வெல்லும் கட்சி – தேர்தல் களம் 2016 – தினமலர்

முன்பெல்லாம் என் தாத்தாவிடம் கேட்பேன், எந்தக் கட்சிக்கு வாக்களிக்கப் போகிறீர்கள் என்று. அவர் சிரித்துக்கொண்டே ‘சோத்துக் கட்சிக்கு’ என்பார். எத்தனை முறை எப்படி மாற்றிக் கேட்டாலும் பதில் சோத்துக் கட்சி என்பதாகவே இருக்கும். தான் அளிக்கும் வாக்கை வெளியில் சொல்லக்கூடாது என்பதில் அவருக்கு இருக்கும் உறுதி என்று ஒருவகையில் எடுத்துக்கொண்டாலும், இன்னொரு வகையில் தன் வாக்கு வெல்லும் கட்சிக்குச் செல்லவேண்டும் என்ற எண்ணமும் அவர் சொன்னதில் மறைந்திருப்பதைப் பார்க்கலாம்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் என் நண்பரிடம் பாரதிய ஜனதாவுக்கு வாக்களிக்கச் சொன்னேன். எப்போதும் அதிமுகவுக்கு வாக்களிப்பதையே விரும்பும் அவர் அந்த ஒருமுறை மட்டும் பாஜகவுக்கு வாக்களிக்க ஒப்புக்கொண்டார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. என் நண்பர் வாக்களித்த தொகுதியில் பாஜக மூன்றாவது இடத்துக்கு வந்தது. அதிமுக வெற்றி கண்டது. என் நண்பர் மீண்டும் மீண்டும் சொன்னது, ‘ஒழுங்கா அதிமுகவுக்கு போட்டிருந்தா, ஜெயிச்ச கட்சிக்கு ஓட்டு போட்ட மாதிரி இருந்திருக்கும்’ என்பதையே.

இந்த ஒரு மனநிலை தமிழ்நாடெங்கும் உள்ளதை நீங்கள் பார்க்கலாம். வெல்லும் கட்சிக்கு வாக்களிக்கவேண்டும் என்னும் மனநிலை. ஆனால் இந் எண்ணம் தேவையற்றது என்றே நான் நினைக்கிறேன். வெல்லும் கட்சி அல்லது இரண்டாவதாக வரும் கட்சியைத் தவிர மற்ற கட்சிகளுக்கு அளிக்கப்படும் வாக்குகளை கிட்டத்தட்ட செல்லாத வாக்கைப் போல சித்திரிக்கும் போக்கு இங்கே உள்ளது. இந்த மனநிலையை மாற்றவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.

ஒரு நாட்டில் நிலவும் பன்முகத் தன்மை என்பது மிகவும் முக்கியமானது, அவசியமானது. எல்லாத் தரப்பு மக்களின் எல்லாக் கோரிக்கைகளையும் ஒரு சில கட்சிளால் முழுமையாகக் கவனப்படுத்திவிடமுடியாது. அதோடு சில தனிப்பட்ட சமூகத்தின் அல்லது குழுவின் பிரச்சினைகள் என்ன என்ன என்பதெல்லாம், இரண்டு முதன்மைக் கட்சிகளுக்கு தெரியாமல் இருக்கக்கூட வாய்ப்பிருக்கிறது. அல்லது பெரிய அளவில் வாக்கு இல்லை என்பதால் முதன்மைக் கட்சிகள் இப்பிரச்சினைகளைக் கண்டும் காணாமல் ஒதுங்கிச் செல்லும் வாய்ப்பும் இருக்கிறது. இங்கேதான் சிறிய கட்சிகளின் இருப்பும் பங்களிப்பும் முக்கியமானதாகிறது.

