விஜய்காந்த் ஒரு தலைவர்தானா – தேர்தல் களம் 2016 – தினமலர்

1996 சமயத்தில் ரஜினி தமிழ்நாட்டை அந்த ஆண்டவனாலும் காப்பாத்தமுடியாது என்று சொல்லியிருந்த நேரம். ஒரு மேடையில் மனோரமா ரஜினியைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். தலைவர்ர்ர்ர் என்ற அந்த புகழ்பெற்ற வசையின் ஊடாக அவர் சொன்னார், ‘தம்பி விஜய்காந்த். அவர் எந்தக் கட்சிலவேணா இருக்கட்டும். அவரை நான் பாராட்டுகிறேன்’ என்று. அன்று விஜய்காந்த் எந்தக் கட்சியிலும் இல்லை. திமுகவின் ஆதரவாளராகவே அவர் அப்போதெல்லாம் அறியப்பட்டார். பல நலத்திட்ட உதவிகளை தனிப்பட்ட அளவில் மக்களுக்குச் செய்து வந்ததைச் சுட்டியே மனோரமா அப்படிப் பேசினார்.

பின்பு விஜய்காந்த் அரசியலுக்கு வந்து தனிக்கட்சி தொடங்கியபோது அதிமுகவுக்கும் திமுகவுக்கும் ஒரு மாற்றை எதிர்பார்ப்பவர்களின் கருத்தாக மனோரமா சொன்ன கருத்தே இருந்து வந்தது. அவர்கள் விஜய்காந்தை நம்பினார்கள். கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே தன் திரைப்படங்களில் கட்சிக் கொடியைக் காண்பிப்பது, அரசியலுக்கு வருவதுபோன்ற வசனங்கள் என ஆரம்பித்திருந்தார் விஜய்காந்த். 96களில் ரஜினிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய ஆதரவு அன்று விஜய்காந்துக்கு இல்லை என்பதுதான் உண்மை. எனவே விஜய்காந்த் அரசியலுக்கு வந்தாலும் உடனடியாக அதிமுக மற்றும் திமுகவுக்கு ஒரு மாற்றாக ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவார் என்று யாரும் நம்பவில்லை.

ஆனால் ஒரு மாற்றாக மூன்றாவது கட்சி அளவிலாவது ஒரு கட்சி இருக்கவேண்டும். அப்போதுதான் காலப்போக்கில் வளர்ச்சிகண்டு, அரசியல் வெற்றிடம் உருவாகும்போது அது இரண்டாவது இடத்துக்கோ அல்லது ஆட்சிக்கோ வரமுடியும். இப்படி ஒன்று விஜய்காந்த் விஷயத்தில் நடக்கவே இல்லை.

விஜய்காந்த் அரசியலுக்கு வந்தபோதே அவர் இன்னொரு வைகோவாக்கப்படுவார் என்றே நான் நினைத்தேன். இன்று அவர் செல்லும்பாதை அவரை இன்னொரு வைகோவாக்கும் பாதைதான். பெரிய கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி வைக்கும் கட்சிகள் எப்போதும் முதலிரண்டு இடத்துக்கு வரமுடியாது. மிகத் தெளிவாகவே பெரிய கட்சிகள் காய் நகர்த்தி தங்களை இப்படி தக்க வைத்துக்கொள்கின்றன. அன்றைய தேவையைக் கருத்தில்கொண்டு நீண்ட காலப் பயனைப் பணையம் வைக்கின்றன சிறிய கட்சிகள். மதிமுக, பாமக வரிசையில் இன்று விஜய்காந்தின் தேமுதிக.

விஜய்காந்தின் ஆளுமை இன்னொரு பிரச்சினை. எம்ஜியார், கருணாநிதி, ஜெயலலிதா வரிசையில் விஜய்காந்தை வைக்க மக்கள் யோசிக்கும் வண்ணமே அவரது செயல்பாடு உள்ளது. பொதுவில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்ற நாகரிகம் சிறிதும் இன்றி நாக்கைத் துருத்துவதும் அடிக்க கையோங்குவதுமென அவர் தலைமைப் பண்பில்லாமல் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டே நிற்கிறார்.

