வெள்ளம்

10632752_754840337909529_2357361909193283785_n
Photo credit: Viveka Vivek, Nellai Maanagaram facebook group

நெல்லையில் 1992ம் ஆண்டு வந்த வெள்ளத்தைக் காட்டும் இந்தப் புகைப்படத்தைப் பார்த்ததில் இருந்து எழுந்த நாஸ்டால்ஜியாவை அடக்கமுடியவில்லை. இந்த நாஸ்டால்ஜியா குழிக்குள் விழுந்துவிடக்கூடாது என்று எத்தனை ஒத்திப் போட்டாலும் முடியவில்லை என்பதால், இதை எழுதித் தொலைக்கிறேன்.

எனக்கு 8 அல்லது 9 வயது ஆகும்போது தாமிரபரணியில் பெரிய வெள்ளம் வந்தது. அப்போது நாங்கள் சேரன்மகாதேவியில் இருந்தோம். சேரன்மகாதேவி ராமர் கோவில் வரை வெள்ளம் சூழ்ந்திருந்தது. கடும் குளிரில் புயலில் ஒரு குடையை எடுத்துக்கொண்டு ஸ்வெட்டர் போட்டுக்கொண்டு வெள்ள நீர் முழங்காலில் மோதிக்கொண்டிருக்க வெள்ளத்தின் வீச்சைப் பார்த்தது பேரனுபவமாக இருந்தது. தினமும் குளித்துக் கும்மாளமிடும் நதி பற்றிய பயம் ஏற்பட்டது அக்கணத்தில்தான்.

அதன் பின்னர் நான் கண்ட வெள்ளம் 1992ல். மிகப் பெரிய வெள்ளம். நாங்கள் டவுணில் சிவா தெருவில் இருந்தோம். அங்கேயே தெருவில் கணுக்கால் வரை தண்ணீர் இருந்தது. இப்போது நினைத்தாலும் மிரட்சியாக உள்ளது. எல்லார் வீட்டிலும் பாலுக்கு காசு வாங்கி, நான்கைந்து பேர் சேர்ந்து நீரில் நடந்து சென்று (நீந்தில்லா போனோம் என்று சொல்லிக்கொள்வோம்), சந்திப் பிள்ளையார் முக்கு அருகில் இருக்கும் பால் பூத்தில் பால் வாங்கி வருவோம். பால்காரர் குமார் அண்ணனும் வெள்ள நீரில் நின்றுதான் விற்பனை செய்துகொண்டிருந்தார். காப்பி இல்லாவிட்டால் தற்கொலை செய்துகொண்டுவிடலாம் என்று நினைக்கும் நெல்லை மக்களுக்கு குமார் அண்ணன் தான் நெல்லையப்பராகக் காட்சி தந்தார். “இவ்ளோ வெள்ளத்திலயும் நமக்காக பால் விக்கானேய்யா நம்ம குமாரு.” 

இரண்டு நாளாக மின்சாரம் இல்லை. புயல். மதியம் 3 மணிக்கெல்லாம் இரவு 7 மணி போன்ற வானம். ஜன்னலைத் திறந்து வைத்துக்கொண்டு கடும் குளிர்க்காற்றில் மண்ணெண்ணெய் அடுப்பில் ரவை உப்புமா அக்கா செய்துதர சூடாக உண்டோம். இப்போதும் எப்போதாவது மழை வந்து வானம் இருட்டினால் என் மனம் இதே சூடான உப்புமாவைத் தேடுகிறது. மனமும் நாக்கும் ஒரே புள்ளியில் சந்தித்துவிடும் கணங்கள் அப்படியே மனத்தில் பதிந்துவிடுகின்றன.

மெல்ல மழை நின்றது. வெள்ளம் வடியத் தொடங்கியது. ஆனால் தாழ்வான பகுதிகளில் வாழ்ந்துவந்த மக்கள் தங்கள் வீடு உடைமைகளை இழந்துவிட்டார்கள். அவர்களை அரசுப் பள்ளிகளில் தங்க வைத்து அவர்களுக்குத் தேவையான உணவு மருத்துவத்தை அரசு வழங்கியது. எனவே எங்களுக்கு விடுமுறை. வெள்ளம் மெல்ல வடியட்டும் என்றே பிரார்த்தனை செய்துகொண்டோம்.

அப்போதுதான் தேவர் மகனும் பாண்டியனும் வெளியாகியிருந்தது. அப்போதெல்லாம் நான் கமல் ரசிகனாக இருந்தேன். ரஜினி சார் என்னை மன்னிக்க, ப்ளீஸ். ஆனால் ராஜா வெறியன். ராஜா எந்தப் பாட்டு போட்டாலும் ஹிட்டான காலம் அது. அவர் டியூன் போடும் முன்னரே சில பாடல்கள் ஹிட்டடித்திருக்கும் என்று நான் உறுதியாக நம்பிய நாள்கள். (அப்போதுதான் ரஹ்மான் வந்திருந்தார் என்று நினைக்கிறேன். இவன்லாம் எங்க சின்னப்பய என்று சொல்லிவிட்டுத்தான் ராஜா பாடலையே கேட்பேன்.) போற்றிப் பாடடி பெண்ணே பாடலும் பாண்டியனா கொக்கா கொக்கா பாடலும் ஏற்படுத்திய அவசரத்தில் அந்த இரண்டு படத்தையும் முதல் நாளே பார்க்கத் துடித்த நினைவுகள் இப்போதும் அப்படியே இருக்கின்றன.

