அபிலாஷ் எழுதியதை முதலில் இங்கே வாசித்துவிடுங்கள்.
https://www.facebook.com/abilash.chandran.98/posts/10203521830711028
//கிழக்கு பதிப்பகம் வெளிப்படையாக தன்னை வியாபார நிறுவனமாய் அறிவித்துக் கொள்கிறது. அவர்களின் தரப்பு சுவாரஸ்யமானது. அவர்களுக்கு ஒரே முனை தான் – வருவாய். பேஸ்புக்கில் அப்பதிப்பகத்தின் ஹரன் பிரசன்னா விலை குறித்து ஒரு கருத்து சொல்கிறார். ஒரு நூலின் விலை பதிப்பகத்தின் தனிப்பட்ட முடிவு அல்லது நிலைப்பாடு சார்ந்தது என்கிறார். இதையும் கவனிக்க வேண்டும். பதிப்பு இன்று ஒரு குறிப்பிட்ட வர்க்கம் சார்ந்ததாக மாறி இருக்கிறது. அவர்களுக்கு என்று ஒரு பதிப்பு தரமும் விலையும் உள்ளது. விலையை குறைத்தால் பதிப்பகத்தால் அந்த வர்க்கத்தினருக்கு விசுவாசமாக இருக்க முடியாது. ஒரு பொருளை நாம் அதன் உள்ளடகத்திற்காக மட்டும் அல்ல, விலைக்காகவும் தான் வாங்குகிறோம். அதாவது அதிக விலைக்காகவே அதிக விலை கொடுத்து வாங்குகிறோம்.//
அபிலாஷ் சந்திரனின் வார்த்தை விளையாட்டைப் பற்றி சில வார்த்தைகள் சொல்லவேண்டும். இவற்றிலெல்லாம் ஆர்வமே இல்லாமல் போனாலும் சொல்லி ஆகவேண்டியுள்ளது.
மிக முக்கியமான விஷயம், ஹரன் பிரசன்னாவின் பதிப்பகத்தின் நிலைப்பாடு என்று சொல்கிறார் அபிலாஷ். இது என் நிலைப்பாடு மட்டுமே. கிழக்கு பதிப்பகத்தின் நிலைப்பாடு அல்ல. ஒருவேளை கிழக்கு பதிப்பகத்தின் நிலைப்பாடு நான் சொல்வதற்கு எதிரானதாகக்கூட இருக்கலாம் அல்லது நான் சொல்வதாகவேகூட இருக்கலாம். எனவே என் கருத்தை என் நிலைப்பாடு என்று மட்டும் வாசிக்கவும். இல்லை, இது கிழக்கு பதிப்பகத்தின் கருத்துதான் என்று நீங்கள் நினைத்துக்கொண்டால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல!
அபிலாஷ் அவரது வசதிக்கும் வாய்ப்புக்கும் வாழ்க்கைக்கும் ஏற்றதாய் பதிப்பகத்தின் புத்தகப் பதிப்பித்தலை இரண்டாகப் பிரித்துக்கொள்கிறார். அதாவது அதிகம் விலை வைத்துப் புத்தகம் பதிப்பிடுபவர்கள் இரண்டு பேர், ஒருவர் இலக்கியப் புத்தகப் பதிப்பாளர். இன்னொரு இலக்கியமன்றி வணிகப் புத்தகங்களைப் பதிப்பிக்கும் பதிப்பாளர். இலக்கியப் பதிப்பாளரின் வாசகர்கள் 500 பேர் மட்டுமே, எனவே அவர்கள் லாபத்துக்காக வேறு வழியின்றி புத்தக விலையை அதிகம் வைக்கிறார்கள். ஆனால் வணிகப் பதிப்பகங்களுக்கு விற்பனை கொட்டோ கொட்டென்று கொட்டியும் அதிக லாப நோக்கில் விலை அதிகமாக வைக்கிறார்கள், ஏனென்றால் விலை குறைவாக வைத்து குறைவான லாபத்தை அதிக அளவில் பெற்றுச் செயல்படும் வாய்ப்பு இருந்தும், ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் விசுவாசம் காரணமாக அப்படிச் செய்கிறார்கள், எனவே மற்ற வர்க்க எதிரிகள்.
