அதிமுகவின் ஐந்து வருடங்கள் – தேர்தல் களம் 2016 – தினமலர்

ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்குமான முக்கியமான வேறுபாடுகள் என்று யோசித்துப் பார்த்தால், முடிவெடுப்பதில் உறுதி, வழவழா கொழகொழா இல்லாத அணுகுமுறை, தீவிரவாதம் எவ்வகையில் வந்தாலும் அதை தீவிரமாக எதிர்ப்பது, உறுதியான தலைமை, திறமையான நிர்வாகம், கட்சியை கட்டுக்கோப்புக்குள் வைத்திருப்பது, எந்த ஒரு சமூகத்தையும் அவமதிக்காதது, ஓட்டரசியல் மற்றும் தாஜா அரசியலில் ஈடுபடாதது ஆகியவற்றைச் சொல்லலாம். இவற்றுக்காகத்தான் கருணாநிதியை விடுத்து ஜெயலலிதாவை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். இவற்றைவிட்டால் இவர்களுக்கிடையே பெரிய அளவில் வேறுபாடுகள் இல்லை. சொல்லப்போனால் இவை தவிர இன்னும் சில விஷயங்களில் கருணாநிதியே முன்னிலை பெறுவார் என்பதே உண்மை. ஆனால் இந்த ஐந்தாண்டுகளில் இவை எல்லாம் காணாமல் போயின என்பதே கசப்பான உண்மை.

ஒவ்வொரு முறை ஜெயலலிதா ஆட்சிக்கு வரும்போதும் திமுக ஆட்சியில் அதிருப்தியில் இருக்கும் சாமானியனின் கனவு, ‘இந்தமுறை ஜெயலலிதா மிகச்சிறப்பான ஆட்சி தருவார்’ என்பதாகவே இருக்கும். உண்மையில் ஜெயலலிதா நினைத்திருந்தால் குஜராத்தின் மோதியைவிட மிகச் சிறப்பாகச் செயல்பட்டிருக்கமுடியும். அதற்கான அத்தனை வாய்ப்புகளும் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் அவருக்கு இருந்தன. ஆனால் இந்த அற்புதம் நிகழவே இல்லை.

ஜெயலலிதா இந்த முறை ஆட்சிக்கு வந்தபோது கடும் மின்வெட்டு நிலவியது. இப்போது அது நிச்சயம் குறைந்திருக்கிறது. ஆனால் அடுத்த ஐந்தாண்டுகளில், பத்தாண்டுகளில் தமிழகம் எதிர்கொள்ளத் தேவையான, அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எவையும் நிறைவேற்றப்படவில்லை.

சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது அரசு கிட்டத்தட்ட முடங்கியே கிடந்தது. அந்த மூன்று நாள்களுக்குப் பிறகு நிவாரணத்திலும், நோய்கள் பரவாமல் தடுப்பதிலும் அரசு சிறப்பாகச் செயல்பட்டது என்பது உண்மைதான். ஆனால் இயற்கைப் பேரிடர் ஒன்றில் தேவையான போது அரசு சிறப்பாகச் செயல்பட்டிருக்கவேண்டும். இதுவரை இல்லாத மழைதான், எதிர்பாராத வெள்ளம்தான், ஆனாலும் அரசு தயாராகவே இருந்திருக்கவேண்டும்.

ஸ்டிக்கர் அரசியல் மக்கள் மனத்தில் ஏற்படுத்தியிருக்கும் வெறுப்பு கலந்த ஏளனத்தை அதிமுகவினரும் தலைமையும் புரிந்துகொண்டதாகக் கூடத் தெரியவில்லை. எதிலும் ஸ்டிக்கர் எங்கும் ஸ்டிக்கர். எங்கும் பேனர் எங்கும் விளம்பரம். பேனரை எல்லாக் கட்சிகளுமே இப்படித்தான் பயன்படுத்துகின்றன என்றாலும் அதிமுக அதீதம். ஓர் அரசின் சாதனைகளை விளம்பரப்படுத்தவேண்டியது அவசியம்தான். ஆனால் அதுவும் மிதமிஞ்சிப் போனது. அதிலும் குறிப்பாக சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர் மதுரை கணேசனின் உடலின்முன்பு ஜெயலலிதாவின் படத்துடன் 10 லட்ச ரூபாய் கொடுத்த வீடியோ கொடுமையின் உச்சம். அரசு சத்தமின்றி பத்து லட்சத்தைக் கொடுத்துவிட்டு அதை அரசு அறிவிப்பில் வெளியிட்டாலே போதுமானது.

