Doctor Allah Pichai Tirunelvei

டாக்டர் அல்லா பிச்சை. திருநெல்வேலியில் சித்தா மருத்துவராக பல்லாண்டு காலம் மருத்துவம் பார்த்தவர். கிட்டத்தட்ட எங்கள் குடும்ப டாக்டர் போல. என் அப்பா இவரிடம்தான் கணக்கு எழுதிக்கொண்டிருந்தார். இவருக்கு முன்பு இருந்த சித்தா டாக்டருக்கும் என் அப்பா பழக்கம் என நினைக்கிறேன். என் அம்மாவின் ஆஸ்துமாவுக்கு அல்லா பிச்சை டாக்டர் கொடுத்த மருந்துகள்தான் அந்தக் காலத்தில் அம்மாவுக்குப் பெரிய அளவில் உதவின.

இந்த டாக்டர் நேற்று இறந்துவிட்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டபோது மிகவும் வருத்தமாக இருந்தது. எங்கள் குடும்பத்துடன் கிட்டத்தட்ட 50 வருடப் பழக்கம். எத்தனை முறை போனாலும் எத்தனை கட்டாயப்படுத்தினாலும் மருந்துக்கு ஒரு பைசா வாங்கமாட்டார். எங்கள் வீட்டு நல்ல நிகழ்ச்சிகளுக்கு குடும்பத்துடன் வந்து இருந்து வாழ்த்தி உணவருந்திவிட்டுப் போவார். இவர் வீட்டுக் கல்யாணத்துக்கு எங்கள் பாரம்பரிய ஸ்டைலில் சைவ உணவும் வேண்டும் என்று விரும்பி எங்களிடம் கேட்டு, எங்களுக்குத் தெரிந்த சமையல்காரரை நாங்கள் ஏற்பாடு செய்துகொடுத்தோம்.

இவரைப் பற்றிய பல புதிரான செய்திகள் திருநெல்வேலியில் வலம் வந்தன. எதற்கும் ஆதாரம் இருந்ததாகத் தெரியவில்லை. பல சித்த மருத்துவர்களைப் பற்றி இன்றுவரை சொல்லப்படும் அதே மாதிரியான புகார்கள்தான். ஆனால் அல்லா பிச்சையின் மருந்துகள் பெரிய அளவில் எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவின என்பதுதான் என் அனுபவ உண்மை.

எனக்கு 17 வயதாக இருந்தபோது படர்தாமரை போல ஒன்று வந்தது. முதலில் இதயத்தில். பின்பு தொடையில். பள்ளிக்கு வந்த மருத்துவர் குழு இது தொழுநோயின் அறிகுறியாக இருக்கலாம் என்று பயமுறுத்திவிட்டார்கள். நான் பயந்துகொண்டே வீட்டுக்கு வந்து அம்மாவிடம் சொன்னேன். அன்று கிருஷ்ண ஜெயந்தி. அம்மா மடியாக முறுக்கு சுட்டுக்கொண்டிருந்தாள். “அதெல்லாம் இருக்காது. சும்மா பயமுறுத்தறாங்க. அல்லா பிச்சை டாக்டரிடம் காமிக்கலாம்” என்றார். காண்பித்தோம். அல்லா பிச்சை டாக்டர் சிரித்துவிட்டு, “பயமுறுத்தினாதான் உடனே வைத்தியம் பார்ப்பன்னு சொல்லிருக்காங்க” என்று சொன்னார். இரண்டு நாள் கழித்து மருந்து வாங்கிக்கொள்ளச் சொன்னார். அது ஒரு வகையான பொடி. வாயிலேயே வைக்கமுடியவில்லை. அப்படி ஒரு கசப்பு. அதை தினமும் மூன்று வேளை தேனில் குழைத்து உண்ணவேண்டும். அப்படி மூன்று மாதம் உண்டேன். மெல்ல மெல்ல மறைந்தது அந்தப் படர் தாமரை. இப்போது நினைத்தாலும் ஆச்சரியம் தரும் விஷயம் இது.

என் அண்ணிக்கு திடீரென்று தலையில் ஓரிடத்தில் மட்டும் சொட்டை விழுந்துவிட்டது. வெண்ணிறச் சொட்டை போல. அப்போது அண்ணனுக்கும் அண்ணிக்கும் கல்யாணம் ஆகியிருக்கவில்லை. அல்லா பிச்சை டாக்டரிடம் காண்பித்தோம். சோழியும் எலுமிச்சையும் வாங்கித் தரச் சொன்னார். எதோ ஒரு மருந்தை உண்டாக்கிக் கொடுத்தார். வயிற்றைக் குமட்டும் நெடியுள்ள அம்மருந்தை அச்சொட்டைப் பகுதியில் தடவி வரவேண்டும். நான்கே நாளில் மெல்ல முடி முளைக்கத் தொடங்கியது. பின்பு சரியாகிவிட்டது. இன்றுவரை அப்பிரச்சினை இல்லை.

என் பாட்டிக்கு திடீரென்று ஒரு நாள் ஒரு கையும் காலும் விளங்காமல் போய்விட்டது. வாயும் கோணிக்கொண்டு விட்டது. அப்போது பாட்டிக்கு 70 வயது இருக்கலாம். தூக்கிக்கொண்டுதான் அல்லா பிச்சை டாக்டரிடம் போனோம். தைலம் எழுதிக் கொடுத்தார். மூன்று மாதங்கள் காலை மதியம் மாலை என அதைத் தடவி நீவிவிட்டு வெயிலில் இருக்க வைக்கவேண்டும். மூன்று மாதங்களில் பாட்டி இயல்பானார். அதன் பின்பு பத்து வருடங்கள் வாழ்ந்தார்.

கடந்த வருடம் மே மாதம் திருநெல்வேலிக்குப் போயிருக்கும்போது மனைவி மகன் மகளுடன் அவரைப் பார்த்துவிட்டு வந்தேன். நேற்று அவர் இறந்த செய்தி கடும் அதிர்ச்சி அளிக்கிறது. அவருக்கு அஞ்சலி.

அவரது மருத்துவ மனையில் ஒரு கண்ணாடிக் கூண்டுக்குள் மிக அழகான ராமர்-சீதை-லக்ஷ்மணன் – அனுமார் படம் இருக்கும். என் பதினைந்து வயதில் அதைப் பார்த்திருக்கிறேன். கடந்த மே மாதம் சென்றபோதும் அதே இடத்தில் அப்படம் அதே அழகுடன் மிக அழகாகத் துலங்கி நின்றது. கலாசாரத்தின் பெருமைகளை இப்படி அழகுற இணைக்கும் பண்புடன் வாழ்ந்தவர்கள் இனியும் அதிகமாகவேண்டும் என்பதே என் நினைப்பாக இருந்தது. அப்பண்பின் ஒரு கண்ணிதான் அல்லா பிச்சை டாக்டர்.

Share

Comments Closed