சென்னைப் புத்தகக் கண்காட்சி தொடர்பாக

பாம்புகள் உலவும் வெளியில் பாம்புகளுக்கு மத்தியில் புத்தகங்களை வாசகர்கள் வாங்குகிறார்கள் என்று மட்டும் சொல்லாத ஒரு கட்டுரையை நேற்று தினமலரில் வாசித்து அதிர்ந்தேன். சென்னை புத்தகக் கண்காட்சி பல இன்னல்களுக்கு மத்தியில் நடைபெறுகிறது. சில குறைகள் உள்ளன என்பதும் உண்மையே. ஆனால் ஒட்டுமொத்தமாக புத்தகக் கண்காட்சியைப் புறக்கணிக்கும் அளவுக்கோ, வாசகர்கள் பயந்து பின்வாங்கும் அளவுக்கோ குறைகள் எவையுமே இல்லை என்பதே உண்மை.

புத்தகக் கண்காட்சி என்பது ஒரு மாபெரும் கூட்டு முயற்சி. நிச்சயம் சில சுணக்கங்கள், சில பின்னடைவுகள் இருக்கவே செய்யும். இவையெல்லாவற்றையும் மீறி ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியும் மெருகேறிக்கொண்டேதான் வருகிறது.

இம்முறை தீவுத்திடலில் நடத்தப்பட ஒரே காரணம், கடந்த டிசம்பரில் வரலாறு காணாத மழையினால் ஏற்பட்ட பின்விளைவுகளே. ஜூனில் வெயில் கடுமையாகவே இருக்கும். அதை நாம் ஒன்றும் செய்யமுடியாது. எதிர்பாராத மழை வேறு. இத்தனைக்கும் 700க்கும் மேற்பட்ட அரங்குகளில், நீர் ஒழுகியது என்னவோ பதினைந்து அரங்குகளுக்கும் கீழாகவே இருக்கும். மற்ற அரங்குகளில் பெரிய பாதிப்பு இல்லை. இத்தனை செய்ததே பெரிய விஷயம். ஆனால் நாம் குறைகளை மட்டுமே சொல்லப் பழகிவிட்டோம். குறைகள் சொல்லப்படவேண்டியது நிச்சயம் தேவைதான், ஆனால் புத்தகக் கண்காட்சியில் குறைகள் தவிர வேறு எதுவுமே இல்லை என்ற வகையில் எழுதுவது அர்த்தமற்றது.

புத்தகக் கண்காட்சிக்கு வருகிறவர்கள் நிச்சயம் வேர்வையில் நனைந்தே செல்கிறார்கள். இதற்கு ஒன்றும் செய்யமுடியாது. அதேசமயம் இத்தனை வேர்வையிலும் எத்தனை பேர் புத்தகம் வாங்குகிறார்கள் என்பதே நாம் பார்க்கவேண்டியது. கடும் வெயில் காரணமாக எல்லா வரிசைகளிலும் அதிக மின்விசிறிகளை நிர்வாகம் வைத்தது. அதன் பிறகு கொஞ்சம் பரவாயில்லை. ஆனாலும் ஜூனில் வேர்க்கவே செய்யும். வேர்வையில் புத்தகம் வாங்குவது ஒரு அனுபவம்தான், ஒரு பெருமைதான் என்று நினைத்துக்கொள்ளவேண்டியதுதான்.

வருகின்றவர்களுக்கு அருந்த நீர் வைக்கப்பட்டுள்ளது. கையிலேயே வாசகர்கள் நீரை சுமந்துகொண்டு வருவது நல்லது. குறைந்தபட்சம் நீர் பிடிக்க வாட்டர் கேனாவது கொண்டு வருவது நல்லது. திரைப்படத்துக்குப் போகும்போது, தொடர்வண்டியில் ஊருக்குச் செல்லும்போது நாம் நீர் கொண்டு போகிறோம். புத்தகக் கண்காட்சிக்கும் கையில் நீர் கொண்டு செல்லலாம், தவறில்லை.

மிகவும் தூரம் என்பது ஒரு பிரச்சினை. சென்னை போன்ற ஒரு மாநகரத்தில் எங்கே புத்தகக் கண்காட்சி வைத்தாலும் ஏதேனும் ஒரு பகுதி மக்களுக்கு நிச்சயம் வெகுதூரமாகவே இருக்கும். நந்தனத்தில் புத்தகக் கண்காட்சி நடந்தபோது தாம்பரத்தில் இருந்து ஒருவர் எப்படி வருவார் என்றோ வியாசர்பாடியில் இருந்து ஒருவர் எப்படி வருவார் என்றோ நாம் கேட்கவில்லை. ஆனால் தீவுத்திடலில் வைக்கவும் தென்சென்னைக்காரர்கள் எப்படி வருவார்கள் என்ற கேள்வி வருகிறது. இதே தீவுத்திடலில்தான் பொருட்காட்சி நடக்கிறது. பெருங்கூட்டம் கூடுகிறது. அப்போது எப்படி வருகிறார்கள்? இப்போது ஏன் அங்கலாய்ப்பு? புத்தகம் வாசிப்பது என்பது நம் பண்பாட்டோடு ஒன்றி வரவில்லை என்பதுதான் காரணம். புத்தகம் வாசிப்பது என்பது எதோ யாருக்கோ செய்யும் சேவை என்னும் மனப்பான்மையே காரணம். புத்தகம் வாசிப்பது கடமைக்காக அல்ல, ரசனைக்காக. இப்படி எண்ணம் உள்ளவர்கள் நிச்சயம் குறைகளை மட்டுமே அங்கலாய்த்துக்கொண்டு இருக்க மாட்டார்கள். புத்தகம் இருக்கும் இடம் தேடி புத்தகத்தைக் கண்டடைந்து வாசித்துவிட்டுப் போய்க்கொண்டே இருப்பார்கள்.

