வெங்கட் சாமிநாதன் – கண்ணீர் அஞ்சலி

பத்து வருடங்களுக்கு முன்பு வெங்கட் சாமிநாதனை எனக்குப் புத்தகங்கள் வழியாகவே மட்டும் தெரியும். திண்ணையில் அவரது கட்டுரைகளை வாசித்திருந்தேன். இலக்கிய கலை தொடர்பான அவரது கட்டுரைகளில் அவரது அனுபவங்களையும் பரந்த ஞானத்தையும் கண்ட நான் அவரது அரசியல் தரப்பை சரியாக முடிவுசெய்யாமல் விட்டிருந்தேன். எனி இந்தியன் பதிப்பகத்துக்காக வெங்கட் சாமிநாதனின் புத்தகங்களைப் பதிப்பிக்க முடிவு செய்திருந்தார்கள். அது தொடர்பாக அவரிடம் பேசி அவர் தரும் கட்டுரைகளைக் கொண்டுவந்து ஒழுங்கு செய்யவே நான் அவரை முதன்முதலாகச் சந்திங்கச் சென்றேன். நெல்லையிலிருந்து சென்னைக்கு வந்த புதிது என்பதால் பலமுறை அழைத்து வழிகேட்டு அவரது வீட்டுக்குச் சென்றேன்.

வீட்டின் வராண்டாவில் சாய்வு நாற்காலியில் வேட்டி கட்டிக்கொண்டு துண்டு போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார். அது முதன்முறை ஒரு எழுத்தாளருடனான சந்திப்பு போலவே இல்லை. மிக அன்பாக உபசரித்தார். என் வீட்டைப் பற்றி, குடும்ப சூழல் பற்றி, ஊரைப் பற்றிப் பல விஷயங்களைக் கேட்டுக்கொண்டார். மாமி காப்பி கொண்டுவந்து கொடுத்தார். எத்தனை மறுத்தும் குடித்தே ஆகவேண்டும் என்று வற்புறுத்தி வெசா குடிக்க வைத்தார். அவர் தந்த கட்டுரைகளின் பிரதிகளைப் பெற்றுக்கொண்டேன். சில கட்டுரைகளை மின்னஞ்சலில் அனுப்பி வைத்தார். எல்லாவற்றையும் ஒழுங்கு செய்து மெய்ப்புப் பார்க்கத் தொடங்கி ஐம்பது பக்கங்கள் பார்த்ததும் அவரை அழைத்து ‘வீட்டுக்கு வரலாமா’ என்று கேட்டேன். என் சந்தேகங்களையெல்லாம் மஞ்சள் நிற ஹைலைட்டரில் குறித்துக்கொண்டு வீட்டுக்குப் போனேன்.

vesa_haranprasanna1

வழக்கம்போல மாமி காப்பி கொண்டு வந்து கொடுத்தார். வெசா ‘சந்தேகங்களை போனிலேயே கேட்டிருக்கலாமே’ என்று சொல்லிக்கொண்டே என்னிடமிருந்த குறிப்புகளையெல்லாம் ஒருதடவை பார்த்துவிட்டு ‘என்னய்யா, முப்பது வருஷம் கழிச்சு எனக்கு தமிழே தெரியாதுன்னு சொல்ல வந்திருக்கீறாய்யா’ என்றார். சிரித்துக்கொண்டேதான் சொன்னார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அப்படியெல்லாம் இல்லை சார் என்றேன். ‘அதான் மஞ்சள் மஞ்சளா போட்டிருக்கிறே’ என்று சொல்லிவிட்டு அவரது மனைவியிடம் ‘தமிழ் தெரியலைன்னுட்டார். பேசாம இங்கிலீஷ்லயே எழுதிக்கிட்டு இருந்திருக்கலாம்’ என்றார். நான் ‘இல்ல சார், வரிகளெல்லாம் தொங்கல்ல இருக்கமாதிரி இருக்கு’ என்றேன். கொஞ்சம் நேரம் யோசித்துவிட்டு ‘நீயே திருத்திக்கோய்யா’ என்றார். அவற்றைத் திருத்தி மீண்டும் அவருக்கு அனுப்பி வைத்தேன். ‘இனிமே ப்ரூஃப் பார்க்கறப்போ என்னைக் கேக்கவேண்டாம்யா, நீரே திருத்திக்கோரும். தமிழ் உஸ்தாத்யா நீர்’ என்றார். பின்னர் அவரது புத்தகங்களின் தலைப்புகளெல்லாம் சரியாக இல்லை என்றேன். எனக்காக யோசித்து அவர் வைத்ததுதான் ‘யூமா வாசுகி முதல் சமுத்திரம் வரை’ என்ற தலைப்பு. ‘இந்தத் தலைப்பு ஓகேவாய்யா’ என்றார்.

