தமிழின் சாதனைக் கட்டுரைகளுள் ஒன்று இந்தக் கட்டுரை. இதை எழுதிய கல்யாண ராமனுக்கு (யார் இவர்!) ஒரு சல்யூட். தமிழில் இது போன்ற ஆய்வாளர்கள் அருகிவிட்டார்கள். இந்நிலையில் இக்கட்டுரையின் முக்கியத்துவத்தை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. ஒவ்வொரு பதிப்பாளரும் படித்து இதைப் புரிந்துகொள்ளவேண்டியது அத்தனை அவசியம்.
இதை காலச்சுவடு உள்நோக்கத்தோடு செய்ததா என்பது தெரியாது. உள்நோக்கத்தோடு செய்தாலும் அதை நான் வரவேற்கிறேன். இன்னும் அதிக உள்நோக்கங்களோடு கட்டுரைகள் எல்லா இடங்களில் இருந்தும் வரட்டும். 🙂 உள்நோக்கம் என்ற ஒன்றே ஒரு வலிமையான கட்டுரையைக் கொண்டுவருகிறது என்று உறுதியாக நம்புகிறேன். இஸம் சார்ந்த உள்நோக்கம் என்ற ஒரு வஸ்து இல்லையென்றால், இன்றைய ஃபேஸ்புக் சமூகத்தில் என்னதான் மிஞ்சும்? வாழ்க உள்நோக்கம். வளர்க உள்நோக்கக் கட்டுரைகள்.
ஆனா ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லிடறேன். ‘சூனியத்தில் வெடித்த முற்றுப்புள்ளி.’ இது என்ன எழவு தலைப்பு? இலக்கியக் கட்டுரைன்னா இப்படி என்னத்தையாவது வைக்கணுமா? நல்லவேளை, கட்டுரை தலைப்பைப் போல இல்லை. கொஞ்சம் சூனியத்தினூடேவெடிக்கும்பெருவெளிபிரபஞ்சபிரக்ஞைகளைக் குறைங்க சாமிகளா.
//எழுபதுகளின் சிற்றிதழ்களில் பிரசுரமான மூலவடிவங்களைப் பிரம்மராஜனின் பதிப்பில் காண்பதற்கில்லை என்பது மட்டுமன்று; ‘காகிதத்தில் ஒரு கோடு’ தொகுப்பிலிருந்தும் சில இடங்களில் வேறுபட்டுப் பிரம்மராஜன் கவிதைகளைப் பதிப்பித்துள்ளார். எழுத்துப்பிழை, எழுத்து மாற்றம், சொல் மாற்றம், சொல் விடுபடல், பொருள் மாற்றம், வரி மாற்றம், முழுவரியையும் கவனக்குறைவாக விட்டுவிடுதல், முந்தைய வரிகளைப் பிந்திய வரிகளுடன் சேர்த்துக் குழப்பி மீண்டும் இடம்பெறச் செய்தல், சில வரிகளைத் தவறுதலாக விட்டுவிடுதல், சிலவற்றை முழுதாக நீக்கிவிடுதல், தலைப்புத் திருத்தம், தலைப்பு மாற்றம், புதுத் தலைப்பிடல், ஒரு சொல்லின் மூலவடிவத்தைத் திருத்தி அதன் மாற்றுவடிவத்தைப் பயன்படுத்துதல் (சாலை – ரோடு; வெற்றுடம்புடன் – நிர்வாணமாய்; அச்சம் – பயம்) எனப் பிழைகள் மலிந்ததாகப் பிரம்மராஜனின் பதிப்பு உள்ளது. மூலப்பிரதியிலிருந்து வேறுபட்டுப் பதிப்பிக்கும்போதுகூடச் சிலவேளைகளில் கவனக்குறைவால் நேர்ந்துவிடும் பிழைகளைச் சகித்துக்கொள்ளலாம்; தம் 1989ஆம் ஆண்டுப் பதிப்பிலிருந்து (தன்யா & பிரம்மா வெளியீடு) தாமே வேறுபட்டுப் பிரம்மராஜன் பதிப்பிப்பதை எவ்வாறு புரிந்துகொள்வது?//
http://www.kalachuvadu.com/current/issue-200/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF