பதிப்புலகம் குறித்து (கிழக்கை முன்வைத்து) – பத்ரி சேஷாத்ரி எழுதியது

பத்ரி ஃபேஸ்புக்கில் எழுதியது இவை. ஒரு தேவை கருதி இங்கே சேமித்து வைக்கிறேன்.

 

(1) புத்தக விலையை, அதன் கட்டமைப்புக்கு ஆகும் செலவை வைத்தே தீர்மானிக்கிறேன். உலோகத்தை அடிப்படையாக வைத்து உதாரணம் சொல்கிறேன். முதலில் அந்தப் புத்தகத்தை 1,200 பிரதிகள் அச்சிட்டோம். அப்போது ஒரு புத்தகம் அடிக்க ஆன செலவு சுமார் 25 என்று ஞாபகம். அதைப்போல நான்கு மடங்கு எம்.ஆர்.பி. எனவே ரூ. 100/- எம்.ஆர்.பி. அந்தப் புத்தகத்தை விற்க ஆரம்பித்ததும், எதிர்பார்த்த வேகத்தைவிட அதிகமாக விற்றது. எனவே பேசாமல் 5,000 பிரதிகள் அச்சடித்துவிடலாமே என்று ஒரு ஐடியா தோன்றியது. அப்படி அடிக்கும்போது ஒரு பிரதிக்கு ஆகும் செலவு சுமார் ரூ. 15/- மட்டுமே. அதனை நான்கு மடங்காக்கி, ரூ. 60/- என்று வைக்காமல், ரூ. 50/- என்று வைத்து, ஊரெங்கும் பிளாஸ்டிக் பவுச்சில் தொங்கவிட்டு விற்க முயற்சி செய்தோம். கடைசியில் 4,500 விற்றுவிட்டது. கடைசி 500 விற்க வெகு தாமதமானது. அதன்பின் அந்தப் புத்தகத்தை அச்சிடவில்லை. இப்போது நான் அதனை அச்சிட நேர்ந்தால் மீண்டும் ரூ. 100/- அல்லது ரூ. 125/- என்று வைத்து விற்பேன். ஒரு லட்சம் பிரதிகள் சீராக மாதம் 10,000 என்று போகும் என்றால் ரூ. 40 அல்லது ரூ. 50 என்று வைத்து விற்பேன். இதைப் புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

(2) புத்தகக் கட்டுமான விலையைப் போல எவ்வளவு மடங்கு வைத்து புத்தகங்களை விற்பது? 3 மடங்கு, 4 மட்னக்கு, 5 மடங்கு? இந்த மூன்றையும் நான் பின்பற்றியுள்ளேன். ஏன் இந்தக் கணக்கு? நாங்கள் எங்கள் சூப்பர் ஸ்டாக்கிஸ்டுகளுக்கு புத்தக விலையில் 40% டிஸ்கவுண்ட் தருகிறோம். அவர்கள் எங்கள் டிஸ்ட்ரிபியூட்டர்களுக்கு 35%-மும், கடைகளுக்கு 30 அல்லது 35%-மும் கொடுக்கிறார்கள். எங்களைப் பொருத்தமட்டில், எல்லாப் புத்தகத்துக்கும் 40% எங்கள் கையை விட்டுப் போய்விடுகிறது. அது டிஸ்ட்ரிபூஷன் சானலுக்குப் போகும் தொகை. அடுத்து, 10% எழுத்தாளர் ராயல்டி. தாமதமானாலும் இன்றுவரை மிகச் சரியாகக் கொடுத்துக்கொண்டு வந்திருக்கிறோம். ஆக எம்.ஆர்.பியில் 50% சானலுக்கும் ஆசிரியருக்கும். மீதமுள்ள 50%-த்தில், (நான்கு மடங்கு வைத்தால்) 25% கட்டுமானத்துக்கு, 25% நிறுவனத்துக்கு. இந்த 25%-ல் வாடகை, சம்பளம் (எங்களிடம் 70 பேர் வேலை செய்கிறார்கள் – 20 பேர் சேல்ஸ், 8 பேர் எடிட்டோரியல், அட்மின், மார்க்கெட்டிங், வேர்ஹவுஸ் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளுங்கள் – இவர்கள் அனைவருக்கும் தலையே போனாலும் ஒன்றாம் தேதிக்கு முதல் தேதியிலேயே சம்பளம் கொடுத்துவிடுகிறேன், பி.எஃப், இ.எஸ்.ஐ, கிராஜுவிட்டி உண்டு), நிறுவனத்தை நடத்த வாங்கும் கடனுக்கான வட்டி, இதெல்லாம் போக கையில் ஒன்றும் எஞ்சுவதில்லை. இதில் முதலீட்டாளர்களுக்குக் கொடுக்க ஒன்றும் இல்லை.