அதன்பின் எனக்குத் தெரிந்ததெல்லாம் அன்பே உருவான ஒரு தாத்தாவின் உருவம் மட்டுமே. எப்போது சென்றாலும் காப்பி குடிக்காமல் அனுப்பமாட்டார். மாமி என் தலை தெரிந்ததுமே காப்பியுடன் வந்து நிற்பார். ‘மாமிக்கு ஒம்ம மேல பாசம்யா. நான் கேட்டா தரமாட்டா’ என்பார். மாமியும் அதே வேகத்தில் பதில் சொல்வார். பார்க்கவே அழகாக இருக்கும். ஒருமுறை துக்ளக் இதழை உடனே வாங்கிக்கொண்டு வரவில்லை என்று இருவருக்கும் சண்டை. ‘துக்ளக்கை புதன் கிழமையே படிக்கணுமா, வியாழக்கிழமை படிச்சா ஆகாதா’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். சோவின் மீது மிகப்பெரிய அபிமானம் வைத்திருந்தார் வெசா.

அதன்பின் புத்தகங்கள் தொடர்பாக அவரை அடிக்கடி சந்திக்க நேர்ந்தது. கணினியில் இகலப்பை, என் எச் எம் ரைட்டர் மூலம் டைப்படிப்பது எப்படி என்றெல்லாம் கேட்பார். கம்ப்யூட்டர் உஸ்தாத் என்பார். எனக்கு ஒண்ணுமே தெரியாது சார் என்றாலும் விடமாட்டார். போனில் அழைத்து வரலாமா என்று கேட்டால் ‘சும்மாதான்யா இருக்கேன், எப்பவேணும்னா வாங்க’ என்பார். நான் அப்போது எழுதிக்கொண்டிருந்த உலக / இந்தியத் திரைப்படங்கள் பற்றிப் பார்த்துவிட்டு ‘எனக்கும் சொல்லுங்க’ என்றார். அதிலிருந்து எப்போது திரைப்படம் ஒளிபரப்பானாலும் அவருக்கு ஒரு எஸ் எம் எஸ் அனுப்புவேன். சில படங்களைப் பார்த்துவிட்டு போன் செய்து ‘எப்பவோ பாத்ததுய்யா. நீர் மெசேஜ் அனுப்பலைன்னா பாத்திருக்கமாட்டேன்’ என்றெல்லாம் சொல்வார். இப்படியாக வெசா ஒரு நண்பர் போல ஆகிப்போனார். அவரிடம் என்ன பேசவேண்டும், எப்படி பேசவேண்டும் என்ற வேடங்களெல்லாம் மறைந்துபோனது. அவரும் யாரைப் பற்றியும் அவர் நினைக்கும் கருத்துகளை ஒளிவுமறைவின்றி சொல்லுவார். நானும் என் கருத்துகளைச் சொல்லுவேன். வெசா கருணாநிதி பற்றியும் அண்ணாத்துரை பற்றியும் திராவிட, கம்யூனிஸ்ட்டுகள் பற்றியும் கொண்டிருந்த வெறுப்பை எப்போதும் மறைத்ததில்லை. பேச்சிலும் சரி, எழுத்திலும் சரி.

