மக்கள் நலக்கூட்டணி

ஊரில் சொல்வார்கள், சும்மா இருந்த நான்கு பேர் சேர்ந்து ஒரு மடம் கட்டிய கதையை. மக்கள் நலக்கூட்டணியை இக்கதையுடன் நேரடியாக ஒப்பிட முடியாது என்றாலும், ஒருவாறு இப்படிச் சொன்னாலும் தவறில்லை. இவர்கள் ஆட்சியைப் பிடிக்கப் போகிறார்கள் என்று சொல்லும்போது, நிச்சயம் இக்கதையுடனே இவர்களை ஒப்பிடமுடியும். ஆனால் இக்கூட்டணியில் உள்ள நான்கு கட்சிகளும் சும்மா இருக்கும் தலைவர்கள் அல்ல என்பது உண்மைதான். இவர்களுக்கென்று தெளிவான கொள்கைகள் உள்ளன. ஒருவருக்கொருவர் கொள்கைகளில் வேறுபட்டாலும், அதிமுக மற்றும் திமுகவுக்கு மாற்று என்ற வகையில் ஒரு கூட்டணியின் கீழ் ஒன்றுபடுகிறார்கள்.

கம்யூனிஸ்ட்டுகளும், மதிமுகவும், திருமாவளவனும் இணையும் புள்ளி, அதிமுக மற்றும் திமுகவுக்கு மாற்று என்றாலும், இவர்கள் இணையும் மற்றொரு புள்ளி என, முற்போக்காளர்கள் என்பதைச் சொல்லாம். பொதுவாக அடிப்படைவாதத்துக்கு எதிராகவே முற்போக்கு என்பது உருவாகி வந்திருந்தாலும், புழக்கத்தில் முற்போக்கு என்ற வார்த்தைக்கு அதற்குரிய பொருள் இல்லாமலேயே போய்விட்டது. இன்றைய நடைமுறையில் இந்த முற்போக்கு என்பது, ஹிந்து எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு, சிறுபான்மை ஓட்டரசியல், மறைமுக/நேரடி பயங்கரவாத ஆதரவு என்பவற்றின் கலவையாகவே ஆகிவிட்டது.

ஊழலை விட்டுவிட்டு, இன்று இந்தியாவை உலுக்கும் பிரச்சினைகள் எவை என எடுத்துக்கொண்டு அவற்றின் பின்னணியை ஆராய்ந்தால், அங்கே எல்லாம் முற்போக்காளர்களின் பங்களிப்பு இருப்பதைப் பார்க்கலாம். நேரடியாகவோ மறைமுகமாகவே இந்திய தேசியமும், ஹிந்து மதமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாதவைப் பார்க்கலாம். மக்கள் நலக்கூட்டணியில் உள்ள கட்சிகள் இந்தப் புள்ளியில் மிகக் கச்சிதமாக ஒன்றிணைகிறார்கள். இந்த மக்கள் நலக்கூட்டணிக்கு முன்பு இவர்கள் ஒரு கூட்டியக்கமாக இருந்தபோது ஜவாஹிருல்லாவும் இக்கூட்டியக்கத்தில் இருந்தார் என்பது முக்கியமான தகவல்.

அதிமுக மற்றும் திமுகவுக்கு மாற்று என்று சொல்லும் கட்சிகள், இதற்கு முன்பு தொடர்ச்சியாக மாறி மாறி அதிமுக மற்றும் திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்கள். மாறி மாறி அதிமுகவையும் திமுகவையும் ஊழல் கட்சிகள் என்று திட்டித் தீர்த்திருக்கிறார்கள். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ஏதோ ஒரு ஊழல் கட்சிக்குத் துணையாக இருந்துவிட்டு, அந்த ஊழல் கட்சிகள் ஆட்சிக்கு வர உறுதுணையாக நின்றுவிட்டு, இன்று அதிமுகவுக்கும் திமுகவுக்கும் மாற்று என்கிறார்கள். இவர்களின் நம்பகத்தன்மை இங்கேயே முடிந்துபோய்விடுகிறது.