இதனால்தான் ஐந்து மடங்கு விலை வைக்கலாம் என்று யோசித்தேன். அப்படிச் செய்தால் எங்கள் பங்காக 30% நிற்கும். ஆனால் அதற்கு சேல்ஸ் டீமிடமிருந்து எதிர்ப்பு. சில புத்தகங்கள் போகும் வேகத்தை வைத்து, மீண்டும் நான்கு மடங்கு என்று வந்துவிட்டோம்.

(3) எங்கள் தயாரிப்புச் செலவு அதிகம். எனவே எம்.ஆர்.பி அதனோடு சேர்த்து மடங்காக்குதலில் அதிகரிக்கிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் பத்தாண்டுகளாக புத்தகத்தை உருவாக்கிவிட்டு, சொர்ந்துபோய் கார்ப்பரேட் கம்பெனிகளிடம் புத்தக உருவாக்கத்தைக் கொடுத்திருக்கிறோம். குவாலிட்டி கண்ட்ரோல் என்றால் என்னவென்றே தெரியாத நிலைதான் சென்னை குடிசைத் தொழில் அச்சகங்களில். நாங்களே பேப்பர் வாங்கி, நாங்களே பத்து பிரிண்டிங் பிரெஸ்ஸில் பிரிண்ட் செய்து, நாங்களே எட்டு பைண்டிங் இடங்களில் போய் பைண்டிங் செய்து எடுத்து வந்தால் ஒரே செட்டில் உள்ள பத்து புத்தகங்களும் பல்வேறு உயரங்களில் இருக்கும், அச்சு கோணல் மாணலாக இருக்கும்., பைண்டிங்கெல்லாம் அப்படித்தான் சார் வரும் என்று ஒரே போடாகப் போடுவார்கள்.

இப்போது ஒட்டுமொத்தமாக மும்பையில் ரெப்ரோ அல்லது மங்களூரில் மணிபாலில் கொடுத்துச் செய்கிறோம். அவர்கள் கேட்கும் தொகையைக் கொடுக்கிறோம்.

ஏன், மற்ற நிறுவனங்கள் மிக அற்புதமாகப் புத்தகங்களைக் கொண்டுவரவில்லையா என்று நீங்கள் கேட்கலாம். ஒருவேளை அவர்களிடம் இருக்கும் சீக்ரெட் சாஸ் என்னிடம் இல்லை. அவர்கள் மாதம் அச்சடிக்கும் புத்தக எண்ணிக்கைக்கும் நான் அச்சடித்து விற்கும் புத்தக எண்ணிக்கைக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. இன்னொருவருடன் ஒப்பிட்டுப் பார்த்து ஃபேஸ்புக்கில் சண்டை போட நான் விரும்பவில்லை.

(4) இறுதியாக, நாங்கள் சானலுக்குத் தரும் டிஸ்கவுண்ட் அதிகம். வானதியெல்லாம் 25%-க்கு மேல் தரமாட்டார்கள். சிலர் 30, சிலர் 35. நாங்கள் 40 தரக் காரணம் உள்ளது. ஒரு வலைப்பின்னலை உருவாக்கியிருக்கிறோம். அனைவரும் பணம் சம்பாதித்தால்தான் இந்த நெட்வொர்க்கில் இருக்க விரும்புவார்கள். புஸ்தகத்தைப் பரவலாக விற்பனை செய்ய முயற்சி எடுப்பார்கள். அதனால்.

