் பார்க்கிறவர்கள்கூட மலையாளப் படங்கள் என்றாலே புல்லரிக்கத் தொடங்கிவிட்டார்கள். சில வருடங்களுக்கு முன்பு ஒரு நண்பர் உதயனானு தாரம் படம் மலையாளத் திரைப்படங்களில் மிக முக்கியமானது என்று சிரிப்பு மூட்டினார். சீனிவாசன் திரைக்கதை எழுதினாலே இப்படிப் புகழவேண்டும் என்பது அப்போதையே தமிழ்நாட்டு ட்ரெண்டாக இருந்தது. அத்திரைப்படத்தை நான் அவருக்கு முன்பாகவே பார்த்திருந்தேன். அதுவும் ஒரு சாதாரண கமர்ஷியல் திரைப்படமே. ஆனால் இந்த நண்பர் பார்த்து புரிந்துவிட்ட முதல் மலையாளத் திரைப்படமாக அது இருந்திருக்கவேண்டும் என்பதால் அதைக் கொண்டாடத் துவங்கிவிட்டார் என்று நினைத்துக்கொண்டேன். நம் மொழியில் நாம் காணும் சப்பையான காட்சிகள் கூட பிறமொழிப் படங்களில் வந்து நமக்கே சொந்தமாகப் புரியும்போது அவை நல்ல காட்சிகளாகத் தோன்றிக் கண்ணைக் கட்டும். இந்தக் கண்கட்டலுடன் பார்த்தாலும் படம் நன்றாகவே தோன்றும். இன்னொரு வகை கண்கட்டல், மலையாளத் திரைப்படங்களைப் புகழ்ந்தே ஆகவேண்டும் என்னும் வகையான கண்கட்டல். மூன்றாம் வகை கண்கட்டல், தான் மட்டுமே மலையாளத் திரைப்படங்களின் அத்தாரிட்டு என்பது போல் பேசுவது. இந்த் மூன்றும்தான் மகேஷிண்டெ ப்ரதிகாரம் திரைப்படத்தைக் கொண்டாடுகின்றன.

இத்தனைக்கும் திரைப்படங்கள் பற்றிய மிக ஆழமான அறிவும் நல்ல சினிமா பற்றிய அக்கறையும் கொண்டவர்கள் அந்த நண்பர்கள். ஆனாலும் மலையாளத்தில் மட்டும் அவர்களுக்கு ஒரு சறுக்கல் நிகழ்ந்துவிடுகிறது. எனக்கு ரஜினி படங்களில் ஏற்படுவதைப் போல என்றும் இதைச் சொல்லலாம். 😀

மகேஷிண்டெ ப்ரதிகாரத்தின் பிரச்சினைகள் என்ன? ஒரு திரைப்படத்துக்குத் தேவையான வலுவான கதை அதில் இல்லை. தேவையான காட்சிகளைவிட தேவையற்ற காட்சிகள் பல இருக்கின்றன. இத்தேவையற்ற காட்சிகள் யாவும் படத்தின் மைய இழைக்குப் பொருந்தாமல் தனித்தனியே அலைபாய்கின்றன. சிலரின் செயற்கைத்தனமான நடிப்பு ஒரு பக்கம். இவற்றுக்கிடையில் மிக மெல்லிய ஒரு கதையைக் கொண்டு எவ்வித உச்சத்தையும் பார்வையாளனுக்கு அளிக்காமல் சப்பென முடிகிறது இத்திரைப்படம்.

திரைப்படத்துக்கு வலுவான கதை என்பது அடிப்படைத் தேவை அல்ல. ஒரு நவீன சினிமா மிக மெல்லிய கதையைக் கூடத் தன் நவீன கதை கூறல் மூலம் முற்றிலும் வேறுபட்ட அனுபவமாகக் காட்டமுடியும். எத்தனையோ உலகத் திரைப்படங்களை இதற்கு உதாரணமாகக் காட்டமுடியும். எனவே வலுவான கதையை ஒரு திரைப்படத்தின் அடிப்படையாக வைக்கமுடியாது. ஆனால் அப்படி வலுவான கதையை அடிப்படையாகக் கொள்ளாத படங்கள், கதை சொல்லும் முறையில் மிக வலுவாக இருந்தாக வேண்டும். இத்திரைப்படம் அதில் மிகப்பெரிய தோல்வியை அடைகிறது. ஆரம்பக் காட்சிகளில் பிணத்தை போட்டோ எடுக்கும் காட்சியில் வரும் காதல் நம்மைக் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைத்தாலும் அதற்குப் பின்னர் வரும் காட்சிகள் அத்தனையுமே க்ளிஷே தன்மையும் நாடகத் தன்மையும் கொண்டவை.

எளிமையான கதையுடன் எளிமையான கதை சொல்லும் முறையில் உருவாக்கப்படும் படங்கள் செறிவான ஒரு கவிதை போல தேவையற்ற  காட்சிகளைக் கொண்டிராமல் இருக்கவேண்டும். இத்திரைப்படம் இதில் எந்த வகையிலும் அடங்கவில்லை. எளிமையான கதை, வழக்கான பாணி கதை சொல்லல், கூடவே தேவையற்ற காட்சிகள், அத்தோடு அசட்டுக் காமெடிகள்.