அ.மார்க்ஸ் வெசாவின் எழுத்து மலம் துடைக்கத்தான் லாயக்கு என்று சொல்லி அதை இருமுறை மேடையில் செய்து காட்டியதாகச் சொன்னார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ‘ஆமாய்யா. ரெண்டு தடவைய்யா. அங்க மேடைல இருந்த யாரும் கேக்கலைய்யா’ என்றார். ஒரு மூத்த எழுத்தாளரும் அங்கே இருந்ததாகவும் அவரும் அதைப் பற்றி ஒரு கேள்விகூட கேட்கவில்லையென்றும் வருத்தத்துடன் சொன்னார். அந்த மூத்த எழுத்தாளர் வாழ்வின் விழுமியங்களில் நம்பிக்கை உடையவர் என்பது வெங்கட்சாமிநாதனின் எண்ணம். எனவேதான் அவருக்கு அவ்வருத்தம். ஒருமுறை அந்த மூத்த எழுத்தாளரைப் பார்க்க நேர்ந்தபோது அதைப் பற்றிக் கேட்டதாகவும், அவர் தான் அதை ஏற்கவில்லை என்று சொன்னதாகவும் சொன்னார். ஆனால் பொதுவில் சொல்லவில்லை என்பதையும் சொன்னார் வெசா.

vesa_haranprasanna2

வெசா எழுதிய ‘அக்ரஹாரத்தில் கழுதை’ பற்றிக் கேட்டேன். ‘படம் உங்ககிட்ட இருக்கா சார். இருந்தா பாத்துட்டு தந்துடறேன்’ என்றபோது, ‘நல்ல படமா பாக்கீரே, ஒமக்கு எதுக்குய்யா அந்தக் கொடுமை’ என்றார். ‘படத்தைக் கெடுத்தான்யா. சரி, ஒண்ணும் சொல்றதுக்கில்லை. என்னையும் இழுத்துவிட்டு… பழைய கதைய்யா… இப்ப எதுக்கு. ஆச்சா. புத்தகமாவும் வந்துச்சுய்யா’ என்றார். ‘டெல்லில எங்கயாச்சும் படம் இருக்கும். என்கிட்ட காப்பி இல்லை’ என்றார். அதற்குப் பல வருடங்கள் கழித்து நான் டெல்லி புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தபோது ஓர் இரவில் ஒரு சானலில் அக்ரஹாரத்துக் கழுதை ஒளிபரப்பானது. உடனே அவருக்கு மெசேஜ் அனுப்பினேன். பெட்டர் யூ ஸ்லீப் என்று ரிப்ளை அனுப்பினார். நான் முழுப்படத்தையும் பார்த்தேன். மறுநாள் தொலைபேசியில் அழைத்து ‘கொடுமைதான் சார்’ என்றேன். ‘அது ஒரு காலம்ய்யா’ என்றார். பேசிமுடித்துவிட்டு புத்தகக் கண்காட்சிக்குக் கிளம்பி லிஃப்ட்டில் கீழே இறங்கிவந்தால் அதே ஹோட்டலில் வெங்கட் சாமிநாதன் ரிஷப்சனில் உட்கார்ந்திருக்கிறார். என்னால் நம்பவே முடியவில்லை. ‘என்ன சார் இங்க’ என்றேன். இருவரும் ஒரே ஹோட்டலில் தங்கி இருந்துகொண்டே போனிலும் மெசேஜிலும் உரையாடியிருக்கிறோம். எதோ நாடகக் கமிட்டி ஒன்றின் தேர்வுக்காக வந்திருக்கிறார் போல. இரவு வந்து உங்களைப் பார்க்கிறேன் என்று சொன்னேன். ஆனால் அவர் அன்றே சென்னை செல்வதாக இருந்தது. போனில் அத்தனை பேசிவிட்டு மறுநாள் காலையில் அதுவும் டெல்லியில் அவரைப் பார்த்த இன்ப அதிர்ச்சி இன்னும் மீளவில்லை.