இப்படி யோசிக்க ஒன்றுமே தெரியாமல் இருக்கவேண்டும் அல்லது குயுக்தி தெரிந்திருக்கவேண்டும்! அபிலாஷ் சந்திரனின் நிலைப்பாடுகளுக்குக் காரணம், அவர் இயங்கும் வெளியைப் பகைத்துக்கொள்ள முடியாது என்பதோடு, வணிகப் பதிப்பகங்களை வர்க்க விசுவாசப் பதிப்பகம் என்று சொல்வதன் மூலம் அவர்களைத் தனிமைப்படுத்தி விமர்சிக்க நினைப்பது. தன் விசுவாசத்தை மீண்டுமொருமுறையாகத் தெரியவைப்பது.
கொஞ்சம் யோசித்துப் பார்க்கலாம். இலக்கியப் புத்தகங்களின் வாசகர்கள் 500 பேர் என்பதால், அதிக விலைக்குப் புத்தகம் பதிப்பிக்கும் பதிப்பாளர்கள் 500 புத்தகங்களோடு (அல்லது இரண்டு மடங்காக வைத்து ஆயிரம் புத்தகங்களோடு) அக்குறிப்பிட்ட இலக்கியப் புத்தகத்தை அச்சிடுவதை நிறுத்தி விடுகிறார்களா? அல்லது 500க்கும் மேல் புத்தகம் பதிப்பிக்கும்போது, அவர்களது வாசகர்கள் பரப்பு முடிந்துவிட்டது என்பதைக் கருத்தில்கொண்டு, இனி குறைவாக விலை வைப்போம் என்று விலையைக் குறைக்கிறார்களா? முதலில் இந்த ஐநூறு என்பதே வாய்க்கு வந்த ஒரு எண். எனவே இந்தச் செயல்களை எந்த ஒரு இலக்கியப் பதிப்பகமும் செய்யமுடியாது.
அடுத்தது, இலக்கியப் பதிப்பகங்கள் என்பவை வெளியிடும் 100% புத்தகங்களும் தூய இலக்கியப் புத்தகங்கள் அல்ல. அவை ஒவ்வொன்றுக்குள்ளேயே இலக்கிய மதிப்பு கடுமையாக மாறுபடும். பிரமிள் புத்தகத்தைப் பதிப்பிக்கும் ஒரு பதிப்பகம் சுஜாதாவின் புத்தகங்களை பதிப்பிக்கலாம். ஆனால் எந்த ஒரு பதிப்பகமும் வர்க்க விசுவாசத்தை மனத்தில் வைத்து பிரமிளுக்கு ஒரு ரேட்டும் சுஜாதாவுக்கு ஒரு ரேட்டும் வைப்பதில்லை. அப்படியானால் யார் வர்க்க விசுவாசப் பதிப்பகம்? இலக்கியப் பதிப்பகங்கள் என்றுதானே அபிலாஷ் சொல்லவேண்டும்? ஆனால் அவர் இலக்கியப் புத்தகப் பதிப்பகங்களுக்கு இட ஒதுக்கீடு அளித்துவிடுகிறார். அதில் அவரும் ஒளிந்துகொள்ள வசதியாக.
இன்னொரு விஷயம், வணிகப் பதிப்பகங்கள் வெளியிடும் புத்தகங்களில் பல (அல்லது சில) தீவிர இலக்கியப் புத்தகங்கள். (இதற்கு உதாரணம் தேவை என்றால் அள்ளித் தர ஆயத்தமாக இருக்கின்றேன்.) இப்புத்தகங்களுக்கும் வணிகப் புத்தகங்களுக்கும் ஒரே நோக்கிலேயே வணிகப் பதிப்பகங்கள் விலை வைக்கின்றன. இன்னும் சொல்லப் போனால் இலக்கியப் புத்தகங்களுக்கு லாபம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை, நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை என்றும் வணிகப் பதிப்பகங்கள் பதிப்பிக்கின்றன என்பதே உண்மை. இலக்கியப் பதிப்பகங்களின் கடுமையான பண நெருக்கடி வணிகப் பதிப்பகங்களுக்கும் பல்வேறு காரணங்களை முன்வைத்து ஏற்படுகின்றன.
