மீண்டும் ஏன் திமுக தேவையில்லை – தேர்தல் களம் 2016 – தினமலர்

மீண்டும் ஏன் திமுக தேவையில்லை!

ஆளுங்கட்சிக்கு இயல்பாகவே எழும் எதிர்ப்பை எல்லா எதிர்க்கட்சிகளுமே தனது ஓட்டுக்களாகப் பார்க்கத்தான் செய்யும். ஜெயலலிதாவின் கடந்த ஐந்து வருட ஆட்சியில் மக்களுக்கு இன்னல்கள் பல ஏற்பட்டிருப்பதாக நம்பும் திமுக, அந்த வெறுப்பை தனது வெற்றிக்குப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறது. எதிர்க்கட்சி என்ற தகுதி இல்லாவிட்டாலும், தமிழ்நாட்டின் மிகப்பெரிய இரண்டாவது கட்சி திமுகதான். எனவே அதிமுகவுக்கு யதார்த்தமான மாற்று என்று பலரும் திமுகவைக் கருதும் வாய்ப்பு உள்ளது. இதை எவ்விதத்திலும் தவறவிட்டுவிடக்கூடாது என்பதகாவே திமுகவின் காய்-நகர்த்தல்கள் உள்ளன.

ஆனால், திமுகவின் 2006-2011 வரையிலான ஆட்சிக்காலத்தின் வெறுப்பை மக்கள் முற்றிலும் மறந்துவிடவில்லை. அதிமுகவின் மீதான சில கோபங்கள் இருந்தாலும், அந்த எதிர்ப்பு ஓட்டுக்கள் அப்படியே திமுகவுக்குப் போய்விடும் என்று நம்புவதற்கான எந்தச் சூழலும் இங்கே நிலவவில்லை.

திமுகவின் ஆட்சிகாலத்தில் நிலவிய கொடூரமான மின்வெட்டை நினைத்துப் பார்த்தாலே இப்போதும் வேர்க்கிறது. ஜெயலலிதா எப்படி அதைக் கையாண்டார், அதனால் அரசுக்கு ஏற்படும் செலவுகள் என்ன என்ன என்பதெல்லாம் கடைக்கோடி வாக்காளருக்கு ஒரு பொருட்டே இல்லை. இந்த ஐந்தாண்டுகாலத்தில் மின்வெட்டு மிகவும் குறைந்துவிட்டது என்ற ஒரு வரி உண்மை மட்டுமே அவர்களுக்கு முக்கியமானது.

அதேபோல் திமுக ஆட்சியில் ஐந்தாண்டுகளில் நிலவிய நில அபகரிப்பு இப்போதும் மக்களால் மிரட்சியோடுதான் பார்க்கப்படுகிறது. ஜெயலலிதாவின் ஆட்சியில் அமைச்சர்களுக்குக் கூட அதிகாரமில்லை என்பது ஒரு பக்கம் என்றால், கருணாநிதியின் ஆட்சியில் ஒவ்வொரு கவுன்சிலருக்கும் அதீத அதிகாரம் வந்துவிடும் என்பது இன்னொரு பக்கமாக உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களையும் மிரட்டல்களையும் நினைத்துப் பார்த்தால், தன்னிச்சையாகச் செயல்படாத அதிமுகவின் அமைச்சர்களே பரவாயில்லை என்ற எண்ணம் மக்களுக்குத் தோன்றிவிடுகிறது.

இன்று திமுக ‘ஊழலற்ற ஆட்சி’ என்பதைச் சொல்லிக்கொண்டிருக்கிறது. ஆனால் திமுகவின் அமைச்சர்கள் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது நடந்ததாகச் சொல்லப்பட்ட ஊழல்களை மறந்துவிடமுடியாது. இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சிக்கே முடிவு கட்டிய 2ஜி ஊழலில் இன்றளவும் திமுகவின் பங்கு பற்றிய வழக்கு முடிவுக்கு வந்துவிடவில்லை. இந்தியாவையே உலுக்கிய ஒரு வழக்கின் முக்கியக் குற்றவாளியாக திமுகவே உள்ளது.

இரண்டாண்டுகளுக்கு முன்பு ஈழப்பிரச்சினையைக் காரணம் காட்டி காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகிய திமுக, மீண்டும் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ளது. ஒரு கட்சி ஏற்கெனவே கூட்டணி வைத்து விலகிய கட்சியுடன் மீண்டும் கூட்டணி வைப்பது புதியதில்ல. ஆனால் இந்த இரண்டாண்டுகளில் எவ்வித மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லை என்னும்போது இதைப் பொருந்தாக் கூட்டணி என்றோ நிர்ப்பந்தக் கூட்டணி என்றோதான் பார்க்கவேண்டியுள்ளது. இந்த நிர்ப்பந்தம் எதன் மூலம் வந்தது என்பதையும் யோசிக்கவேண்டும்.