ஜாதிக் கட்சி என்ற சொல் இன்று மிகவும் மோசமான ஒன்றாகவும் ஒதுக்கித் தள்ளவேண்டிய ஒன்றாகவும் ஆகிவிட்டது. ஆனால் இந்தியா போன்ற ஜாதி அமைப்பு மிக வலுவாக வேரூன்றிய நாட்டில் இந்த ஜாதிக் கட்சிகளின் தேவை மிக அவசியமானது. இந்த ஜாதிக் கட்சிகளினால் ஏற்படும் பாதிப்புகள், இவை மேற்கொள்ளும் மிரட்டல் அரசியல், அதனால் விளையும் பிரச்சினைகள் – இவையெல்லாம் ஏற்கத்தக்கவை அல்ல. ஆனால் இதன் இன்னொரு பக்கமாக, இந்த ஜாதிக் கட்சிகளே தங்கள் ஜாதிக்குரிய தேவைகளை, பிரச்சினைகளை மிகத் தீவிரமாக முன்வைக்கின்றன. இவை இல்லாவிட்டால் இப்பிரச்சினைகளெல்லாம் மக்கள் மன்றத்தின் முன் வராமலேயே போயிருக்கக்கூடும்.

அதிலும் இந்தியாவில், மிக நுணுக்கமான கலாசாரத்தைப் பின்னணியாகக் கொண்ட மீச்சிறிய ஜாதிகளின் பெயர்கள்கூட பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. எனவே இது போன்ற ஜாதிகளின் தேவைகளை முன்வைக்கும் கட்சிகளின் அரசியல் ஒட்டுமொத்த நோக்கில் மிக முக்கியமானது.

இதே கருத்தை சில அமைப்புகளுக்கும் சில குழுக்களுக்கும் விரிவுபடுத்தலாம். மூன்றாம் பாலினத்தவர்கள் தங்கள் குரலை ஒட்டுமொத்தமாக ஒரு குழுவாக முன்வைக்காமல் நாம் அவர்களை ஒருநாளும் புரிந்துகொண்டிருக்கமுடியாது. முதன்மைக் கட்சிகள் இத்தரப்பின் பக்கம் தங்கள் பார்வையைத் திருப்பவேண்டுமானால் இக்குழுக்களின் அழுத்தமும் தொடர் போராட்டமும் மிகவும் அவசியம்.

எனவே நாம் மீண்டும் மீண்டும் வெல்லும் கட்சிக்கு வாக்களிக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தால், சிறிய கட்சிகளின் நிலைப்பாட்டுக்கான மக்களின் பதில் என்ன என்பதை தெரிந்துகொள்ளமுடியாமலேயே போய்விடும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, சில ஊடகங்கள், சிறிய கட்சிகளுக்கு வாக்களிப்பதை, கிட்டத்தட்ட செல்லாத வாக்குகளாகவே சித்திரிக்கப் பார்க்கின்றன. ஏற்கெனவே முதன்மைக் கட்சிகளுக்கு மட்டுமே வாக்களிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் உள்ள வாக்காளர்கள், வேறு எதையும் சிந்திக்காமல் வெல்லும் இரண்டு கட்சிகளில் ஒன்றுக்கு வாக்களிக்கத் தயாராகிவிடுகிறார்கள்.

இது மக்களை அதிகம் சிந்திக்கவிடாமல் செய்யும் ஒரு பிரச்சினை. இதைக் கவனமாகக் கையாளவேண்டும். ஜாதிக் கட்சிகள் உள்ளிட்ட சில அமைப்புகள் முன்வைக்கும் அரசியலில் நமக்கு ஒவ்வாமை இருக்கலாம். அவர்கள் செயல்பாடுகளில் அராஜகங்கள் இருக்கலாம். இந்தப் பிரச்சினைகளை மீறி அவர்கள் முன்வைக்கும் ஒரு தரப்பின் குரல் மிகவும் இன்றியமையாதது. அக்குரல் நமக்கு ஏற்புடையது என்றால், மற்ற எல்லாப் பிரச்சினைகளையும்விட இப்பிரச்சினை நமக்கு முக்கியமானது என்று தோன்றினால், எக்கட்சி வெல்லும் எக்கட்சி தோற்கும் என்றெல்லாம் யோசிக்காமல், நம் கருத்தை ஒட்டிப் பேசும் கட்சி எத்தனை சிறியதாக இருந்தாலும் அதற்கு வாக்களிப்பதே நியாயமானது. அப்போதுதான் பல்வேறு குரல்கள் ஒலிக்கும் ஒரு வெளியாக தேர்தல் அரங்கம் மாறும். அதுவே ஜனநாயகத்துக்குத் தேவையானது. இனியாவது அதை நோக்கிப் பயணிப்போம்.

Share

Comments Closed