ஊடக இந்தியாவும் உண்மையான இந்தியாவும்

ஜவர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த இந்திய எதிர்ப்புக் கோஷங்களைத் தொடர்ந்து பலரும் ‘நான் தேசத் துரோகிதான்’ என்று சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். இதுவும் விருதைத் திருப்பித் தருதல் அளவுக்குப் போகும் என்றே நினைக்கிறேன். தேசத் துரோகிதான் என்று சொல்லாதவர்கள் மட்டுமே தேசத் துரோகிகள் என்று அழைக்கப்படப்போகும் நாள் தூரத்தில் இல்லை. மிகத் தெளிவாக இந்தியாவின் முகத்தை வரையறுக்கும் விலைபோன ஊடகங்கள் வெளிநாடுகளில் இதையே தலைப்புச் செய்தியாக்கும்.

 

Custom Image

 

காங்கிரஸின் ஆட்சிக்காலத்தில் எப்படி ஊடகங்களிலும் கருத்தைப் பரப்பும் இடங்களிலும் இந்திய எதிர்ப்பாளர்களும் வெறுப்பாளர்களும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள் என்பதை கண்கூடாகப் பார்க்கும் காலம் இது. மோதியின் ஆட்சி தொடங்கியதில் இருந்தே இந்தியா ஒரு சகிப்பின்மையில் சிக்கித் தவிப்பதாக இவர்கள் தொடர்ந்து பிரசாரம் செய்துவருகிறார்கள். எந்த ஒரு பிரச்சினையும் மிகச்சரியாக இந்த சகிப்பின்மையில் முடியலாம். யாராவது ஒரு வி ஐ பி சம்பந்தமே இல்லாமல் திடீரென சகிப்புத்தன்மையைப் பற்றிப் பேசுவதைப் பார்க்கலாம். உடனே அங்கிருந்து பற்றிக்கொள்ளும்.

ஆனால் இதெல்லாம் இனிமேல் எடுபடுமா எனத் தெரியவில்லை. இன்றைய உலகம் இரண்டாகப் பிரிந்துகிடக்கிறது. ஒன்று, கருத்துக்களை உருவாக்கி அதை நம்பி அதையே வழிபடும் சோஷியல் நெட்வொர்க் – மீடியா உலகம். இன்னொன்று, இவற்றோடு தொடர்பே இல்லாத மக்களின் உலகம். இந்த மக்களின் உலகம் வழியேதான் மோதி வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தார். ஏனென்றால் ஷோஷியல் நெர்வொர்க் உலகம் பாஜக தனித்து ஆட்சிக்கு வரும் என்று ஒருமுறைகூட சொல்லவில்லை.

இந்த இரண்டு உலகங்களுக்கு இடையே உள்ள இடைவெறி பிளந்து கிடக்கிறது. இதை எப்படியாவது குறுக்கி தங்கள் கருத்தே மக்களின் கருத்தாக மாற்ற இவர்கள் தொடர்ந்து போராடுவார்கள். சில சமயம் வெற்றியும் கிடைக்கக்கூடும். இங்கேதான் நாட்டுக்காகவும் அறத்துக்காகவும் பேசுபவர்கள் கவனமாக இருக்கவேண்டியது.

அறம், நாடு போன்றவற்றைப் பேசுவதே முட்டாள்தனம், பிற்போக்குத்தனம் என்பதை இவர்கள் மீண்டும் மீண்டும் சொல்வார்கள். ஆனால் அதீத நாட்டுப்பற்று பொதுமக்களிடம் என்றுமே தவறாகப் பார்க்கப்பட்டதில்லை. ஒரு கல்லூரியில் இந்திய எதிர்ப்புப் பேச்சு தேவையில்லை என்று சொல்வதிலோ ஒரு பல்கலைக்கழகத்தில் இந்திய தேசியக்கொடி பறக்கவேண்டும் என்று சொல்வதிலோ எவ்வித சுந்திரப்பறிப்பும் இல்லை. இவையெல்லாம் இயல்பாக இருந்திருக்கவேண்டும். இந்தியாவைக் கொண்டாடிக்கொண்டே இருக்க சொல்லவில்லை. இந்திய விமர்சனம் என்பது தேவையானதுதான். ஆனால் அதன் பின்னணி என்ன என்று ஆராய்வது முக்கியமானது. அது இந்தியாவின் வளர்ச்சியை நோக்கியதா அல்லது இந்தியா உடையவேண்டும் என்ற ஆசையின் வெளிப்பாடா எனப்தைப் புரிந்துகொள்ளவேண்டும். இதற்கு பிஎச்டி தேவையில்லை. மிக மேலோட்டமாகவே புரிந்துகொள்ளலாம்.

இந்தியா உடையவேண்டும் என்று கம்யூனிஸ்ட்டுகள் விரும்புவதாக நான் சொல்லவில்லை. ஆனால் இந்தியா உடைந்தால் இவர்களுக்கு எவ்வித அக்கறையும் இல்லை. அல்லது அதில் இவர்கள் நலன் பாதிக்கப்படும் என்றால் மட்டுமே கவலைப்படுவார்கள். ஏன் கம்யூனிஸ்ட்டுகளைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால், மற்றவர்கள் இந்தியாவைப் பயன்படுத்தி தங்களை முன்னேற்றவே முயல்கிறார்கள். ஆனால் கம்யூனிஸ்ட்டுகளுக்கு இந்தியாவில் இது சாத்தியமில்லை. எனவே இந்திய வெறுப்பு எதிர்ப்புக் குழுக்களோடு கை சேர்த்துக்கொள்கிறார்கள். அதனால்தான் எங்கெல்லாம் இந்திய எதிர்ப்பும் வெறுப்பும் புரண்டோடுகிறதோ அங்கே கம்யூனிஸ்ட்டுகள் முற்போக்காளர்கள் என்ற போர்வையில் உலா வருகிறார்கள். ஒவ்வொரு இந்திய வெறுப்புக்குப் பின்பும் அதற்கான பின்புலத்தை மிகப்பெரிய அளவில் உலகமே ஏற்கும் வண்ணம் வாதத்தை உருவாக்கித் தருவதில் இவர்கள் பெரிய பங்காற்றுவார்கள்.