எனி இந்தியன் பதிப்பித்த புத்தகங்களுக்கான ராயல்டியை அவருக்கு அனுப்பி வைத்திருந்தோம். கிட்டத்தட்ட 30,000 ரூபாய்க்கும் மேல் இருக்கும் என நினைவு. மறுநாள் அவரை அழைத்து ராயல்டி வந்துவிட்டதா என்று கேட்டேன். எ ஸ்வீட் சர்ப்பரைஸ் என்றார். தனக்கு இதுவரை யாருமே இத்தனை பெரிய தொகையை அதுவும் ஒரே செக்கில் ராயல்டி தந்ததில்லை என்றார். மிகவும் ரகசியமாக ‘கோபால் ராஜாராம், பிகே சிவகுமார்கிட்டல்லாம் கேட்டுட்டீராவெ’ என்றார். அவங்களுக்குத் தெரியாம நான் எப்படி சார் தரமுடியும் என்றேன்.

அவர் சென்னையில் இருந்தவரை அடிக்கடி போன் செய்து பேசுவேன். எப்போது அழைத்தாலும் அப்போது மூன்று வயதே ஆகியிருந்த என் மகனின் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். சரியான வாலு போலய்யா என்பார். என் நண்பர் டாக்டர் பிரகாஷ் திருமணத்துக்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன். அபிராமைப் பார்த்ததும் உடல்வளைத்து மிக வளைத்து மிக மிக வளைத்து கிட்டத்தட்ட எல் போல வளைந்து அவனுக்கு வணக்கம் சொன்னார். சுற்றி இருந்த அத்தனை பேரும் அவரை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். என் அம்மாவுக்கு அவர் யாரென்றே தெரியாது. நாங்கள் கொடுத்த மரியாதையிலிருந்து அவர் பெரிய எழுத்தாளர் என்று மட்டும் புரிந்திருந்தது. இன்றுவரை என் அம்மாவுக்கு அவர் ‘குனிஞ்சு வணக்கம் சொன்னாரே அவரா’ என்பதுதான். அனைவரையும் சந்திப்பது என்பது வெசாவுக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம்.

கூகிள் குழுமம் ஒன்றில் அவரும் இருந்தார். அதில் தினம் தினம் மடல் உரையாடல்கள் நடந்த வண்ணம் இருக்கும். ‘எப்படிய்யா எல்லாருக்கும் இவ்ளோ நேரம் இருக்கு’ என்று எல்லோரையும் கேட்டுக்கொண்டே இருப்பார். பெரியவர் சிறியவர் வேண்டியவர் வேண்டாதவர் வேறுபாடின்றி திறமையைக் கண்டதோறும் அதனைப் புகழ்வார். எத்தனை தெரிந்தவர் என்றாலும் அவரால் ஒப்புக்கொள்ள முடியாத ஒன்றைக் கேட்டாலும் கண்டாலும் சீறுவார். சமீபத்தில் மிக சமீபத்தில்கூட மிக நல்ல நண்பரை அப்படிக் கடிந்துகொண்டார். கனவிலும் சமரசத்தை ஏற்காத மனிதர் வெசா. அவரது சீற்றம் எனக்கு அச்சுறுத்தலாகக்கூடத் தெரிந்தது. ஏன் இத்தனை சீற்றம் என்று. அப்போது நானும் அரவிந்தன் நீலகண்டனும் பேசிக்கொண்டோம் ‘சிங்கம்யா. வயசானாலும் சிங்கம்’ என்று. கடைசிவரை சமசரத்தின் நுனிகூடத் தொடாத சமரசத்தின் நிழல்கூடப் படியவிடாத ஒரு மனிதர் அவர். அவர் அவரையொத்த எழுத்தாளர்கள் வாழ்ந்த காலத்திலேயே அழிந்துவரும் நேர்மை இனமொன்றின் பிரதியாகத்தான் இருந்தார். அந்தப் பிரதி இன்று முற்றிலும் அழிந்துவிட்டது. இனி வெசா எவ்வகையிலும் சமரசமற்ற எழுத்தாளரின் பிரதியாகவே எக்காலத்திலும் நினைவுகூரப்படுவார்.

