டியூஷன் 3

கடைசியில் கொஞ்சம் சோகமாக முடியப்போகும் இந்த நிகழ்வை எழுதாமல் விட்டுவிடலாம் என்றாலும் மனம் கேட்கவில்லை. எனவே இது ஒரு க்ளிஷேவாக முடியப்போகும் பதிவுதான். திரையில் நாம் பார்க்கும் ஒரு க்ளிஷே காட்சியை எத்தனை இயல்பாக புறந்தள்ளிவிட்டுப் போனாலும், அதே காட்சி நம் கண்முன் நிகழும்போது அதை எதிர்கொள்வதில் நமக்குப் பல சவால்கள் இருக்கவே செய்கின்றன.

ஒன்றரை வருடத்துக்கு முன்பு அந்த இரட்டையர்களை அவர்களது அம்மா என் மனைவியிடம் டியூஷனுக்குக் கொண்டு வந்து சேர்த்தார். இரட்டையர்களுக்கு 13 வயது. மூத்தவன் 9ம் வகுப்பு படிக்கவேண்டிய பையன், வீட்டிலிருந்தபடியே நேரடியாக பத்தாம் வகுப்பு படித்தான். இளையவன் 8ம் வகுப்பு. (இந்த ஒரு வருட வகுப்பு வித்தியாசம் எப்படி வந்தது என்று தெரியவில்லை.) மூத்த பையன் பள்ளிக்குச் செல்ல மறுத்துவிட்டான். அவன் 8ம் வகுப்புப் படித்தபோது அவனுடன் படித்த மாணவர்கள் இவனை மிகவும் ஓட்டியதில் நொந்துபோய் பள்ளிக்கே செல்லமாட்டேன் என்று கூறிவிட்டான் என்று முதலில் சொன்னார்கள். கொஞ்சம் நானாக யூகித்ததில் பிரச்சினை கொஞ்சம் தீவிரம் என்றே எனக்குப் பட்டது. அவனை பாத்ரூமில் வைத்து உடன் படித்த சிறுவர்கள் செய்த கேலியால் மனம் நொந்திருப்பான் என்றே நினைக்கிறேன். அவனது அம்மா மெல்ல மெல்ல ஒவ்வொன்றாகச் சொல்ல சொல்ல, எனக்கு உருவான சித்திரம் இது. தன் மகனை எப்படி கேலி செய்யலாம் என்று கேள்வி கேட்கச் சென்ற அவனது அம்மா, பள்ளி தலைமை ஆசிரியரைப் பார்ப்பதற்கு முன்பாக, தன் மகனைக் கேலி செய்த பையனைப் பார்த்து திட்டியிருக்கிறார். கேலி செய்த பையனின் தந்தை, தன் மகன் செய்தது தவறே என்றாலும், எப்படி இன்னொரு பெண் நேரடியாக தன் பையனைத் திட்டலாம் என்று சண்டைக்கு வந்துவிட்டார். தான் செய்தது தவறுதான் என்று இந்த அம்மா ஒப்புக்கொண்டும் தலைமை ஆசிரியர் கடும் கோபமடைந்துவிட்டார் போல. ஒருவழியாக தலைமை ஆசிரியரிடம் மன்னிப்பு கேட்டு சமாதானப்படுத்தினாலும், இந்தப் பையன் இனி அந்தப் பள்ளிக்குப் போகமாட்டேன் என்று சொல்லிவிட்டான்.

வேறு பள்ளியில் சேர்த்துப் பார்த்திருக்கிறார்கள். பள்ளியைப் பற்றிய ஒவ்வாமை மனதில் குடிபுகுந்துவிட்டால், பள்ளி என்றாலே பையன் பயந்துவிட்டான். வேறு வழியின்றி வீட்டில் வைத்தே சொல்லிக் கொடுத்தார்கள். அப்பா நன்கு படித்து நல்ல வேலையில் உள்ளவர். அம்மாவும் நன்கு படித்தவரே. நல்ல வசதி, எனவே இதை எளிதாக எதிர்கொண்டார்கள். இரட்டையர்களில் இளையவன் எப்போதும்போல் பள்ளிக்குச் செல்ல, மூத்தவன் வீட்டிலிருந்தே படித்தான்.

இந்த சமயத்தில்தான் என் மனைவியிடம் இந்தப் பையனை டியூஷன் சேர்த்தார்கள். ஹிந்திக்கு மட்டும் முதலில் வந்தான். பையன் கொஞ்சம் பயந்தவன் என்பதால், அவன் டியூஷன் படிக்கும்போது அந்தப் பையனின் அம்மாவும் வீட்டுக்கு வருவார்கள். காலை 11 மணிக்கு டியூஷன். பையன் படித்துக்கொண்டிருக்கும்போது, இந்த அம்மா என் ஒன்றரை வயது மகளைத் தூக்கிக்கொண்டு கொஞ்சப் போய்விடுவார். ஒரு மாதத்தில் அந்தப் பையன் டியூஷனில் கொஞ்சம் சகஜமாகவும், இனி அவன் மட்டும் வரட்டும் என்று என் மனைவி சொல்லிவிட்டாள். அந்தப் பையனும் அதற்குச் சம்மதிக்கவும், அந்த அம்மாவுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இப்படியாவது தன் பையன் ஒரு வீட்டில் படிக்கவாவது ஒப்புக்கொண்டானே என்று.

கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் படித்தான். ஹிந்தியோடு, சமூக அறிவியல், தமிழும் (தனியாக) சேர்த்துப் படித்தான். காலை மாலை இருவேளையும் டியூஷனுக்கு வருவான். கணிதமும் அறிவியலும் அவனது அப்பாவும் அம்மாவும் சொல்லித் தந்தார்கள். கடந்த வாரம் பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதினான்.

இந்தப் பையனின் சிறப்பு, இதுவரை நான் எந்தப் பையனிடத்தும் காணாதது. ஒரு மணி நேரம் படி என்றால், அதில் ஒரு நொடி கூட வீண் செய்யாமல், பராக்கு பார்க்காமல், ஏமாற்றாமல் தொடர்ந்து படித்துக்கொண்டே இருப்பான். எனக்கோ ஆச்சரியமாக இருக்கும். பதினைந்து வயதில் இப்படி ஒரு காந்தியா என்று. ஒரு தடவை கூட அவன் ஏமாற்றி நான் பார்த்ததில்லை. ஸ்வீப்பிங் வரியாக இதனை எழுதவில்லை. உண்மையிலேயே சொல்கிறேன். ஒரு நிமிடம் அவன் படிப்பது கேட்கவில்லை என்றால், நான் வீட்டுக்குள் இருந்தவாறே, ‘என்னப்பா தம்பி தண்ணி குடிக்கிறயா’ என்று கேட்பேன். வராண்டாவில் படித்துக்கொண்டிருக்கும் அந்தப் பையன் எழுந்து வந்து பணிவாக ‘ஆமாம் அங்கிள்’ என்பான். அப்படி ஒரு பையன். என் பையனை பத்து நிமிடம் படிக்கச் சொன்னால் ஐந்து நிமிடம் ஏமாற்றி இருப்பான், ஐந்து நிமிடம் எப்படி ஏமாற்றுவது என்று யோசித்துக்கொண்டிருப்பான். இதுதான் சிறுவர்களின் இயல்பு. ஆனால் இந்தப் பையன் ஓர் அதிசயம். ஒரு நாள் இரண்டு நாள் என்றில்லை, எல்லா நாளும் இப்படியே.

கடந்த வாரம் ஒவ்வொரு தேர்வு முடியவும் போன் செய்து என் மனைவியிடம் எப்படி தேர்வு எழுதினான் என்று சொல்லுவான். அவன் அம்மா கூடவே சென்று அவன் தேர்வு எழுதும் வரை உடன் இருந்து கூட்டிக்கொண்டு வருவார். இரட்டையர்கள் இருவருக்கும் கிரிக்கெட் என்றால் பைத்தியம். பிராக்டிஸ் செய்கிறார்கள்.

இன்று காலை வந்த செய்தி என்னை நிலைகுலைய வைத்தது. அவன் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள், அங்கே நேற்று அந்த அம்மா மரணமடைந்துவிட்டார். 

இதைக் கேட்டதிலிருந்து எனக்கு எதுவுமே ஓடவில்லை. இந்த இரண்டு சிறுவர்களும் இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதே நினைப்பாக இருக்கிறது. இரட்டையர்களில் மூத்தவனுக்கு நேரெதிர் இளையவன். படு விவரம், படு சுட்டி. ஆனால் பணிவு மட்டும் அப்படியே அண்ணனைப் போல. இந்த இரண்டு சிறுவர்களை நினைக்கும்போதே பக்கென்று இருக்கிறது. அவர்களால் தாங்கமுடியாத துக்கம் இது. அந்த மூத்த பையன் பத்தாம் வகுப்பில் வாங்கப்போகும் மதிப்பெண்களைப் பார்க்காமல் போய்விட்டாரே என்றெண்ணும்போதே மிகவும் வருத்தம் மேலோங்குகிறது. அந்தப் பையனுக்காக அப்படி அலைந்தார் அந்த அம்மா. எப்படியும் இந்தப் பையன் நிச்சயம் நல்ல மதிப்பெண்கள் பெறுவான், அதில் ஐயமில்லை. ஒரு பையன் பதினைந்து வயதில் தாயை இழப்பதென்பதெல்லாம் கொடுமை.

இரண்டு மகன்களை நினைத்து அலையும் அந்த அம்மாவின் ஆன்மா அமைதியடையட்டும். வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை.

21.5.2015 அப்டேட்:  இன்று பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வந்துவிட்டன. இந்தப் பையன் 398 மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறான். அவன் அம்மா சொல்லித் தந்த அறிவியலில் 98 மதிப்பெண்கள்.

டியூஷன் 1 | டியூஷன் 2

Share

Comments Closed