சாதாரணமாகக் கேட்கும் யாரும் இவர்கள் கருத்தில் உள்ள ‘நியாயத்தை’ ஏற்றுக்கொண்டு விடுவார்கள். அது பல்வேறு கருத்தாங்களால் உருவாக்கப்பட்ட ஒரே நியாயமாக இருக்கும் – இந்தியாவுக்கு எதிராக இருப்பதுதான் அது.

இந்தியாவைத் துண்டாடவேண்டும் என்பது இவர்களுக்கு தேச விரோதப் பேச்சாகத் தெரியாது. மாறாக கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானதாகத் தோன்றும். ஒரு ஜனநாயக நாட்டில் எவ்வித சுதந்திரமும் ஒரு எல்லைக்குக் கட்டுப்பட்டதே என்பது இவர்களுக்குத் தெரியும். ஆனாலும் அதை மறைத்துக்கொண்டு ஒட்டுமொத்த சுதந்திரம் என்றே பேசுவார்கள். இவர்கள் முன்வைக்கும் மாற்று என்பது ஒட்டுமொத்தமாக மனிதர்களை அடிமையாக்கும் ஒரு கருத்தாக்கமாக இருக்கும். ஆனால் அதையே உலகத்தின் சிறந்த ஒன்று என்று பல்வேறு மொழியில் பல்வேறு குரலில் சொல்லிக்கொண்டிருப்பார்கள். இவர்கள் விரும்பும் இந்திய முகத்தையே மீண்டும் மீண்டும் ஊடகங்களில் காட்டுவார்கள். ஆனால் உண்மையான இந்தியாவோ எப்போதும்போல் அமைதியாகவும் நாட்டுப்பற்று உடையதாகவும்தான் இருக்கும்.

ஜே என் யு விவகாரத்தில் அமைதியாக இருந்த மாணவர்களை அரசு கைதுசெய்துவிடவில்லை. மிகத் தெளிவாகவே இந்தியாவுக்கு எதிரான வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவைத் துண்டாக்குவோம் என்பதும் அப்சல்கள் முளைப்பார்கள் என்பதும் கருத்துச் சுதந்திரம் இல்லை. அப்பட்டமான இந்திய எதிர்ப்புக் கோஷங்களே. இந்த விஷயத்தில் அரசுத்தரப்பில் இருக்கும் ஒரே பிரச்சினை, கன்னையாவின் பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமே. அதை அரசு கவனமாகவே கையாளவேண்டும். ஓர் அரசுக்கு எல்லாப் பொறுப்புகளும் உண்டு, கன்னையா போன்றவர்களைக் காப்பது உட்பட. தேவைப்பட்டால் கல்லூரிகளில் எவ்விதமான அரசியல் நடவடிக்கைகளுக்கும் தடைவிதிக்கலாம். இதையும் கருத்துச் சுதந்திர எதிர்ப்பென்றும் பிற்போக்கென்றும் சொல்வார்கள். படிக்கப்போன இடத்தில் படி என்ற காலம்காலமான நம் நம்பிக்கையைச் செயல்படுத்தினாலே போதும். மற்றவை கல்லூரிகளில் இருந்தும் பல்கலைக்கழக்கங்களில் இருந்தும் வெளியே இருக்கட்டும்.

மோதி அரசு முற்போக்காளர்களின் இந்த மிரட்டலுக்கெல்லாம் அசரக்கூடாது. இத்தனை நாள் தங்கள் வசமிருந்த பிடி நழுவும்போது வரும் பதற்றம் இது. மேலும் பல்வேறு பிரிவினைவாத சக்திகள் ஒன்றிணைந்து எது அவர்களுக்கு வேண்டுமோ அதைச் செய்யத் துடிக்கும்போது இப்படித்தான் எதிர்ப்புகள் நிகழும். எது இந்திய விரோதம் என்பதை அரசு இவர்களுக்குத் தெளிவாகவே காட்டவேண்டும். இந்த எதிர்ப்பெல்லாம் மோதி அரசுக்கு நன்மையையே கொண்டுவரும். ஏனென்றால் மக்கள் உலகம் என்றுமே நாட்டுப்பற்றுக்கு ஆதரவானதாகவும் எதிர்ப்பு சக்திகளுக்கு எதிரானதாகவே இருக்கும். ஊடகம் உருவாக்கும் மாயையை எதிர்கொள்வதும் முக்கியமான சவாலே. ஊடகங்கள் சொல்லும் கருத்தில் தனக்கு வேண்டியதை மட்டுமே இந்த அரசு கவனத்தில்கொள்ளவேண்டும். மற்றவற்றைப் புறம்தள்ளி நாட்டின் வளர்ச்சியை முன்வைத்து நாட்டுப்பற்று, இந்திய ஆதரவு போன்ற விஷயங்களை முன்னிறுத்தியே செயல்படவேண்டும். நாட்டுப்பற்று என்பது இழிவானதல்ல. அதை இழிவு என்று சுற்றி வளைத்துச் சொல்லும் போலி முற்போக்காளர்களே இழிவுக்குரியவர்கள்.

Share

Comments Closed