திராவிட இயக்கத்தின் போலித்தனங்கள், கம்யூனிஸத்தின் அடாவடிகளையெல்லாம் வெசா எக்காலத்திலும் ஏற்கவில்லை. எந்த ஒன்றைப் பற்றிப் பேசினாலும் அவர் திராவிட இயக்கத்தின் தீமையைச் சொல்லாமல் ஓய்ந்ததில்லை. அதற்கான ஆயிரம் ஆயிரம் காரணங்கள் அவரிடம் இருந்தன. அவரை முதன்முதலில் சந்தித்தபோதே இக்குரலை நான் கேட்டேன். ‘சரியான பிராமண வெறியரா இருப்பாரோ’ என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் சாதியின் பற்றில் துளிக்கூட கரையாதவர் அவர். சாதியின் கீழ்மைகள் எங்கிருந்தாலும் எச்சாதியில் இருந்தாலும் அதைச் சுட்டிக்காட்டத் தயங்காதவர். இனியொருவர் இப்படி செயல்படமுடியுமா என்பதே ஐயம்தான். இன்றைய உலகம் என்பது சமரசங்களின் உலகம் என்றாகிவிட்டது. குறைவான சமரசம் தவறில்லை என்றாகி, குறைவான சமரசம் இல்லாமல் வாழமுடியாது என்றாகிவிட்டது. சமசரசங்களுக்கான நியாயங்களைப் பட்டியலிடவும் தயாராகிவிட்டோம். இதை இழிசெயலாகவே வெசா என்றும் கருதினார். வெசாவின் வாழ்க்கைப்பாடம் என்பதே எனக்கு இதுதான். என்னால் இன்றுவரை இப்படி இருக்கமுடியவில்லை. நாளையும் இருக்கமுடியுமா என்று தெரியவில்லை. ஆனால் இப்படி ஒரு மனிதராக வெசா இருந்தார் என்பதை நான் வெளிப்படையாகவும் அந்தரங்கமாகவும் அறிவேன். வெசா உலகுக்கு விட்டுச் செல்வதும் இந்த சமரசமற்ற நேர்மையைத்தான்.

வெங்கட்சாமினாதனின் மனைவி இறந்தபோது துக்கம் கேட்க அவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். எத்தனை அன்னியான்னியமாக இருந்தவர்கள் என்பது எனக்குத் தெரியும். வெசா இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதும் இனி அவர் எப்படி தனியாக வாழப்போகிறார் என்பதுமே என் எண்ணமாக இருந்தது. வெசா வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்தார். உடன் க்ரியா ராமகிருஷ்ணன் இருந்தார். எனக்கு கிரியா ராமகிருஷ்ணனைத் தெரியாது. தன் மனைவி சட்டென ஐந்து நிமிடத்தில் இறந்ததைப் பற்றி வெசா சொல்லிக்கொண்டிருந்தார். ‘இனிமே எங்க இருக்கப்போறீங்க சார்’ என்று கேட்டேன். அன்றைய நிலையில் அக்கேள்வி எத்தனை அபத்தமானது என்று பிற்பாடு மிக மிக வருந்தியிருக்கிறேன். அத்தோடு நிற்கவில்லை என் அபத்தம். அவர் சொன்னார் ‘பையன் தன்கூட வரச்சொல்றான்யா. எனக்குத்தான் இந்த வீட்டைவிட்டுப் போக இஷ்டமில்லை’ என்றார். அப்போது அவர் மடிப்பாகத்தில் இருந்தார். அவரது மகன் பெங்களூருவில். என் அப்பாவுக்கும் இதேபோன்ற எண்ணம் இருந்தது. திருநெல்வேலியை விட்டு வரக்கூடாது என்ற எண்ணம். அது தந்த எரிச்சலா அல்லது வெசாவிடம் எனக்கிருந்த தாத்தா போன்ற பிம்பமா எதுவெனத் தெரியவில்லை, சட்டென்று சொன்னேன் ‘வயசானவங்களோட பிரச்சினை சார் இது. இங்க தனியா எப்படி இருப்பீங்க, பையன்கூட போங்க’ என்று சொல்லிவிட்டேன். சொன்ன மறுநொடியிலிருந்து என் மனம் அரிக்கத் தொடங்கியது. இதோ இந்நிமிடம் வரை அந்த குற்ற உணர்ச்சி இருக்கிறது. எந்த சந்தர்ப்பத்தில் அதுவும் யாரைச் சொல்லி இருக்கிறோம். அவர் பெங்களூரு செல்வதாக முடிவான உடனே எனக்கு போன் செய்து சொன்னார். அப்போது இதையெல்லாம் சொல்லி மன்னிப்புக் கேட்டுவிடலாமா என்று யோசித்தேன். ஆனால் அவர் அதையெல்லாம் நினைவு வைத்திருப்பாரா என்ற சந்தேகமும் இருந்தது. கடைசிவரை மன்னிப்பே கேட்கவில்லை. கிரியா ராமகிருஷ்ணன் என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பார் என்றும் யோசிப்பதுண்டு. வெசா பெங்களூருக்கு போனபின்பும் தொடர்ந்து போன் செய்து பேசுவேன். எப்படி இருக்கிறார், அங்கே வாழ்க்கை எப்படி இருக்கிறது, மகனும் மருமகளும் எப்படி கவனித்துக்கொள்கிறார்கள் என்று பலவற்றைக் கேட்பேன்.