முதல் காட்சியிலேயே தன் தந்தையைத் தேடுகிறார் ஹீரோ. அது பின்னர் கதையின் திருப்புமுனையுடன் செயற்கையாக இணைத்து வைக்கப்படுகிறது. இருக்கட்டும். தந்தையைக் காணாதது பின்னர் இத்திருப்பத்துக்குத்தான் என்பது நமக்குப் பின்னர் புரிகிறது. ஆனால் அதற்குள் காட்சிகள் போலிஸ் ஸ்டேஷன் வரை விரிகின்றன. அதில் ஹீரோவுடன் கூடவே வரும் நடிகர் கர்நாடக போலிஸிடம் சொல்லலாம் என்பது போன்ற அசட்டுக் காமெடியைச் சொல்லிக்கொண்டே இருக்கிறார். நமக்கு ஒரு பதைபதைப்பை உருவாக்கி, பின்னர் ஹீரோவின் தந்தை வீட்டுக்கு எதிரில் உள்ள தோட்டத்தில் இருப்பதைக் காட்டுகிறார்கள். இங்கேயும் ஒரு சஸ்பென்ஸ் வைக்கிறார்கள். அதை நமக்குப் பிறகு காண்பிக்கிறார்கள். இதுவும் தேவையற்ற ஒரு சஸ்பென்ஸ். அதே காட்சியிலேயே அவர் கேமராவுடன் இருப்பதைக் காட்டி இருந்தால் ஒன்றும் குடி மூழ்கிப் போயிருந்திருக்காது என்பதோடு பின்னர் துருத்திக்கொண்டு தெரியும் செயற்கைத்தனமும் தவிர்க்கப்பட்டிருக்கும்.

ஹீரோவின் அப்பாவை பைத்தியம் ரேஞ்சுக்குப் பேசுகிறார்கள். இதுவும் தேவையற்றதே. என்றாலும் ஹீரோவின் அப்பாவுக்கு ஒரு போட்டோகிராஃபரின் கண் இருப்பதை சப்டிலாகக் காட்டுகிறார்கள். படத்தின் மிக சப்டிலான வெகு சொற்பக் காட்சிகளுள் இதுவும் ஒன்று.

ஹீரோவை வில்லன் அடித்துப் போடுகிறான். வில்லன் என்றால் தமிழ்ப்பட ரேஞ்சுக்குக் கற்பனை செய்துவிடவேண்டாம். எளிமையான திரைப்படம் என்பதாலும் எளிமையான ஹீரோ என்பதாலும் கதையே கிடையாது என்பதாலும் எளிமையான வில்லன். இதில் பிரச்சினை இல்லை. இதற்குப் பிறகு இதை வைத்து மூன்று செய்ற்கைத்தனமான காட்சிகள் நுழைக்கப்படுகின்றன. இந்த மூன்று காட்சிகளையும் நீக்கிவிட்டால் படம் குறும்படமாகிவிடும்.

முதல் காட்சி, தன்னை அத்தனை அடித்துப் போடும் ஹீரோ, வில்லனை பதிலுக்கு அடித்துப் போடும்வரை இனி செருப்பே போடுவதில்லை என்று சபதம் எடுக்கிறார். ஏன் செருப்பே போடுவதில்லை என்று முடிவெடுக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. எதாவது செய்யவேண்டும் என்ற வெறியில் இதைத்தான் செய்யமுடியும் என்ற நிலையில் இதைச் செய்கிறார் என்று புரிந்துகொள்ளவேண்டும். போய்த் தொலையட்டும்.

இரண்டாவது காட்சி, இப்படி அடிபட்டுக் கிடக்கும் மகனைப் பார்க்கும் தந்தை வில்லனிடம், அடிச்சாச்சுல்ல போதும் என்கிறார். நல்ல காட்சிதான். ஆனால் அடுத்து பக்கத்தில் இருக்கும் ஹீரோவின் நண்பர்களிடம் அவனை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றுவிடுகிறார்! அவ்வளவுதான். முதலில் இந்தத் தந்தையை பைத்தியம் ரேஞ்சுக்கு ஹீரோவின் நண்பர்கள் சொன்னது சரிதானோ என்று நான் சந்தேகப்பட்ட கணம் அது.

மூன்றாவது காட்சி, வில்லனை அடித்துப் போட கராத்தே பயில்கிறார்கள். இது என்ன காமெடிப்படமா அல்லது சீரியஸான படம் காமெடியாகிவிட்டதா என்று நாம் குழம்பும் நிமிடம் இது.