திமுக, அதிமுகவை வெறுத்து வேறு மாற்று இப்போதைக்கு தேமுதிக மட்டுமே என்று நினைப்பவர்களே அவருக்கு வாக்களிக்கத் தயாராகிறார்கள். விஜய்காந்த் தன்னை தலைமைப்பண்புள்ள ஒரு தலைவராக நிலைநிறுத்திக்கொண்டிருந்தால் மிகப்பெரிய போட்டியை உருவாக்கியிருக்கமுடியும். தனிப்பட்ட பலவீனம், அதிலிருந்து மீள எடுத்துக்கொள்ளும் முயற்சிகளின் பலனாக உருவாகும் குழப்பங்கள், உடல்நிலை என எல்லாமே விஜய்காந்தை கிட்டத்தட்ட கைவிட்டுவிட்டன. இன்று விஜய்காந்துக்கு இருக்கும் ஒரே பிடி, ‘ஊழலை எதிர்க்கிறோம்’ என்று சங்கடமில்லாமல் பேசமுடியும் என்பதுதான். அதுவும்கூட அவர் இதுவரை ஆட்சியிலே இல்லை என்ற காரணத்தால்தான்.

ஒரு கூட்டத்தில் என்ன பேசுவது எப்படி பேசுவது என்று எதுவுமே இவருக்குத் தெரிவதில்லை. வெள்ளந்தியான தலைவர் என்று தேமுதிகவினர் சொல்லிப் பார்க்கிறார்கள். வெள்ளந்தித்தனம் என்பது கோமாளித்தனமல்ல. ஒரு யோகா நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றபோது அவர் செய்த முகபாவனைகளை என்னவென்று சொல்வது? மெட்ரோ ரயிலைப் பார்வையிட வந்தபோதும் இப்படித்தான். மோடியை சந்தித்துவிட்டு வெளியில் பத்திரிகையாளரிடம் பேச வந்தபோது அவரிடம் எக்குத்தப்பாகக் கேள்விகேட்ட நிருபரை நோக்கி ‘தூக்கி அடிச்சிருவேன்’ என்று சொன்னபோது அங்கிருந்து சத்தம் தெரியாமல் மெல்ல பொன்.ராதாகிருஷ்ணன் நழுவி ஓடியது இன்னும் என் மனச்சித்திரத்தில் அப்படியே உள்ளது.

இப்படி ஒரு தலைவரை மற்ற தலைவர்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள்? பிரேமலதாவுக்கு இருக்கும் அரசியல் புரிதலும் தெளிவும் விஜய்காந்துக்கு இல்லை. இத்தனைக்கும் திரைப்படங்களில் மிகத் தெளிவாக விஜய்காந்த் பேசி நடித்தவர்தான். இப்போதிருக்கும் பிரச்சினைகளில் இருந்து அவர் சீக்கிரமே மீண்டு, பொதுவெளியில் ஒரு தலைவருக்குரிய தகுதிகளை வெளிப்படுத்தவேண்டும். இல்லையென்றால் ஒரு கிண்டலுக்குரிய தலைவராகவே இவர் முன்னிறுத்தப்படுவார்.

இதனையும் மீறி கட்சிகள் இவரிடம் கூட்டணிக்காகத் தொங்கிக் கொண்டிருப்பது, சகித்துக்கொண்டாவது அவரிடம் உள்ள 6% ஓட்டைப் பெற்றுவிடவேண்டும் என்பதற்காகத்தான். 6% ஓட்டு என்பது இன்றைய நிலையில் முதலிரண்டு கட்சிகளின் வெற்றி தோல்வியை அப்படியே மாற்றிப் போடக்கூடியது. எனவேதான் இவரை இன்னும் கெஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். இன்று விஜய்காந்த் திமுக கூட்டணிக்கு ஒப்புக்கொண்டால் இன்னொரு வைகோவாக்கப்படுவார். ஆனால் உடனடிப் பலன் என்ற வகையில் சில இடங்களில் வெல்லமுடியும். ஒப்புக்கொள்ளாவிட்டால் இவரது எதிர்கால அரசியலுக்கு உதவலாம். ஆனால் இப்போது வரவிருக்கும் தேர்தலில் ஒரு இடத்தில்கூட வெல்லமுடியாமல் போகலாம். என்ன செய்யப்போகிறார் விஜய்காந்த்? யாருக்கும் தெரியாது. ஏனென்றால் விஜய்காந்துக்கே தெரியாது என்பதுதான் காரணம்.

Share

Comments Closed