சிறிது நாள் போன் செய்யாமல் இருந்து பின்னர் அழைத்தால் ‘என்னய்யா மறந்துட்டீரா. பேஸ்புக்ல போடு போடுன்னு போடறீரே’ என்று தொடங்கி ‘என்னய்யா மனுஷன் அரவிந்தன் நீலகண்டன். படிச்சிட்டே இருப்பாராய்யா’ என்று தொட்டு ‘ஆச்சா. அப்ப அப்ப போன் பண்ணுமய்யா’ வரை பேசிவிட்டுத்தான் வைப்பார். எப்போது அவர் அழைத்தாலும் ‘நீங்கள்லாம் பிசியா இருப்பீங்க. நான் கிழவன்யா’ என்றுதான் தொடங்குவார். சமீபத்தில் அழைத்து எனி இந்தியன் பதிப்பித்திருந்த அவரது புத்தகங்களைக் கேட்டார். எப்படியோ தேடிப்பிடித்து வாங்கிக்கொடுத்தேன். அத்தனை நன்றி சொன்னார்.

ஒரு மாதத்துக்கு முன்பு அழைத்து சாதாரணமாகப் பேசிக்கொண்டிருந்தேன். என் புத்தகம் பற்றிப் பேச்சு வந்தது. புத்தகம் வந்து ஒரு வருடத்துக்கு மேல் ஆகியும் அவருக்கு அனுப்பவில்லை. உடனே அனுப்பச் சொன்னார். அனுப்பி வைத்தேன். சில நாள்களுக்கு முன்பு அழைத்து ‘சர்ப்பரைஸா இருக்கட்டும்னு சொல்லலய்யா. கணையாழில ரிவ்யூ வருது. உங்க புத்தகம் வேணும்னுட்டாங்க. அதான் இப்ப சொல்லவேண்டியதாப்போச்சு. அனுப்பி வையும்யா’ என்றார். ‘காலை அந்த வாறு வாறுரீரே, கதைல ஏன்யா இவ்ளோ சோகம்’ என்றார். அத்தனை சோகமா இருக்குன்றதே நீங்க சொல்லித்தான் தெரியும் என்றேன். உடனே அவரது ரிவ்யூவை எனக்கு அனுப்பி வைத்தார். அவரது விமர்சனம் வந்ததே நான் செய்த அதிர்ஷ்டம் என்று ஒரு வழக்கமான பதிலை அனுப்பி வைத்தேன். நான் சொன்னது உண்மைதான், என் அதிர்ஷ்டம்தான் அவரது விமர்சனம் சாதேவிக்குக் கிடைத்தது. ஆனால் அதைப் பற்றி எழுதி, அவர் எழுதிய விமர்சனத்துடன் என் தளத்தில் வெளியிட எண்ணி இருந்தேன். சென்ற வாரமே அதைச் செய்திருக்கவேண்டியது. ஸ்கேன் செய்த பக்கங்களின் அளவு பெரியதாக இருந்ததால் கொஞ்சம் சோம்பேறித்தனம் வந்துவிட்டது. ஆனால் இன்றோ வெசா இல்லை.

