விக்கிரமாதித்தனும் வேதாளமும் – கத்தியை முன்வைத்து

முன்னொரு காலத்தில் விக்கிரமாதித்தன் என்றொரு அரசன் வாழ்ந்துவந்தான். தன் வாழ்நாளெல்லாம் வேதாளத்தைத் துரத்துவதே அவன் வேலை. அன்றும் அவன் துரத்தி அந்த வேதாளத்தைப் பிடித்து, தோளில் போட்டுக்கொண்டு நடந்தான்.

“என்ன விக்கிரமா பேசாமல் வருகிறாய்?” என்று வேதாளம் கேட்டது. விக்கிரமாதித்தன் பதில் சொல்லாமல் வந்தான். பதில் சொன்னால் அவன் மௌனம் கலைந்து வேதாளம் மரத்திற்கு போய்விடுமல்லவா.

வேதாளம் தன் வழக்கம்போல் கதை சொல்லத் தொடங்கியது.

“விக்கிரமா, முன்னொரு காலத்தில் கத்தி என்றொரு திரைப்படம் வெளிவந்தது. அது துப்பாக்கியின் வெற்றிக்குப் பிறகு ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில் வெளி வந்து பெரிய வெற்றி பெற்றது. படத்தை லைக்கா என்றொரு ராஜபக்ஷேயின் பினாமி நிறுவனம் தயாரித்ததாகக் குற்றம் கூறியவர்கள், என்னவோ டீலுக்குப் பின்னர் அமைதியாகிப் போனார்கள் என்றொரு பேச்சும் உண்டு. படத்தில் விவசாயிகளின் பிரச்சினையைக் காட்டியதால் என்ன செய்வது என்று குழம்பிப்போன கம்யூனிஸ்ட்டுகளும் தமிழ்த் தேசியவாதிகளும் கள்ளமௌனம் சாதித்து மெல்ல நழுவிப் போனார்கள். கடைசியில் ராஜபக்ஷே மூலம்தான் தமிழ்நாட்டில் புரட்சி வரவேண்டியிருக்கிறது என்றெல்லாம் அன்றைய தமிழர்கள் பேசிக்கொண்டார்கள். 

அதில் ஒரு வரி கம்யூனிஸம் பற்றி வரும். மிக யதார்த்தமான காட்சி அது. கம்யூனிஸம் படித்துக்கொண்டு ஃபிலிம் காட்டும் யாருக்குமே கம்யூனிஸம் என்றால் என்னவென்று தெரியாது என்பதை தெளிவாகக் காண்பித்த காட்சி அது. ஆம், அந்த ஜீவானந்தமும் கம்யூனிஸம் என்றால் இட்லி சட்னி என்று விளக்கிய காட்சியைப் பார்த்து, இப்படி கிண்டலாவது செய்கிறார்களே என்று விரல்சூப்பிக்கொண்டு உத்சொ கொட்டியது கம்யூனிஸக் கூட்டம் என்பது வரலாறு.

அந்தப் படத்தைப் பற்றி பொதுவாக இப்படி கருத்து இருந்தது விக்கிரமா. படம் நன்று. குறிப்பாக விஜயின் நடிப்பு நன்றாக இருந்தது. ஷங்கருக்கு அடுத்தபடியாக ஷங்கரின் ஃபார்முலாவை வெற்றிகரமாகப் படமாக்கிய முருகதாஸ் பாராட்டுக்குரியவர்தான். சில காட்சிகளில் லாஜிக் ஓட்டை இருந்தாலும், படத்தின் வேகத்தில் அது தெரியவில்லை. இறுதிக்காட்சி சண்டை மட்டுமே தாங்கமுடியாததாக இருந்தது. இப்படி மக்கள் பேசிக்கொண்டார்கள். அது ஒருவகையில் சரிதான் விக்கிரமா.

ஆனால் விக்கிரமா நான் கேட்கப்போவது இதைப் பற்றி அல்ல. படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் விமர்சனம் எழுதித்தள்ளிய அன்றைய இணையவீரர்கள் யாருமே ஒன்றைக் கவனிக்கவில்லை.

மூன்று விவசாயிகள் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடக்கிறார்கள். அப்போது அவர்களின் கைவிரல் ரேகையில் மையைப் பார்க்க ஓடி வருகிறார் விஜய். முதல் பிணம் ஹிந்துப் பிணம். யாரிடமும் கேட்காமல் உரிமையாக அவரே பிணத்தைத் திறந்து கைவிரலில் மை இருக்கிறதா என்று பார்க்கிறார். இரண்டாம் பிணம் இஸ்லாமியப் பிணம். அங்கே ஓடுகிறார் விஜய். பேஸ்த் அடித்து நின்றுவிடுகிறார் விக்கிரமா. ஆம். அங்கே இருக்கும் இஸ்லாமிய உறவினர்களிடம் அனுமதி கேட்டு கைவிரலைப் பார்க்கிறார். ஏன் விக்கிரமா இப்படி?

இதுமட்டுமல்ல. ஆறு விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஹிந்து விவசாயிகள் சாகும்போது ஹிந்துமதம் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் இஸ்லாமிய விவசாயி சாகும்போது மதத்தைப் பற்றிக் குறிப்பிட்டுச் சாகிறார். ஹிந்து மதம் செத்துப் போவதற்குப் பெத்துப் போட்டதா விக்கிரமா?

இந்தக் கேள்விகளை யாரும் எழுப்பவில்லை. ஏன்? ஆனால் விக்கிரமா இதற்கான பதில் உனக்குத் தெரியும். ஆனால் இந்தமுறை நம் விளையாட்டில் ஒரு விதிமுறை மாற்றம் விக்கிரமா. உனக்குப் பதில் தெரியும் என்று எனக்குத் தெரியும். ஆனால் அந்தப் பதிலைச் சொன்னால் உன் தலைவெடித்துச் செத்துப் போவாய். நான் ஓடிப்போய் மரமேறிக் கொள்வேன். பதில் சொல்லாமல் கள்ளமௌனம் சாதித்தால் நான் உன்னுடன் வந்துவிடுவேன். உன் கோடானகோடி தேடல் முடிவுக்கு வரும் என்றான்.

நொடி யோசித்தான் விக்கிரமன். மெல்லப் புன்னகைத்தான். “வேதாளமே, என் தலைவெடித்தாலும் பரவாயில்லை. நான் பதில் சொல்லியே தீருவேன். இந்த நோயின் பெயர்…” என்று சொல்வதற்குள் அவன் தலை சுக்கு நூறாக வெடித்தது. வேதாளம் ஓடிப்போய் மரத்தின் மேலேறி அமர்ந்துகொண்டு லூசுப்பய என்றது.

Share

Comments Closed