உண்மையில் வணிகப் பதிப்பகங்களோ இலக்கியப் பதிப்பகங்களோ ஒரு புத்தகத்துக்கு விலையை நிர்ணயிப்பது அதன் செலவுகளின் அடிப்படையில்தான். அதிகம் அச்சிட்டு அதிகம் விற்பனையாகும் புத்தகங்களுக்கு விலையைக் குறைவாக வைப்பார்கள். இலக்கியப் புத்தகம் மிக அதிகம் விற்றால் அவற்றின் விலை குறைவாக வரும். இல்லையென்றால் விலை கூட வரும். இதுவே இலக்கியமற்ற புத்தகங்களுக்கும் பொருந்தும். இந்த இரண்டே விலை வைப்பதற்கான அடிப்படை. இவற்றைத் தவிர வேறு பொதுவான அடிப்படைகள் எங்கேயும் இல்லை. வர்க்க விசுவாசமெல்லாம் தண்ணீருக்குள் முங்கி உயிர் போய்க்கொண்டிருப்பவனுக்கு எவ்வளவு இருக்குமோ அவ்வளவுதான் ஒரு பதிப்பகத்துக்கு இருக்கமுடியும். அபிலாஷின் சிந்தனையெல்லாம் மிகப் பெரிய வர்க்கத் திட்டத்தோடு சில வணிகப் பதிப்பகங்கள் களம் இறங்கி இருப்பதாகவும், ஒரு கம்யூனிஸ ஹீரோ அத்திட்டத்தை உடைப்பதாகவும் இருக்கின்றன. அந்த கம்யூனிஸ ஹீரோ அவரேதான்!
இது போக இன்னொன்று உண்டு. ஒரு இலக்கியப் பதிப்பகத்தில் வேலை பார்ப்பவர்கள் சொற்ப அளவிலும், ஒரு வணிகப் பதிப்பகத்தில் வேலை பார்ப்பர்கள் கொஞ்சம் அதிகமாகவும் இருப்பார்கள். இதையும் மனத்தில் வைத்துத்தான் வணிகப் பதிப்பகங்கள் விலை வைக்கவேண்டும். ஆனால் அப்படி வைப்பதில்லை என்பதே உண்மை. யார் வேண்டுமானாலும் எந்த ஒரு இலக்கிய / வணிகப் பதிப்பகங்களின் புத்தகங்களின் விலையைப் பட்டியலிட்டுப் பார்க்கலாம். அதையும் ஆண்டு வாரியாகப் பட்டியலிட்டுப் பார்த்தால் உண்மை விளங்கிவிடும். இதையெல்லாம் நான் பார்த்திருக்கிறேன். எனவேதான் எந்த ஒரு இலக்கியப் பதிப்பகத்தின் மீதும் எனக்குப் புகார்கள் இல்லை. ஏனென்றால் புத்தகம் பதிப்பிக்கும் தொழிலே இன்று இருட்டில் கம்பு சுற்றும் வேலையாகத்தான் நடந்துகொண்டிருக்கிறது. ஒரே ஒரு வெளிச்சக்கீற்று கண்ணில் படும் என்ற நம்பிக்கையில்தான் பதிப்பகங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.
அபிலாஷ் போன்றவர்களுக்கு இதில் வர்க்க விசுவாசத்தையும், இந்துத்துவத்தின் செயல்பாட்டையும் இணைக்கவேண்டிய கட்டாயம் உள்ளது. பதிப்பகங்கள் வெகுசில புத்தகங்களுக்கு லாபம் குறைவாக இருந்தால் போதும் என்று செயல்படுகின்றன என்பது உண்மைதான். ஆனால் அந்தப் புத்தகங்களின் விற்பனையும் அப்படியே பிய்த்துக்கொண்டு பறப்பதில்லை என்பதுதான் சோகம்.
நம் புத்தக வாசிப்புச் சூழல் மோசமாக உள்ளதை உணர்த்து அதை மேம்படுத்த நாம் செய்யவேண்டியது, பதிப்பகங்களை வர்க்க விசுவாசிகளாகவும் வர்க்க எதிரிகளாகவும் தம் வசதி வாழ்க்கை வாய்ப்புக்காக வண்ணம் பூசும் வேலையல்ல. குறைந்த பட்ச நேர்மை அதைச் செய்யாமலாவது இருப்பது.
பின்குறிப்பு:
யுவ புரஸ்கார் அபிலாஷின் கால்கள் நாவலை வாங்க இங்கே செல்லவும். https://www.nhm.in/shop/100-00-0000-202-2.html