இப்போது எக்ஸைல் விலைக்கு வருவோம். நேரடியாக கஸ்டமருக்கு விற்பதால், 40% டிஸ்கவுண்ட் போகிறது. எனவே நேரடியாக எந்தப் புத்தகத்தை பதிப்பகத்திடம் சென்று வாங்கினாலும் டிஸ்கவுண்ட் கொடுக்க வேண்டியதுதானே என்று கேட்காதீர்கள். டிஸ்கவுண்ட் கொடுக்க மாட்டோம். ஏனெனில் அது விற்பனை சானலின் வெறுப்பைச் சம்பாதிக்கிறது. அங்குதான் எங்கள் புத்தகங்களின் பெரும்பகுதி விற்பனையாகிறது. இந்தக் குறிப்பிட்ட புத்தகத்தை 50% டிஸ்கவுண்டில் விற்க ஒப்புக்கொண்ட ஒரே காரணம் இதில் லாபம் உள்ளது என்பதற்காக அல்ல. சாரு கேட்டுக்கொண்டதற்காக மட்டுமே. இப்படி எல்லா எழுத்தாளர்களும் கேட்டால் எனக்குக் கட்டுப்படியாகாது.

ப்ரீ-ஆர்டரில் இருக்கும் வசதி காரணமாகவே இந்த டிஸ்கவுண்ட். மொத்தம் எத்தனை புத்தகம் அச்சிட வேண்டும் என்பது தெரிந்துவிடும். கையில் காசு முதலிலேயே வந்துவிடும்.

ஆனால் இதனை எல்லாப் புத்தகங்களுக்கும் செய்ய முடியாது. ஒருசிலருடைய புத்தகங்களுக்குத்தான் கணிசமான ப்ரீ-ஆர்டர் வர வாய்ப்புள்ளது.

ஆனாலும் லாபம் உண்டு, லாபம் உண்டு என்று நீங்கள் சொல்வதை நான் ஏற்கவில்லை. கடந்த பத்தாண்டுகளில் கிழக்கு பதிப்பகத்துக்குத் துளிக்கூட லாபம் இல்லை என்பதுதான் உண்மை. பொதுவாக நான் இதுகுறித்துப் பேசுவதில்லை. புலம்புவதில்லை. இப்போதும் இது புலம்பல் இல்லை. அச்சுப் புத்தக பிஸினஸின்மீதான என் ஆர்வம் வெகுவாகக் குறைந்துவிட்டது. வேறு பிசினஸில் இறங்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. நன்றி. இதுதொடர்பான கேள்விகளுக்கு இங்கு மேற்கொண்டு நான் பதில் ஏதும் எழுதப்போவதில்லை.

 

தனியாக நீங்கள் புத்தகம் போட்டாலும் அதில் எழுத்துக்கு மேற்பட்ட உழைப்பு இருக்கிறது. அதற்கு நீங்கள் ஒரு விலை போடவேண்டும். எழுத்துக்கு ராயல்டி. மற்ற உழைப்புக்கு ஒரு கூலி. பின் கடனுக்கு வட்டி. எல்லாம் சேர்த்தால் உபயோகப்படாது என்பதால்தான் 100 ரூ. வைக்கவேண்டும். மாற்றுவழி, புத்தகங்கள் பல ஆயிரக் கணக்கில் விற்கவேண்டும் என்பதுதான். அது நிகழும்வரை நாம் அபத்தமாக அடித்துக்கொண்டிருக்கிறோம். அதைப் பற்றி யாராவது பேச விரும்பினால் நான் பேசத் தயார். இன்னமும் 1000 பிரதிகள் விற்பதிலேயே ஆயிரத்தெட்டு அக்கப்போர். அங்கே சேத்தன் பகத் ‘அசால்டாய்’ லட்சத்தைத் தாண்டி, பத்து லட்சத்தைத் தாண்டிப் போய்க்கொண்டிருக்கிறார். அது… பிசினஸ். மற்றபடி, கலை, இலக்கியம் வளர்ப்போர் மட்டுமே சொந்தக் காசை அழித்து போண்டியாக்கி 1000 பிரதியை விற்க அல்லாடிக்கொண்டிருப்பார்கள். எனக்கு அதையெல்லாம் தொழிலாகச் செய்ய நாட்டமில்லை.

 

 

-பத்ரி சேஷாத்ரி

https://www.facebook.com/rasanaikkaaran/posts/1542645925977441?comment_id=1542651565976877&notif_t=like

Share

Comments Closed