அதோடு, பழக்கமான ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு புத்தகக் கண்காட்சியை மாற்றும்போது எழும் பொதுப்புத்தி சார்ந்த பிரச்சினைகளும் ஒரு காரணம். காயிதே மில்லத் கல்லூரியில் இருந்து செய்ண்ட் ஜார்ஜ் பள்ளிக்கு மாற்றியபோதும், பின்னர் அங்கிருந்து நந்தனம் வொய் எம் சி ஏவுக்கு மாற்றியபோதும் இதே முணுமுணுப்புகள் இருந்தன. இப்போது நந்தனத்தில் இருந்து தீவுத்திடலுக்கு வரவும் அதேபோல் வருத்தப்படுகிறார்கள். இதுவும் பழகும்.

நந்தம்பாக்கத்தில் ஏன் வைக்கவில்லை என்று ஒரு கேள்வி. நந்தம்பாக்கத்தில் வைத்தால் ஏற்படும் செலவுகளை ஒரு பதிப்பாளரால் சமாளிக்கமுடியாது. நந்தம்பாக்கத்தில் நடத்தும் அளவுக்கு நம் வாசகர்கள் அதிகப் புத்தகங்கள் வாங்கும் சமயத்தில் அதுவும் நடக்கத்தான் போகிறது.

தீவுத்திடலில் புத்தகக் கண்காட்சிக்கு அதன் அருகில் உள்ள சில முக்கிய இடங்களில் இருந்து இலவச ஆட்டோ சேவையும் வழங்கப்பட்டது. தியேட்டருக்குச் செல்லும்போது தியேட்டர் முன்பாக பேருந்து நிறுத்தம் இல்லையே என்று நாம் நொந்துகொள்வதில்லை. தியேட்டரில் டிக்கட் கிடைக்குமா என்பதிலேயே கவனமாக இருக்கிறோம். ஆனால் புத்தகக் கண்காட்சிக்கு வரும்போது நமக்கு ஆயிரம் வசதிக்குறைபாடுகள் கண்ணுக்குப் படுகின்றன.

புத்தகக் கண்காட்சி நூறு சதவீதம் நிறைகளோடு செயல்படுகிறது என்று நான் சொல்லவில்லை. நிச்சயம் பல விதங்களில் முன்னேற்றம் தேவை. அதே சமயம் புத்தகக் கண்காட்சிக்கே வரமுடியாதபடிக்கான அடிப்படைத் தேவைகளே இல்லை என்பது அநியாயமான வாதம். சென்னையில் கொஞ்சம் தூரம் உள்ள எந்த ஒரு இடத்துக்கும் செல்லும்போது உள்ள அதே பொதுவான வசதிக்குறைவுகள் மட்டுமே புத்தகக் கண்காட்சிக்குச் செல்லுவதிலும் உள்ளன. தனியாக வேறு குறைகள் இல்லை. புத்தகம் வாங்க சிறந்த இடம் புத்தகக் கண்காட்சியே. இதில் இரண்டாம் கருத்துக்கே இடமில்லை. பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் கொட்டிக்கிடக்கின்றன. நிச்சயம் வாருங்கள். இந்தியாவிலேயே வாசகர்கள் அதிக அளவு புத்தகங்களை நேரடியாக பதிப்பாளர்களிடம் இருந்து வாங்கும் பெரிய புத்தகக் கண்காட்சி இது. இதைத் தவறவிடாதீர்கள். அதோடு, புத்தகக் கண்காட்சி என்பது மார்க்கெட்டுக்குப் போய் கத்தரிக்காய் வாங்கி வரும் ஒரு அனுபவம் அல்ல. புத்தகக் கண்காட்சியில் நீங்கள் உங்கள் வாழ்க்கையையே மாற்றப் போகும் ஒரு புத்தகத்தைக் கண்டடையலாம். உங்கள் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு எழுத்தாளரை சந்தித்து உரையாட நேரலாம். யாருக்காகவோ யாரோ எழுதிய ஒரு வரி உங்களுக்காக அங்கே காத்திருக்கலாம். இந்த அனுபவங்களுக்கு முன்பு குறைகள் ஒரு பொருட்டே அல்ல என்பது சரிதானே?

Share

Comments Closed