1990கள் வாக்கில் நான் என் அம்மாவுடன் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தேன். அப்போது ஒரு சில குறிப்பிட்ட ஊர்களுக்கு பேருந்துகள் செல்லாது என்று அறிவித்தார்கள். எதோ ஜாதிக் கலவரமாம் என்று என் அம்மா என்னிடம் சொன்னார். எனக்கு அந்த சிறிய வயதில் ஒன்றும் புரியவில்லை. ஆனால், என் கையை இறுகப்பிடித்திருந்த என் அம்மாவிடம் ஒரு பதற்றத்தை மட்டும் உணரமுடிந்தது.
பின்னர் அக்கட்சி பாட்டாளி மக்கள் கட்சியாக வளர்ந்தது. செல்லுமிடமெல்லாம் வெற்றி என்று கொண்டாடினார்கள். திமுக அதிமுக என மாறி மாறி தவம் கிடந்து பாமகவை கூட்டணிக்கு அழைத்தார்கள். பாமக இருக்கும் கூட்டணியே வெற்றிக்கூட்டணி என்று ராமதாஸ் அறிவித்தார். எல்லாம் சட்டென மாறிப்போனது. இரண்டு அடுத்தடுத்த தேர்தல்களில் பாமக இருந்த கூட்டணிகள் தோல்வி கண்டன. பாமக பெரும் தோல்வி கண்டது. பாமக ஒரு தேவையற்ற கட்சி என்பதை மிகவும் தாமதமாக உணர்ந்துகொண்டன தமிழகத்தின் முதன்மைக் கட்சிகள்.
ஆனால் பாமக இங்கேதான் சட்டென சுதாரித்துக்கொண்டது. அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததன் மூலம் பாமக தன் கட்சிக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொண்டுவந்தது. அன்புமணி இத்தேர்தலில் முதல்வர் ஆவாரா மாட்டாரா என்பதெல்லாம் ஒரு கேள்வியே இல்லை. ஆனால் தமிழக அரசியலில் எதிர்காலத்தில் ஏதேனும் ஒரு வெற்றிடம் தோன்றினால், அன்புமணி தவிர்க்கமுடியாத ஒருவராக இருப்பார். அதற்கான விதையை இன்று பாமக பலமாக ஊன்றியிருக்கிறது.
பாமகவை ஒரு ஜாதிக்கட்சி என்று சொல்லி புறக்கணிக்கமுடியாத அளவுக்கு முக்கியமான சமூகப் பிரச்சினைகளை தொடர்ந்து கையிலெடுத்துப் போராடி வந்திருக்கிறது. அவற்றில் முக்கியமானது மது ஒழிப்பு.
தமிழகத்தில் மது ஆறாக ஓடுவதற்கு அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் காரணம். இவர்களோடு கூட்டணி வைத்துக்கொண்டு, மது ஒழிப்பை நிர்ப்பந்தம் செய்யாத கட்சிகளும் காரணம்தான், பாமக உட்பட. ஆனால் பாமக மது ஒழிப்பை, மற்ற கட்சிகள் போல போலியாக முன்வைக்கவில்லை. அதிலும் கடந்த ஐந்து வருடங்களாக, மது அருந்தாவர்கள் எல்லாம் வரி செலுத்தவேண்டும் என்று ஒரு சட்டம் வந்துவிடுமோ என்று அஞ்சும் அளவுக்கு அதிமுக நடந்துகொண்டு வருகிறது. திமுக இப்போது திடீரென மது ஒழிப்பைக் கையில் எடுத்திருக்கிறது. இதை அரசியல் என்று மட்டுமே பார்க்கமுடியும். பாமகவைப் போல உறுதியான தொடர்ச்சியான நிலைப்பாடாக இதை கொள்ளமுடியாது.
அதேபோல் தொடர்ச்சியாக மாதிரி நிதிநிலை அறிக்கையை பாமக வெளியிட்டு வந்துள்ளது. அரசியலில் இதுபோன்ற ஒன்றை ஒரு கட்சி தொடர்ச்சியாகச் செய்து வருவது முக்கியமானது. அதேபோல் அரசியல் மேடைகளில் அன்புமணி திராவிட பாணியில் வெட்டி வீர முழக்கங்கள் செய்வதில்லை. ஆக்கபூர்வமாகப் பேசுகிறார்.