சில உலகத் திரைப்படங்களின் சிடியை கொடுத்திருக்கிறேன். சில புத்தகங்களைக் கொடுத்திருக்கிறேன். உடனே அழைத்து ‘என்னய்யா ஆளு நீ. இதையும் பாத்துட்டு படிச்சுட்டு எப்படிய்யா ரஜினியை புகழ முடியுது’ என்பார். முடியுதே சார் என்பேன். முடியக்கூடாதேய்யா, எதாவது ஒண்ணுதான சரியா இருக்கமுடியும் என்பார். உண்மையில் வெசா இதுதான். அவரால் இரண்டாக இருக்கமுடியாது. மீனுக்குத் தலையும் பாம்புக்கு வாலும் காட்டமுடியாது. பதவிக்காகவோ பணத்துக்காகவோ தன் நிலையிலிருந்து சற்றும் கீழிறங்க முடியாது. இனி இப்படி ஒருவரை காலம் நமக்கு அளிக்கவேண்டும் என்பதே நம் விருப்பமாகவும் வேண்டுதலாகவும் இருக்கவேண்டும். http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60609292&edition_id=20060929&format=html இந்தக் கட்டுரையை வாசியுங்கள், வெசாவின் ஒரு துளி என்றாலும் அது நீக்கமற நிறைந்துள்ளது. ஞானரதத்தில் வந்த இலக்கியச் சண்டைகள், யாத்ராவில் வந்தவை என அவரது காலத்தில் எழுதி அவர் விட்டுச்சென்றவை என்றைக்கும் புறக்கணிக்க இயலாத இலக்கியப் பிரதிகளாக இருக்கும். வெசா திராவிட எதிர்ப்பாளர் என்றும் கம்யூனிஸ எதிர்ப்பாளர் என்றும் தனிநபர் தாக்குதல்களைச் செய்பவர் என்றும் காதில் விழுவதெல்லாம் தங்கள் கொள்கையின் கீழே நின்று ஒலிக்கும் மேம்போக்கான குரல்களே. இக்குரல்களில் அவர்கள் உண்மையான வெசாவைக் கடந்து செல்ல முயல்வார்கள். வெசா கடுமையாக எழுதுபவரே அன்றி ஆபாசமாக எழுதியவரல்ல. கடுமையான விமர்சனம் என்பது இலக்கியத்தின் ஆதார சுருதி. அதை வெசா போன்று பலர் செய்யாமல் இருப்பதுதான் பிரச்சினையே அன்றி, பிரச்சினை வெசா அல்ல.

இதையெல்லாம் இன்று இழந்திருக்கிறோம். இத்தனையையும் மீறி மனம் என்னவோ இனி ‘ஆச்சா’ ‘என்னய்யா’ ‘கிழவன்யா’ என்ற குரலையோ விகசிப்பு, விழுமியம், விடம்பனம் போன்ற வார்த்தைகளையோ வெசாவிடமிருந்து பார்க்க/கேட்கமுடியாது என்பதையே நிறைவுசெய்யமுடியாத இழப்பாக நினைத்துக்கொள்கிறது. ஒரு பிதாமகனுக்குரிய கம்பீரத்துடனும் நேர்மையுடனும் இறைவனடி சென்றிருக்கும் வெசா என்றும் என் நினைவில் இருப்பார். அவருக்கு என் கண்கள் பனிக்க அஞ்சலி. இனியாவது இன்று உறங்கமுடியுமா என்று பார்க்கிறேன்.

Share

Comments Closed