புரியாத பேச்சு – விஜய்காந்த்

விஜய்காந்தின் பேச்சு புரியவே இல்லை என்பதை நான் கிண்டலாகச் சொல்லவில்லை. ஆனால் நிஜமாகவே புரியவில்லை என்பதை சொல்லித்தான் ஆகவேண்டி இருக்கிறது. இதை வைத்துக் கிண்டல் செய்பவர்களை நான் ஏற்கவில்லை. (ஆனால் சில மீம்கள், வீடியோக்கள் கடுமையான சிரிப்பை வரவழைக்கின்றன. அதைச் செய்தவர்களின் வெற்றியாக மட்டும் இதை எடுத்துக்கொள்ளவேண்டும்!) ஆனால் இதைத் தவிர்க்கமுடியாது. ஜெயலலிதாவையும் இப்படி கிண்டல் செய்திருக்கிறார்கள். இது தலைவிதி, இதிலிருந்து தப்ப முடியாது.

ஆனால் விஜய்காந்த் பேசுவது நிஜமாகவே புரியவில்லை. பக்கத்து வீட்டில் இருக்கும் ஒருவர் பேசுவது புரியவில்லை என்றால் நான் அவருக்காகப் பரிதாபப்படுவேன். ஆனால் நாளைய முதல்வராகப் போகிறேன் என்று சொல்பவர் பேசுவது புரியவில்லை என்றால், கேள்வி கேட்கத்தான் செய்வேன். விஜய்காந்த் தரப்பிலிருந்து மிகத் தெளிவான விளக்கம் இதற்குத் தரப்படவில்லை என்பதுதான் விஷயம். இப்போதுதான் தொண்டைப் புண் என்று சொல்லி இருக்கிறார்கள். இதுவரை அவரது குடிப்பழக்கமே காரணம் என்று திரைமறைவில் சொல்லப்பட்டது. எது காரணமாக இருந்தாலும் அவர் பேசுவது புரியவில்லை என்பது புரியவில்லைதான்.

எம்ஜியாருக்கு சுடப்பட்டு பேச்சு போனபோது இதே சமூகம் பதறியது. பின்பு கிண்டலும் செய்தது. ஆனால் விஜய்காந்துக்கு அப்படி அல்ல. ஜெயலலிதா பற்றியும் பல கதைகள். ஏன் இத்தலைவர்கள் தங்களுக்கு என்ன பிரச்சினை என்பதை பொதுவில் வைக்க இப்படி தயங்குகிறார்கள்? எல்லா மனிதர்களுக்கும் வரும் பிரச்சினைதானே? ஏன் மூடி மறைக்கவேண்டும்? சர்க்கரை நோய் பிரச்சினை என்று வெளியே தெரிந்துவிட்டால் என்ன ஆகிவிடும்?

இன்றைய நவீன உலகத்துக்கேற்ப தலைவர்கள் உருவாகி வரவில்லை. ‘என் பிரச்சினை இதுதான், இதைத்தான் நான் எதிர்கொண்டு போராடிக்கொண்டிருக்கிறேன், என் பலவீனம் இது’ என்று வெளிப்படையாகச் சொல்லும் தலைவர்களே மக்கள் மனத்தில், ஆயிரம் கிண்டலையும் மீறி, இடம் பிடிக்கப் போகிறார்கள். இந்த எளிய சூத்திரம் கூடத் தெரியாமல் இல்லாத இமேஜைக் கட்டிக் காக்க இவர்கள் போடும் நாடகம், மக்களை முட்டாளாக்கிக்கொண்டிருக்கிறது. இதனால் தேவையற்ற கதைகள் உலவிக்கொண்டிருக்கின்றன. இதையே பெருமையாகக் கருதிக்கொள்வார்களோ என்னவோ.

மூப்பனார் பேசும்போது கீழே சப்டைட்டில் போட்டது சன் டிவி. அதற்குப் பலர் கொதித்தார்கள். ஆனால் சன் டிவி சப்டைட்டில் போட்டதில் தவறே இல்லை. விஜய்காந்த்துக்கும் சப்டைட்டில் போட்டால் நல்லது. உடல் நலம் சரியாகி அவர் நன்றாகப் பேசும் வரை இது தொடரவேண்டியது அவசியம். கிண்டலாக இல்லை, சீரியஸாகத்தான் இதைச் சொல்கிறேன்.

Share

Comments Closed