மெஹர் Vs பாயம்மா

பிரபஞ்சனின் புனைவுகள் என்றாலே படிக்க எனக்குக் கொஞ்சம் தயக்கம்தான். ஆரம்பகாலங்களில் அவர் எழுதிய சில கதைகளைப் படித்ததனால் வந்த நடுக்கமாகவே அது இருக்கவேண்டும். அவரது கட்டுரைகளைப் படிப்பேன். இன்று அவரது சிறுகதையான பாயம்மாவைப் படித்தேன். விஜய் டிவி சித்திரத்தில் தாமிரா இயக்கத்தில் வெளியான மெஹர் என்னும் சித்திரத்தைப் பார்த்தபின்னர், அவரது இந்தச் சிறுகதையைப் படிக்க ஆர்வம் கொண்டு, இன்று படித்தேன். இந்த பாயம்மா கதை நற்றிணை பதிப்பகத்தில் வெளியிடப்பட்டிருக்கும் ‘யாசுமின் அக்கா’ என்னும் சிறுகதைத் தொகுப்பில் உள்ளது.

மெஹர் ஒரு நல்ல முயற்சி. தமிழில் இதுவரை முஸ்லிம்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் நேர்மையான ஒரு திரைமுயற்சி கூட வந்ததில்லை. மலையாளத்தில் பல படங்கள் இப்படி வந்துள்ளன. ஆனால் தமிழில் ஒரு படம் கூட இல்லை. எதாவது ஒரு கதாபாத்திரத்தின் பெயரை முஸ்லிம் பெயராக வைத்துவிட்டால் அது முஸ்லிம்களின் படமல்ல. அப்படி இருந்த ஒரு நிலையில் இந்த மெஹர் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லவேண்டும். அந்த அளவில் தாமிரா பாராட்டப்படவேண்டியவர். ஒரு திரைப்படத்தின் முக்கியப் பங்கு இப்படி யதார்த்தங்களை தன்னளவில் தொடர்ந்து பதிந்துகொண்டே இருக்கவேண்டும்.

இங்கே வரும் மெகா தொடர்களும் எந்த வகையிலும் பொருட்படுத்தத்தக்கவை அல்ல. முன்பு சுஹாசினி இயக்கிய சில குறுந்தொடர்களும், பாலுமகேந்திரா இயக்கிய குறுந்தொடர்களும் மட்டுமே பொருட்படுத்தத்தக்கவை. இதுபோன்ற ஒரு சித்திரம் முயற்சி முன்பு தூர்தர்ஷனிலும் நடந்தது. நீங்காத நினைவுகள் என்றொரு நாடகம் ஒளிபரப்பப்பட்டது. ஜெயபாரதி நடித்தது என்று நினைக்கிறேன். இன்னொரு நாடகம் ஜெய்சங்கர் நடித்தது. ஆனால் அவையெல்லாம் நல்ல முயற்சியாகக் கைகூடவில்லை.

இந்நிலையில் தாமிராவின் மெஹர் பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது. காரணம், அதன் தரம். இஸ்லாமியர்களின் வாழ்க்கைப் பதிவு. இந்த இரண்டுமே இச்சித்திரத்தை முக்கியத்துவம் பெற வைக்கின்றன. சல்மாவின் நடிப்பு மிக நன்றாக இருந்தது. அதைவிட சல்மாவின் மகனாக வருபவரது நடிப்பு அட்டகாசம். பவா செல்லத்துரைக்குக் குரல் கொடுத்தவரின் குரல் பொருந்திவரவில்லை என்பது ஒரு குறை. இன்னொரு குறை என்று சொன்னால், சரியாக கையாளப்படாத நெல்லை வட்டார வழக்கு. மாப்பிள்ளையின் அண்ணன், கடன் தர மறுத்து இரண்டாம் தாரத்துக்கு வாழ்க்கைப்படச் சொல்லும் இன்னொருவர் என இருவரும் மிக இயல்பு. பின்னணி இசை மிக அழகாக இருந்தது. கதைக்கு ஏற்றபடி எவ்வித உறுத்தலும் இன்றி கூடவே முழுக்கப் பயணித்தது.