இதிலுள்ள இன்னொரு குழப்பம், இந்தத் தேர்தல் முடியும்வரையிலாவது இவர்களது உறுதி நிலைக்குமா என்பதுதான். உண்மையில் மக்கள் நலக்கூட்டணி உருவானபோது, ஒரு கூட்டணியாக திமுகவுடன் தொகுதி பேரம் பேசுவார்கள் என்றே நான் நினைத்தேன். இன்னும் சிலர் இவர்கள் அதிமுக வெல்லவேண்டும் என்ற நோக்கிலேயே இக்கூட்டணியைத் தொடங்கியிருக்கிறார்கள் என்றார்கள். விடுதலைச் சிறுத்தைகள் அதிமுக வெல்லட்டும் என நினைக்குமென்று நான் நம்பவில்லை. இப்போதும் நம்பவில்லை. ஆனால் நான் எதிர்பார்த்ததுபோல் இவர்கள் திமுகவுடனும் கூட்டணி வைக்கவில்லை.

மதவாதக் கட்சியுடன்  கூட்டணி கிடையாது என்றும் இவர்கள் பேசுகிறார்கள். ஆனால் வைகோ ஏற்கெனவே பாஜகவுடன் கூட்டணியில் இருந்தவர். இனிமேல் அவர் பாஜக பக்கம் போகவே மாட்டார் என்பதற்கும் எவ்வித உறுதியும் கிடையாது. இவர்கள் தவம் கிடந்து அழைத்த விஜய்காந்தும் பாஜகவுடன் கூட்டணி வைத்தவர்தான்.

அப்படியானால் இக்கட்சிகளின் உறுதியான நிலைப்பாடுதான் என்ன? ஒன்றுமில்லை. இவர்கள் ஒரு மூன்றாவது அணியை உருவாக்கப் பார்க்கிறார்கள். ஏற்கெனவே மூன்றாவது கட்சி என்றளவில் தேமுதிக இருக்கும்போது, இது நான்காவது அணியாகவே இருக்கமுடியும். பல்வேறு நிலைப்பாடுகள், பல்வேறு நோக்கங்கள் உள்ள கட்சிகள் இணைந்து ஒரு தேர்தலை சந்திப்பதே கடினம் என்ற நிலையில், இவர்களின் கூட்டணி என்று வேண்டுமானாலும் உடைந்துபோகலாம். இரண்டு வருடங்களுக்கு முன்பு இருந்த கூட்டணியான பாஜக-மதிமுக-தேமுதிக-பாமக இன்று இல்லை. இதுவேதான் மக்கள் நலக்கூட்டணிக்கு நேரும் நிலையாகவும் இருக்கப்போகிறது.

நடக்கப்போது சட்டமன்றத் தேர்தலில் இக்கூட்டணியின் பலம் என்பது என்னவாக இருக்கும்? இவர்கள் ஒரு இடத்தில் கூட வெல்லமுடியாது என்றே நான் நினைக்கிறேன். அதிமுக-திமுகவுக்கு மாற்று தேவை என்ற எண்ணம் பெரும்பாலானவர்களிடையே இருக்கிறது உண்மைதான். ஆனால் அது மூன்றாவதாக ஒரு மாற்றுக் கட்சியைத் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு முழுமையான வடிவம் பெறவில்லை. காரணம், மக்களைக் கவர்ந்திழுக்கும் தலைமை ஒன்று உருவாகிவரவில்லை. எனவே மக்கள் நலக்கூட்டணியில் உள்ள கட்சிகள் எங்கெல்லாம் கொஞ்சம் காலூன்றி உள்ளதோ அங்கெல்லாம் வாக்கைப் பிரிக்கும் ஒரு கூட்டணியாக மட்டுமே செயல்படும். அதை மீறி இத்தேர்தலில் இவர்களது பங்களிப்பு என வேறொன்றும் இருக்காது.

தேர்தல் முடிந்ததும் எத்தனை தொகுதிகளில் மக்கள் நலக்கூட்டணியால் அதிமுக தோற்று திமுக வென்றது என்றும், திமுக தோற்று அதிமுக வென்றது என்றும் ஆய்வு செய்ய இக்கூட்டணி உதவலாம். இது ஒரு சுவாரயஸ்மான ஆய்வாக இருக்கும். பொழுது போகும். மக்கள் நலக் கூட்டணிக் கட்சிகளுக்கும் இப்படித்தான், பொழுது போகிறது.

Share

Comments Closed