பென்சில் சீவல்களுடன் ஒரு ஆட்டம்
பென்சிலை சீவிக்கொண்டிருக்கிறாள் மகள்
சீவி விழும் மரச் சீவல்களைச் சேகரித்து
தன் டப்பாவில் வைத்துக்கொள்கிறாள்
மீண்டும் சீவத்தொடங்குகிறாள்
கை வலிக்க
அதைக் கீழே வைத்துவிட்டு
அப்படியே படுத்துக்கொள்கிறாள்
கனவெங்கும் மரத்தின் சீவல் சுருள்கள்
வீட்டின் அறைமுழுக்க சுருள்கள்
அலையின் நுரையைப் போல்
அள்ளிப் பூசிக்கொள்கிறாள்
நதியின் நீரென முங்கி எழுகிறாள்
வாய் நிறைய காற்றடக்கி
ஊதித் தள்ளுகிறாள்
விடிந்ததும் நேராக ஓடிவந்து
புது பென்சில் வேணும்ப்பா என்கிறாள்
தினம் ஒரு பென்சிலா, உருப்படும் என்று சொல்லும் என்னை…
எப்படிச் சொல்ல
புரியாமலா
வினோதமாகவா
விரோதமாகவா
எரிச்சலுடனா..
எப்படியோ பார்க்கிறாள்
அறையெங்கும் அவளைத் தேடிக்கொண்டிருக்கின்றன
இரவில் கும்மாளமிட்ட மரச் சுருள்கள்