இந்த ஆட்சியின் தொடக்கம் முதலே பல்வேறு மிரட்டல்களை அரசு சாமானிய மக்கள் பக்கம் நின்று எதிர்கொள்ளவில்லை. எங்கோ விஷமத்தனமாக எடுக்கப்பட்ட ஒரு படத்துக்கு மௌண்ட் ரோடே ஸ்தம்பித்தது. அரசு இதனை மென்மையாகவே கையாண்டது. அதேபோல் விஸ்வரூபம் திரைப்பட பிரச்சினையில் அரசு நியாயத்தின் பக்கம் நின்று உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. சிறுபான்மையினரின் ஓட்டரசியலில் இதுவரை ஈடுபட்டிராத ஜெயலலிதா இந்தமுறை தன் அணுகுமுறையில் கொஞ்சம் தளர்ந்துவிட்டாரோ என்று யோசிக்க வைத்த விஷயங்கள் இவை. ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளரான சோவே, துக்ளக் ஆண்டுவிழாவில் இதனைக் குறிப்பிட்டிருக்கிறார். சோவே குறிப்பிட்டிருக்கிறார் என்னும்போது இப்பிரச்சினையின் தீவிரத்தை ஜெயலலிதா உணரவேண்டும்.

கடந்த ஒன்றரை வருடங்களாக, குறிப்பாக பரப்பன அக்ரஹாரா தீர்ப்புக்குப் பின், ஆட்சி ஸ்தம்பித்துவிட்டது போன்ற ஒரு உணர்வே மேலோங்கியுள்ளது. அதிமுகவினர் தலைமையின் புகழ் பாடுவதை ஒரு பக்கமும், தன்னிச்சையாக செயல்படுவதை இன்னொரு பக்கமும் செய்துகொண்டிருக்கிறார்கள். அம்மா உணவகம், காவிரி நீர்ப் பிரச்சினையில் உறுதியான நிலைப்பாடு போன்ற சில நல்ல விஷயங்களைக் கூட இவர்கள் மறக்கடித்துவிடுகிறார்கள். நில அபகரிப்பைக் கட்டுக்குள் கொண்டு வந்த, தற்போது நடந்துமுடிந்த மகாமகத்தை சிறப்பாகக் கையாண்டது போன்ற அரசைத்தான் மக்கள் விரும்புகிறார்களே ஒழிய, எதையும் சாகவாசமாக எதிர்கொள்ளும் அரசை அல்ல. கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தத்தைக் கையாண்ட ஜெயலலிதாவைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்களே அன்றி, இப்படியான தலைவராக அல்ல.

கடந்த ஐந்தாண்டுகளில் அதிமுகவினர் எப்போது அதிகம் கேலி செய்யப்பட்டிருக்கிறார்கள், விமர்சிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பார்த்தால், ஸ்டிக்கர் விஷயம், ஜெயலலிதாவைக் கண்டாலே எம்.எல்.ஏக்களும் எம்.பிக்களும் காலில் விழுந்துவிடுவது, எப்போதும் ஜெயலலிதாவின் புகைப்படத்துடன் போஸ் கொடுப்பது, தொலைக்காட்சிகளில் எவ்வித ஆழமும் இல்லாமல் மேம்போக்காகப் பேசுவது, மையப்படுத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு – இவை போன்றவைதான். கட்சியை தன் கைக்குள் முழுவதுமாக வைத்திருக்கும் ஜெயலலிதா போன்ற ஒரு தலைவர் இதை ஒரே நாளில், ஆம், ஒரே நாளில் சரி செய்திருக்கமுடியும். ஆனால் அப்படி ஒன்று நிகழவே இல்லை.ஜெயலலிதாவின் வாழ்நாள் சாதனை என்பது தன்னுடைய உறுதியான செயல்பாட்டால் தீவிரவாதத்தையும் ரவுடியிஸத்தையும் கட்டுக்குள் வைத்திருந்ததுதான். இதுதான் அவரது பலம். அந்த உறுதியான செயல்பாட்டில் எவ்வித சுணக்கம் ஏற்பட்டாலும் அது நாட்டுக்கு நல்லதல்ல. அதன் விளைவு தேர்தலில் தெரியும். தெரியவேண்டும். 

Share

Comments Closed