என் பெயர் என் உரிமை

என் பெயர் படும் பாடு:

ஒரு நண்பர் ஒருவர் அவர்களது தனிப்பட்ட குழும இதழை எனக்குத் தொடர்ந்து அனுப்பி வைப்பார். நண்பர் வயதானவர். உழைப்பாளி. அந்த பத்திரிகையில் ஒட்டும் பெறுநர் முகவரியில் என் பெயரை எல். ஹரிகரப்ரசன்னா என்று தட்டச்சு செய்திருந்தார்கள். நான் முதலில் கண்டுகொள்ளவில்லை. ஆனால் ஒவ்வொரு தடவை பார்க்கும்போது கொஞ்சம் துணுக்குறும். சரி, அவரிடம் சொல்லிவிடுவோம் என்று ஒரு தடவை சொன்னேன். உடனே மாற்றுகிறேன் என்றார். ஆனால் மாற்றவில்லை. கொஞ்ச நாள் கழித்து மீண்டும் சொன்னேன். மன்னிப்புக் கேட்டுக்கொண்டு மாற்றிவிடுவதாகச் சொன்னார். ஆனால் மாற்றவில்லை. நான் மீண்டும் சொல்ல, அவர் மன்னிப்புக் கேட்க என ஐந்தாறு முறை ஆகிவிட்டது. ஆனால் பெயர் மட்டும் மாற்றப்படவே இல்லை. என் இன்ஷியல் V. அதை எல் என்று பார்க்கும்போதெல்லாம் என் அப்பா வாசுதேவ ராவின் நினைவு வரும். இந்த முறை அந்த நண்பரை நேரில் சந்திக்கும்படி ஆனது. மெல்ல பொறுமையாக ஆனால் மிக உறுதியாக அவரிடம் பேசினேன். “ஸார், நீங்க வயசானவர். ரொம்ப உழைக்கறீங்க. மகிழ்ச்சி. ஆனால் ஒவ்வொரு தடவை என் பெயரை இப்படி தப்பா பார்க்கும்போதும் எனக்கு ஒரு மாதிரி இருக்கு. உங்ககிட்டயும் அஞ்சாறு தடவை சொல்லிட்டேன். இதுவே வேற யாராவது இருந்தா நான் வேற மாதிரிதான் பேசுவேன். ஒண்ணு இனிஷியலை சரியா மாத்தி அனுப்புங்க. இல்லைன்னா இதழே வேண்டாம். இப்படி சொல்றதுக்கு ஸாரி. மன்னிச்சிடுங்க. இதுல எல் – வி-ன்ற எழுத்துப் பிரச்சினை மட்டும் இல்லை. என் உள்ளுணர்வு சார்ந்த தீவிரமான அகப்போராட்டமே இருக்கு. என் அப்பாவுக்கான ஒரே அங்கீகாரம் இந்த எழுத்து மட்டும்தான் இன்னைக்கு. என் அம்மாவும் இதைப் பார்க்கும்போதெல்லாம் சொல்றாங்க. இதுக்கு வேற ஒரு தனிப்பட்ட காரணமும் இருக்கு. (அதையும் அவரிடம் சொன்னேன்.) கொஞ்சம் கவனம் எடுத்துச் செய்ங்க” என்றேன். பலவாறு ஸாரி சொன்னார். எனக்கே வருத்தமாகிவிட்டது. அத்தனை வகையில் வருத்தத்துடன் அவர் பேசினார். அடுத்த முறை நிச்சயம் சரியாக வரும் என்று உறுதி சொன்னார்.

நான் 8ம் வகுப்பு எம்.எல்.டபுள்யூ.ஏ. பள்ளியில் மதுரையில் சேர்ந்தேன். அங்கே இருந்த தமிழாசிரியர் மட்டும் என் பெயரை அரிகரபிரசன்னா என்று எழுதுவார். எனக்கு தீயை விழுங்கியது போல இருக்கும். ஒரு தடவை மெல்ல அவரிடம் சொன்னேன். அவர் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. நானும் அப்படித்தான் எழுதவேண்டும் என்று அறிவுரையும் சொன்னார். பெயர் அப்படியே பத்தாம் வகுப்பு சான்றிதழ் வரை வந்துவிடுமோ என்று அதீதமாகக் கவலைப்பட்ட நான் என் தாத்தாவிடம் சொன்னேன். மறுநாளே தாத்தா பள்ளித் தலைமை ஆசிரியரைப் பார்க்க வந்துவிட்டார். வெள்ளை வேட்டி, வெள்ளை ஜிப்பா, நெற்றியில் நாமம், நாமத்திடையே அங்காரட்சதை, கோபி முத்திரை, ஒரு சால்வை, தாத்தா கம்பு என்று என்னுடன் நடந்து வந்த அவரை பள்ளிக் கதவில் யாரும் தடுத்து நிறுத்தவில்லை. பெரிய கும்பிடு போட்டு உள்ளே அனுப்பி வைத்தார்கள். மே ஐ கம் இன் சார் என்று அவர் உள்ளே செல்லவும், மிகக் கறாரான கண்டிப்பான தலைமை ஆசிரியர் எழுந்து நின்றதை நான் பார்த்து அதிசயித்து நின்றேன். ஐந்து நிமிடம் மிக எளிமையான அழகான ஆங்கிலத்தில் என் தாத்தா தலைமை ஆசிரியரிடம் பேசினார். சுருக்கம் இதுதான்: என் பேரன் பெயர் ஹரிஹர பிரசன்னாதான். அரிகர பிரசன்னா அல்ல. இதை உடனே மாற்றியாகவேண்டும். எக்காரணம் கொண்டும் அதை அரிகர பிரசன்னா என்று எழுதக்கூடாது. இது அத்தனை சிறிய விஷயம் அல்ல. இதுவே அவர் சொன்னதன் சுருக்கம்.

தலைமை ஆசிரியர் கையோடு தமிழ் ஆசிரியரை அழைத்து இனி நிச்சயம் என் பெயரை ஹரிஹரபிரசன்னா என்றுதான் எழுதவேண்டும் என்று சொல்லிவிட்டார். தமிழாசிரியர் நல்லவர். இதையெல்லாம் அவர் மனத்தில் வைத்துக்கொள்ளவில்லை. எப்போதும் போல் என்மீது அன்பாகவே இருந்தார். என் திருமணம் முடிந்ததும் அவரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றுவிட்டு வந்தேன்.

இப்படி பெயர் விஷயத்தில் சின்ன வயதிலேயே எனக்கு கருத்துத் தீவிரம் இருந்தது. யாராவது தன் பெயரை விச்வநாதன் என்று எழுதினால் அதை விஸ்வநாதன் என்று எழுதுவதும் தவறே. இப்படியான தனிப்பட்ட சுதந்திரத்தை மதிக்கும் கருத்துத் தீவிரம்.

இன்று மீண்டும் அந்த இதழ் வந்தது. அதில் என் பெயரை A. ஹரிகரபிரசன்னா என்று எழுதி அனுப்பி இருக்கிறார்கள். மீண்டும் அவருக்கு எஸ்.எம்.எஸ். ‘இந்த முறை புதிய தவறுடன் என் பெயர் அச்சாகி வந்துள்ளது. என் சரியான பெயர் V. ஹரிஹர பிரசன்னா.’ அவரது மன்னிப்பு பதிலாக மீண்டும். இந்த விளையாட்டு இன்னும் எத்தனை நாளைக்கு என்று தெரியவில்லை.

Share

Comments Closed