அசோகமித்திரன், நீங்க நல்லவரா கெட்டவரா?

அசோகமித்திரன், நீங்க நல்லவரா கெட்டவரா?

நேற்றைய வெண்முரசு நூல்கள் வெளியீட்டு விழாவில் அசோகமித்திரன் பேசினார். நேற்று என்றல்ல, அசோகமித்திரன் எப்போதுமே ஒரு கறாரான பேச்சைப் பேசுவதில்லை. அது அவரது பாணியாக இருக்கலாம். ஆனால் அவரது கருத்து என்ன என்பதை ஒவ்வொரு நேயரும் ஒவ்வொரு விதமாக உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பு உருவாகிவிடுகிறது என்பதே அதிலிருக்கும் அரசியல். எனக்குத் தெரிந்தவரையில் அசோகமித்திரன் இதைத் திட்டமிட்டே செய்கிறார் என்றுதான் நினைக்கிறேன்.

தன்னோடு எழுதவந்த தனக்குப் பின் எழுத வந்த தன்னை ஒத்த அல்லது தன்னைக் கடந்த எழுத்தாளர்களை முழுக்கப் பாராட்டுவதில் அவருக்குப் பெரிய தயக்கம் உள்ளது. மனத்தடை உள்ளது. இதுதானே இயல்பு என்று ஒருவர் சொல்லக்கூடும். ஒருவரைப் பாராட்டத் தோன்றும்போது முழுமையாகப் பாராட்டுவது பெரிய பிழையல்ல. அப்போதும்கூட அதில் ஒரு புள்ளி வைத்துப் பேசுவது தேவையற்றது. அது பேசுபவரின் அதீத தன்முனைப்பையே காட்டுகிறது என்று நினைக்கிறேன்.

இதே அசோகமித்திரன் தனக்குப் பின் வந்த சில எழுத்தாளர்களை மனமாரப் பாராட்டியிருக்கிறார். ஆனால் அவர்களெல்லாம் அசோகமித்திரனை எவ்வகையிலும் தொடமுடியாதவர்கள், தாண்ட முடியாதவர்கள். ஆனால் அசோகமித்திரன் ஜெயமோகனைத் தன்னைத் தாண்டிவிட்ட ஓர் எழுத்தாளராக உள்ளே நினைக்கிறார். எனவே அவருக்கு ஜெயமோகனை முழுமையாகப் பாராட்டிவிடுவதில் சிக்கல் உள்ளது. பாராட்டத் துவங்கும்போதே, தப்பா நினைக்காதீங்க, நீங்க எல்லாம் கைதட்டறேள், நான் இல்லை என்று சொல்கிறார். ஒரு நாடகத்தில் இவர் நடித்தபோது தெரியாமல் இவரது மூக்குக் கண்ணாடி விழுந்துவிட அனைவரும் பிரமாதம் என்று கைதட்டினார்கள் என்கிறார். ஆனால் ஜெயமோகன் எழுதுவதைத் தடை சொல்லக்கூடாது என்று சொல்லி, வயதில் மூத்தவர் என்பதால் ஆசிகள் என்று சொல்லிவிடுகிறார். 30,000 பக்கம் எழுதினா பயமா இருக்கு என்று சொல்லிவிட்டு, தான் எழுதித் தள்ளிய கையெழுத்துப் பிரதிகள் குவிந்து கிடக்கின்றன என்கிறார். அசோகமித்திரனின் பிரச்சினை, ஜெயமோகன் அவரைத் தாண்டுவதை மனதார ஏற்றுகொள்ள முடியாமல் போவதே என்பதே என் முடிவு.

இத்தனைக்கும் அசோகமித்திரன் ஒரு மிகப்பெரிய படைப்பாளி. சாதனையாளர். எத்தனை காலம் தாண்டியும் வாழப்போகும் மிக நுணுக்கமான எழுத்து அவரது. அவருக்குரிய அங்கீகாரம் அவர் நினைக்கும் அளவுக்கு அவருக்குக் கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால் அதை எதிர்கொள்ளும் வழி இதுவல்ல. இப்போது என்றில்லை, அவர் யாரைப் பற்றிப் பேசினாலும் இப்படி ஒரு புள்ளி வைத்துப் பேசுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார். ஜெயமோகனுக்கு கைத்தடிகள் இருப்பதாக சிலர் சொல்லுவதுபோலவே அசோகமித்திரனுக்கும் கைத்தடிகள் சிலர் உண்டு. அவர்கள் இதைச் சொல்லி சிலாகிப்பார்கள். என் காதாலேயே கேட்டிருக்கிறேன். அசோகமித்திரனின் பூடகமான விமர்சனத்தை ஊதிப் பெரிதாக்கி தங்கள் வயிற்று உபாதையை அவர்கள் தீர்த்துக்கொள்வதைப் பார்த்திருக்கிறேன். அது அவர்களுக்குப் பொருத்தமானதுதான். ஏனென்றால் அவர்கள் எப்போதுமே ஜெயமோகனை உயர்ந்துதான் பார்க்கப் போகிறவர்கள். ஆனால் அசோகமித்திரன் முகத்தோடு முகம் பார்க்கத்தக்க ஒரு சாதனையாளர்கள். வயதும் கைவிடப்பட்ட தருணங்களும் தரும் சோகத்தை அசோகமித்திரன் வெல்லவேண்டும். அதற்கு நிஜமான சாதனையாளர்களாக அவர் மனம் அங்கீகரிக்கும் எழுத்தாளர்களைப் பாராட்டும் தருணம் வரும்போது மனமாரப் பாராட்டுவது ஒரு வழியாக இருக்கக்கூடும். கறாரான விமர்சனம் தேவைப்படும்போது அதையும் செய்துகொள்ளட்டும். அது அவர் தேர்வுதான். பாராட்டும்போதே ஒரு குறையைச் சொல்வதும், விமர்சிக்கும்போதே ஒரு பாராட்டைச் சொல்வதுமென இலக்கிய உலகின் ரஜினியாக அவர் இல்லாமல் இருக்கவேண்டும் என்பதே வேண்டுதல்.

Share

Comments Closed