அரசியலில் வாரிசுகள் ஆட்சிக்கு வருவதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். கிட்டத்தட்ட எக்கட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல. என் வாரிசு அரசியலுக்கு வராது என்று சூளுரைத்தவரின் மகன் இன்று முதல்வர் வேட்பாளராகவே அக்கட்சியால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார். ஆனால் திமுகவில் வாரிசு அரசியல் பெரிய அளவில் பரிணாம வளர்ச்சி பெற்று ஒட்டுமொத்த குடும்பமும் கட்சியைக் கைப்பற்றியுள்ளது. எனவே திமுகவின் வாரிசு அரசியல் குடும்ப அரசியலாகிப் போயிருக்கிறது.

கருணாநிதிக்கு 92 வயது ஆகிறது. இன்றும் அவரே திமுகவின் முதல்வர் வேட்பாளர். கடந்த மைனாரிட்டி ஆட்சியின்போதே அவர் ஸ்டாலினை முதல்வராக்கியிருக்கவேண்டும். அப்போது இவர்கள் தயவில்தான் காங்கிரஸ் ஆட்சி மத்தியில் நடந்துகொண்டிருந்தது. எனவே இம்முடிவுக்கு காங்கிரஸ் எந்த வகையிலும் எதிர்ப்பு தெரிவித்திருக்காது. ஆனால் அந்த நல்ல சந்தர்ப்பத்தை கருணாநிதி தான் முதல்வராக இருக்கவே பயன்படுத்திக்கொண்டார். இதனால் இன்றளவும் ஸ்டாலின் முதல்வர் பட்டியலுக்கு வரவே இல்லை. ஸ்டாலின் முதல்வர் என்றால் திமுகவை மக்கள் ஓரளவு நம்ப வாய்ப்பிருக்கிறது. காரணம், ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்க்கலாமே என்று நடுநிலை வாக்காளர்கள் எண்ணக்கூடும்.

திமுகவின் இன்னொரு முக்கியமான பிரச்சினை, ஒரு குறிப்பிட்ட ஜாதியை, நாட்டின் பெரும்பான்மையான மதத்தை எப்போதும் தூஷித்துக்கொண்டே இருப்பது. ஒரு முதல்வர் இப்படி ஒரு குறிப்பிட்ட ஜாதி/மதம் மீதான காழ்ப்புணர்ச்சியை வெளிக்காட்டிக்கொண்டே இருப்பதுதான் திராவிட அரசியலின் முக்கியமான பிரச்சினை. நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு அம்மக்களின் பண்டிகையின் போது வாழ்த்து சொல்லாமலிருப்பதும், ஓட்டரசியலுக்காகவும் பெரும்பான்மை மக்களை இழிவுபடுத்தவேண்டும் என்பதற்காகவும் வேண்டுமென்றே சிறுபான்மை விழாக்களுக்கு வாழ்த்து சொல்வதுமென திமுக என்றுமே மக்களை ஜாதி ரீதியாகவும் மத ரீதியாகவும் பிரித்து வைக்கவே விரும்பியிருக்கிறது. இப்படி மக்களைப் பிரிக்க நினைக்கும் ஒரு தலைவரை எக்காரணம் கொண்டும் மீண்டும் முதல்வராக்கவேண்டிய அவசியமோ அவசரமோ அத்தனை மோசமான நிலையோ தமிழகத்துக்கு இப்போதைக்கு வந்துவிடவில்லை.

இதைப் புரிந்துகொண்டுதான் ஸ்டாலின் வேறு ஒரு கண்ணோட்டத்தை முன்வைக்கப் பார்க்கிறார். ஆனால் அது அவரது வீட்டுக்குள்ளே தடுக்கப்பட்டு விடுகிறது. காலமாற்றத்துக்கேற்ப மாறி, இளைஞர்கள் கையில் கட்சியை ஒப்படைத்துவிட்டு, வெறுப்பு அரசியலைக் கைவிட்டு, ஊழல்வாதிகளை வெளியேற்றி, புது ரத்தம் பாய்ச்சாத வரை திமுகவைத் தேர்ந்தெடுக்கவேண்டிய அவசியம் மக்களுக்கு இல்லை என்பதை திமுக உணரவேண்டிய தருணம் இது.

Share

Comments Closed