கிரீடம் (கவிதை)

நத்தையைப் பார்த்துச் சிரிக்கிறாள் மகள்
எதோ நினைத்துக்கொண்டவளாய்
மழலை மாறாத சொற்களில்
வேப்பமரம் துள்ஸி என்கிறாள்
மிகப்பெரிய பளுவொன்றை சுமந்துகொண்டு
வாசற்படி ஏறும்போது
சிறு பஞ்சுப் பொதியென வயிற்றில் முட்டி
யூகேஜி வந்துட்டா நான் பெரியவதானப்பா என்கிறாள்
இரவின் வானமும் அதன் நட்சத்திரங்களும்
மரங்களின் வாசமும்
குயில்களும் கிளிகளும் அணில்களும்
துளசிச் செடியும் அதில் குடியிருக்கும் வீட்டுத் தெய்வமும்
என் வீட்டுக்குள் காத்திருக்கின்றன
இவள் பேசட்டும் என்று.
நான் அணிந்திருக்கும்
வைரம் பதித்த தங்கக் கிரீடம்
லேசாக உறுத்தத்தான் செய்கிறது
கொஞ்சம் கூச்சமும் கூட.
உறுத்தினாலும் கூச்சம் தந்தாலும்
அது கிரீடம்.

Share

Comments Closed