காதலும் கடந்து போகும்

காதலும் கடந்து போகும் படம் பார்த்தேன். சிறு குறிப்பாவது எழுதி வைக்கவில்லையென்றால் பெரிய பாவம். நேற்று முழுவதும் இப்படத்தின் நினைவுதான். சில படங்கள் ஏனென்று தெரியாமல் மிகவும் நமக்குப் பிடித்துப்போய்விடும். அப்படி ஒரு படம் இது.

பாலுமகேந்திராவின் நவீனமான ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் ஓர் உணர்வு. கொஞ்சம் லாஜிக்கையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு எவ்வித அழுத்தமும் இன்றி படத்தைப் பார்க்கமுடிந்தால் நிச்சயம் உங்களுக்குப் பிடித்துப் போகும். இப்படி எல்லாராலும் பார்க்கமுடியாது என்பதுதான் மைனஸ் பாயிண்ட்.

அநியாயத்துக்கு மெல்ல போகிறது படம். கதை என்று எதுவும் கிடையாது. மெல்ல மெல்ல உருவாகி வரும் நட்பு காதலாகி கடைசியில் எப்படி முடிகிறது என்பதைத் தாண்டி ஒன்றுமில்லை. விஜய் சேதுபதியும் மடோனாவும் படத்தின் உயிர். இவர்கள் இருவர் மட்டும்தான் படம் முழுக்க. படத்தை எங்கேயோ கொண்டுபோய்விட்டார்கள். அட்டகாசமான தரமான நடிப்பு. மடோனாவை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று பார்த்தால், ப்ரேமம் படத்தில் வரும் நடிகை! இன்னும் பிடித்துப் போய்விட்டது. இவருக்காகவே இன்னொரு முறை பார்க்கலாம். தொடர்ச்சியாக திறமையான அழகான நடிகைகளின் படங்களைப் பார்க்கிறேன். மடோனா, இறுதிச் சுற்று ரித்திகா சிங்.

விஜய் சேதுபதி சென்னை வட்டார வழக்கையே எல்லா படங்களிலும் தொடர்ந்து பேசி ஒரு எரிச்சலை வரவைத்து விட்டார். இந்தப் படத்திலும் தொடக்கத்தில் அப்படித்தான் இருந்தது. ஆனால் மெல்ல மெல்ல நம்மை இழுத்துக்கொண்டு விட்டார். இடைவேளைக்குப் பிறகு அவரது நடிப்பு இன்னொரு லெவல்.

பின்னணி இசை பிரமாதம். ஆனால் பாடல்கள் என்ற பெயரில் வசனத்தையே அதுவும் எல்லாப் படங்களில் ஒரே ராகத்தில் இழுத்து இழுத்துப் பேசுவதையே செய்துகொண்டிருக்கிறார் சந்தோஷ் நாராயண். உன் பேர் ஊர் என்ன என்றால் வசனம். ஊஊஊன்ன்ன்ன்ன் பேஏஏஏர்ர்ர்ர்ர் ஊஊஊஊஊர்ர்ர்ர்ர் என்ன்ன்ன்ன்னா என்றால் பாடல் என்பது அநியாயம். அதுவும் ஒரே ராக இழுவையில்.

இதெல்லாம் போக இன்னொரு அட்டகாசமான நடிப்பு – விஜய் சேதுபதியுடனே வரும் ஒருவரின் நடிப்பு. (அவர் பெயர் மணிகண்டன் போல.) மிகச் சில காட்சிகள்தான். ஆனால் அப்படி ஒரு யதார்த்தம். அதுவும் க்ளைமாக்ஸில் விஜய் சேதுபதி கலக்குகிறார் என்றால் இந்த நடிகர் ஒரு பங்கு மேலே போய்விட்டார். இவரைப் போன்ற நடிகர்களைப் பார்த்து பிடித்து இயக்குநர்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். நான் இப்பதிவை எழுதுவதே இந்நடிகரைப் பாராட்டத்தான்.

எதிர்பாராமல் மறக்கமுடியாத ஒரு படம். நிறைய லாஜிக் பிரச்சினைகள், கேள்விகள் உண்டு. ஆனாலும் படம் ஒரு தென்றல் போல வருடிச் செல்கிறது. க்ளைமாக்ஸ் பதற்றத்தையும் பரிதாபத்தையும் கொண்டு வருகிறது. கிட்டத்தட்ட மூன்றாம் பிறையின் க்ளைமாக்ஸ் அளவுக்கு.

வாழ்த்துகள் நலன் குமாரசாமி. ஆனால் இப்பாதை உங்களுக்கு வேண்டாம். தமிழ்நாட்டில் இப்படி நாலு படம் எடுத்தால் உங்களால் வெற்றி இயக்குநராக வலம்வரமுடியாது. ஏனென்றால் வெல்லும் இயக்குநர்களுக்குத்தான் ஒரு மரியாதை. எனவே சூது கவ்வும் போலவோ மற்ற புது இயக்குநர்களின் ஜிகர்தண்டா, பிசாசு, மெட்ராஸ் போலவோ முயற்சி செய்யவும். நல்ல வெல்லக்கூடிய ஒரு படம். அதுவே பாதுகாப்பானது.

Share

Comments Closed