இன்னொரு காட்சி இன்னும் அசட்டுத்தனமான காமெடி. இதை எப்படிச் சொல்ல என்றுகூடத் தெரியவில்லை. வெளிநாட்டில் இருக்கும் ஒரு நபருக்கு போன் போட்டு, இங்கே இருக்கும் சொத்தை யார் பராமரிப்பது என்று கேட்கும் ஒரு பஞ்சாயத்து. இதற்கும் படத்துக்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது. சும்மா ஒரு காட்சி. இப்படி இன்னொரு அசட்டுத்தனமான காமெடி ஒன்றும் உண்டு. ஹீரோ தன் காதலியைப் பார்க்க உதவும் ஹீரோவின் நண்பர் நெஞ்சு வலி என்று நடிக்கும் காட்சி. இப்படி அசட்டுக் காமெடிகள் உள்ள ஒரு படம் எப்படி ஒரு கொண்டாடத்தக்க படமானது என்று புரியவில்லை.

இந்த அசட்டுக் காமெடிகளை விட்டுவிட்டுப் பார்த்தால், படத்தின் முக்கியக் காட்சிகளான ஹீரோவின் முதல் காதல் காட்சிகள். இதுவும் அந்தரத்தில் விடப்படும் ஒன்றே. கதையில் ஒரு பாகத்தை நிரப்ப இவை உதவுகின்றன என்பதோடு இது எவ்வகையிலும் திரைப்படத்துக்கு உதவுவதில்லை. திரைப்படத்தில் ஹீரோவின் இரண்டாவது காதலும் வில்லனை அடித்துப் போட்டுவிட்டு செருப்பணியும் காட்சிகளுமே மையக் காட்சிகளுக்குத் தொடர்பானவை.

இரண்டாவதாக வரும் ஹீரோயினைப் படம் எடுக்கும் காட்சிகள் இன்னொரு இழுவை. அப்போதுதான் ஹீரோவின்  தந்தைக்குள்ளே இருக்கும் புகைப்படக் கலைஞனை ஹீரோ கண்டுகொள்கிறான். அந்தப் பெண்ணுக்குத் தெரியாமலேயே பெண்ணை கலைத்தன்மையுடன் போட்டோ எடுக்கிறான். எப்படி? செய்ற்கையாகத்தான். ஒரு தோட்டத்தில் மேலிருந்து கீழே அசைந்து விழும் பூவை, இயற்கையின் அழகைப் பார்க்கும் ஹீரோ அதேபோல் ஒரு செட்டப் செய்து ஹீரோயின் அறியாமலேயே போட்டோ எடுத்து அது பத்திரிகையில் முதல் பக்கத்தில் வந்து அவர்களுக்கிடையில் காதல் வந்து அந்த ஹீரோயின் அண்ணன்தான் வில்லன்! ஆண்டவா.

சொன்ன மாதிரியே வில்லனைப் புரட்டி எடுத்து காதலியைக் கைப் பிடிக்க படம் முடிவடைகிறது. உண்மையில், கொண்டாட இத்திரைப்படத்தில் என்னதான் இருக்கிறது என்பது எனக்கு இதுவரை விளங்கவில்லை. மலையாள ரத்தம் குடித்தால் புரியுமோ என்னமோ.

இப்படத்தில் நன்றாக உள்ளவற்றைப் பார்த்துவிடுவோம். ஃபஹத் ஃபாஸிலின் நடிப்பு அட்டகாசம். விழலுக்கு இறைத்த நீரைப் போல. ஆனால் இத்திரைப்படம் சூப்பர் ஹிட் என்று மலையாள அலியன்கள் சொல்கிறார்கள். கடவுளுக்கே வெளிச்சம். மலையாளத்தில் மூன்று கோடி வசூல் வந்தாலே தெறி ஹிட் என்றுதான் சொல்லிக்கொள்வார்கள்.

ஃப்ளக்ஸ் ப்ரிண்ட் செய்து தரும் கடையில் உதவிக்கு வரும் சௌபின் ஷாஹிர் ஒரு காட்சியில் கலக்கி இருக்கிறார். தன் மகளும் இவரும் காதலிக்கிறாரோ என்று சந்தேகப்படும் ப்ளக்ஸ் ஓனருக்கு இவர் பதில் சொல்லும் விதமும் அதில் தெரியும் முக பாவமும் அசல் நடிப்பு. ஒட்டுமொத்த  படத்திலும் எனக்குப் பிடித்த ஒரே காட்சி இது மட்டுமே.

படத்தின் தொடக்கத்தில் வரும் இடுக்கி பாடலும், படம் முழுக்க நம் கண்களை வருடிவிடும் ஒளிப்பதிவும் கேரளத்தின் வனப்பும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவை.

மிகக் குறைந்த செலவில் எளிமையான திரைப்படங்கள் மிக முக்கியமானவை. இது மலையாளத் திரைப்பட வரலாற்றின் முதுகெலும்பும் கூட. ஆனால் அதையே காரணமாக வைத்து ஒரு சுமாரான படத்தை, ஏகப்பட்ட தேவையற்ற காட்சிகள் கொண்ட ஒரு படத்தை, குறும்படமாக எடுத்திருக்கவேண்டிய ஒரு படத்தைக் கொண்டாடியே ஆகவேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை. இதைக் கொண்டாடுவதுதான் மலையாள ரத்தம் என்றால், தமிழ் ரத்தமே நல்லது!

Share

Comments Closed