சிறுகதை என்று பார்த்தால் பாயம்மா மிகத் தட்டையான கதை. நுணுக்கங்களெல்லாம் எதுவுமே இல்லை. தவறு செய்யத் தயாராக இருக்கும் ஒரு பையன், அவனுக்குள் எவ்விதப் போராட்டங்களும் இல்லை. கல்யாணத்துக்குப் பணம் வேண்டும் என்பதால் திருடுகிறான். பாயம்மாவே போலிஸிடம் சொல்கிறாள். வழக்கு வேண்டாம் என்று முதலாளி சொல்கிறார். முதலாளியே மனம் இறங்கி கல்யாணத்துக்குப் பணம் தருகிறார். ஆனால் பாயம்மா மறுத்துவிடுகிறாள். அவ்வளவுதான். இக்கதையைப் படிக்க நான் நினைத்த காரணமே, பிரபஞ்சன் இஸ்லாமியர்களின் பேச்சு வழக்கை எப்படி எழுதி இருக்கிறார் என்று தெரிந்துகொள்ளத்தான். என்னை ஏமாற்றவில்லை பிரபஞ்சன், பேச்சு வழக்கைத் தேடித்தான் கண்டுபிடிக்கவேண்டும்!

ஒரு குறிப்பிட்ட இனத்தினரின் சாதியினரின் கதையை எழுதுவதில் உள்ள சவால் இது. ஆனால் பிரபஞ்சன் கதையை மட்டுமே கவனத்தில்கொண்டு, இதைப் பற்றியெல்லாம் கவலையே இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக அல்லா, யாரசூல், நிக்காஹ் போட்டு நிரப்பிவிட்டார். அதில் மோனே மோளே என்றும் ஒரு வரியில் ’என்னண்டயே சதாய்க்கிறியே’ என்றும் வருகின்றன. இங்கேதான் தாமிராவின் திறமை மின்னுகிறது.

ஒரு எழுத்துப் பிரதியை எப்படி திரைமொழியாக்குவது என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு. மிக அழகாக நிர்ப்பந்தங்களை உருவாக்குகிறார் தாமிரா. தன்மொழியில் தேவைப்படும்போதெல்லாம் சொல்லத் தொடங்கி பார்ப்பவர்களுக்கு ‘அவன் திருடினாலும் தப்பே இல்லை’ என்ற எண்ணத்தைக் கொண்டுவருகிறார். இந்த எண்ணமே பாயம்மா எடுக்கப்போகும் முடிவுக்கு ஓர் அழுத்தத்தைத் தருவது. இவையெல்லாம் சிறுகதையில் இல்லை. பாயம்மா ஒரு சிறிய கதை, அவ்வளவுதான். ஆனால் மெஹர் பல நுணுக்கங்களைத் தொட்டுப் போகும் படைப்பு. பாயம்மா சிறுகதை பாயம்மாவை ஒரு படி மேலேற்றுகிறது. ஆனால் மெஹர் பாயம்மாவுக்கும் அவருக்கு இணையாக அவரது மகனுக்கும் ஓர் இடத்தை வழங்குகிறது. மெஹரின் முடிவு கொஞ்சம் பிரசாரத்தனத்தோடு முடிகிறது. பாயம்மாவின் முடிவோ ஒரு லட்சியத்தோடு முடிகிறது. இரண்டுக்கும் அடிநாதம் ஒன்றுதான். அந்த அடிநாதம் மெஹரில் மட்டுமே மிக அழகாக பல இடங்களில் தொட்டுச் செல்லப்பட்டிருக்கிறது.

தாமிராவின் இந்த மெஹர் பாராட்டப்படவேண்டிய முயற்சி. ஒரு சிறிய கதையின் பொறியே போதும், ஒரு சிறந்த திரைமொழியை உருவாக்க முடியும் என்று காட்டுவதற்கு. அதுமட்டுமல்ல, அந்தப் பொறி எவ்விதத்திலும் புதுமையாக இல்லாமல் இருந்தாலும் (பாயம்மாவின் கதையில் எவ்விதப் புதுமையும் இல்லை) திரை உருவாக்கத்தில் கதையைப் பின்னுக்குத் தள்ளி காட்சி அனுபவத்தைப் பல மடங்கு உயர்த்த முடியும் என்பதற்கும் மெஹர் இன்னுமொரு எடுத்துக்காட்டு.

பின்குறிப்புகள்:

01. ரெட்டைச்சுழி எடுத்ததற்காக தாமிராவை மன்னித்துவிடலாம்.
02. பாயம்மா கதையில் மோதிரத்தைத் திருடிக்கொண்டு ஓடும் பரசுராமன் கதாபாத்திரம் ஏன் மெஹரில் பரந்தாமன் ஆனது என்று புரியவே இல்லை. 🙂
03. மெஹர் சித்திரத்தின் மேம்படுத்தப்பட்ட பதிப்பும் பிரபஞ்சன் எழுதியதுதான் என்றால் – ஒருவேளை இப்படி இருந்தால் – பிரபஞ்சன் பாயம்மாவிலிருந்து மெஹருக்கு முன்னேறியிருக்கிறார் என்பதை ஒப்புக்கொள்கிறேன். 😛

Share

Comments Closed