இப்படி சில நம்பிக்கை தரும் விஷயங்கள் இருந்தாலும், பாமகவைப் பின்னுக்குத் தள்ளுவது, என்ன இருந்தாலும் பாமக ஒரு ஜாதிக்கட்சிதானே என்ற எண்ணம்தான். தலைவர்கள் எதையோ சிந்தித்து பேசிக்கொண்டிருக்க தொண்டர்கள் முன்னெடுக்கும் அரசியல் ஜாதியை சுற்றியே உள்ளது என்பதுதான் காரணம். தமிழ்நாட்டில் நிலவும் ஜாதியப் பிரச்சினைகளில் பாமகவின் பெயரும் அடிக்கடி அடிபடுவதும் இன்னொரு காரணம். என் அம்மா என் கையைப் பிடித்திருந்தபோது அவருக்கு இருந்த பதற்றம், மெல்லிய வடிவில், இது போன்ற செய்திகளைக் கேட்கும் அனைவருக்குள்ளும் பரவுகிறது. இதுவே பாமகவின் ஆகப்பெரிய பலவீனம்.
தங்கள் கொள்கைகளை பரப்ப வேண்டி எந்த எல்லைக்கும் சென்று சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு சவால் விடுப்பது இன்னுமொரு பலவீனம். புகைபிடிக்கும் / மது அருந்தும் காட்சிகள் திரைப்படங்களில் வரக்கூடாது என்பது நல்ல எண்ணம்தான். ஆனால் அப்படி வரும் திரைப்படங்களை அச்சுறுத்தல்மூலம் முடக்கப் பார்ப்பது தவறான வழி.
பாபா திரைப்படம் வந்தபோது இப்படித்தான் பாமக ரஜினியை எதிர்கொண்டது. அப்போது பாமக உள்ள கூட்டணியே வெல்லும் என்ற மாயை நிலவியதால் ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் பெரிய அளவில் பாமகவைக் கண்டிக்கவில்லை. என்றென்றும் புன்னகை என்றொரு திரைப்படம் வந்தது. படம் முழுக்க குடிக்காட்சிகள்தான். இதை தயாரித்தவர் பாமகவைச் சேர்ந்த ஜி.கே.மணியின் மகன் ஜி.கே.எம். தமிழ்க்குமரன். இதை எதிர்த்து பாமக எவ்வித ஆர்ப்பாட்டமும் செய்யவில்லை. இது ஒரு பெரிய சறுக்கல் அல்லவா?
இதுபோன்ற விஷயங்களில் பாமக சட்ட ரீதியான அமைதியான போராட்டங்களின் மூலம் மக்களின் மனத்தை மாற்றும் செயல்களில்தான் ஈடுபடவேண்டும். அச்சுறுத்தல்மூலம் பிரச்சினையை அடக்க நினைக்கக்கூடாது. அப்போதுதான் மேடைதோறும் ஆக்கபூர்வமான அரசியலை முன்வைக்கப் போராடி வரும் அன்புமணியின் செயல்பாட்டுக்கு நியாயம் கற்பிக்கமுடியும். இல்லையென்றால் படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில் என்றாகிவிடும்.
அதேபோல் சொன்ன வாக்கைக் காப்பாற்றுவதிலும் பாமக கவனம் கொள்ளவேண்டும். இனி திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டு, அதிமுக மற்றும் திமுகவுடன் அவர் கூட்டணி வைத்திருக்கிறார். இனி அப்படி நிகழாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். இல்லை என்றால், பாமகவின் மீது இருக்கும் கொஞ்சநஞ்சம் நம்பிக்கையும் போய்விடும்.
இதைவிட முக்கியம், இத்தனை ஆக்கபூர்வ அரசியல், மது ஒழிப்புப் போராட்டம் ஆகியவற்றுக்குப் பின்னரும் தொடரும் ஜாதிய அரசியல் என்ற முத்திரையை முற்றிலும் ஒழிக்க, செய்யவேண்டிய சமூகக் கடமைகள் என்ன என்பதை யோசித்து அவற்றைச் செயல்படுத்துவது. இல்லையென்றால் பாமக இப்படியே ஓட்டைப் பிரிக்க அல்லது முதன்மைக் கட்சிகளை ஆட்சியில் அமர்த்த உதவும் ஒரு கட்சியாகவே நிலைபெற்றுவிடும். ஜாதிக் கட்சி முத்திரையுடன் தொடர்ந்து செயல்பட்டு இப்படியே இருப்பதா அல்லது திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக பொதுவான கட்சியாக வளர்வதா என்பதே இப்போது பாமக முன் உள்ள கேள்வி. இரண்டில் எது நடந்தாலும் தமிழ்நாட்டுக்கு நல்லதுதான்.