தேவர் மகன் திரைப்படத்திலும் ஒரு வெள்ளம் உண்டு. அட்டகாசமான ஒளிப்பதிவு, தரமான பின்னணி இசை என அந்த வெள்ளம் தமிழ்நாட்டில் எல்லோரையும் மூழ்கடித்தது என்றாலும், திருநெல்வேலிக்காரர்கள் அதை கொஞ்சம் தனிப்பட்டமுறையில் எதிர்கொண்டார்கள். அப்போதுதான் வெள்ளத்திலிருந்து மீண்டிருந்த நெல்லை மக்கள் மீண்டும் அந்த வெள்ளைத்தையும் அதன் பாதிப்பையும் திரையில் பார்த்தபோது எதோ தங்கள் வீட்டுக்குள்ளேயே வெள்ளம் வந்தது போல ஆதங்கப்பட்டார்கள். தேவர் மகன் படத்தை எப்போது நினைத்தாலும் எனக்கு நினைவுக்கு வருவது ஒரு மழைக்காலச் சூழல்தான். அந்த அளவு அந்த மழையும் வெள்ளமும் மனத்தில் தங்கிக் கொண்டது.

பாண்டியன் திரைப்படத்தை பேரின்பவிலாஸில் போட்டிருந்தார்கள். அங்கேயெல்லாம் வெள்ளம் சூழ்ந்திருந்தது, எனவே அங்கு படத்துக்குப் போகக்கூடாது என்று ஏகக் கெடுபிடி. ஜங்க்‌ஷனில் கவிதா ஷாப்பிங் செண்டரின் முதல் மாடி மூழ்கியதும் சுலோச்சனா முதலியார் பாலம் மூழ்கியதும் நெல்லையையே புரட்டிப் போட்டிருந்தது. வெள்ளம் வடிந்துவிட்டாலும் அங்கெல்லாம் போக வீட்டில் தடை. ஒருவழியாக சம்மதம் வாங்கி பேரின்பவிலாஸ் போனேன். தியேட்டரின் கவுண்ட்டர் தரையெல்லாம் வெள்ளத்தின் கசடுகள். கொஞ்சம் அச்சமாக இருந்தது. பாதி படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது வெள்ளம் வந்துவிடுமோ என்றெல்லாம் தோன்றியது.  பாண்டியனா கொக்கா கொக்காவைப் பார்த்தபின்னர் வெள்ளம் வந்தால் நல்லது என்று தோன்றியது. மாட்னி பார்த்துவிட்டு வெளியே வந்த திருமலை என்ற நண்பன், ‘என்னல வெள்ளத்தப்ப படத்துக்கு வந்திருக்க, அதுவும் சாயங்கால ஷோவுக்கு? பாத்துக்கோல’ என்று வயிற்றில் புளியைக் கரைத்துவிட்டுச் சென்றான். நல்லவேளை ஒன்றும் ஆகவில்லை, நிம்மதியாக பாண்டியன் பார்த்தேன். பாண்டியனா கொக்கா கொக்கா பாடலை இப்போது கேட்டாலும் இந்த நினைவுகள் மேலெழும். ராஜாவின் எந்த ஒரு பாட்டுக்கும் இப்படி நினைவுகள் இருப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

இந்த வெள்ளத்தைப் பார்க்கப் போன மளிகைக்கடைச் செட்டியாரின் பையன் திரும்பி வரவில்லை என்று டவுணே அலோலப்பட்டது. செட்டியாரின் பையனும் இன்னொரு பையனும் வெள்ளத்தைப் பார்க்க சைக்கிளில் போயிருக்கிறார்கள். சைக்கிளில் டபுள்ஸ் ஏறி உட்காரும்போது அந்தப் பையன் தவறி வெள்ளத்தில் விழுந்துவிட்டான். அதன்பின் என்ன ஆனான் என்றே தெரியவில்லை. இதுதான் கேள்விப்பட்டது. மீண்டும் மீண்டும் ஒவ்வொருவரும் இதைச் சொல்லிச் சொல்லி இதை நானே நேரில் பார்த்தது போன்ற ஒரு நிலைக்கு உள்ளாகிப் போனேன். அவன் சைக்கிளில் பின்னால் ஏறும்போது கீழே விழுவது என மனக்கண்ணில் ஓடத் தொடங்கி, கொஞ்சம் மிரண்டுவிட்டேன். 

எத்தனையோ தேடியும் செட்டியார் பையனைக் காணவில்லை. மூன்றாம் நாள் அவர் வீட்டு முன்னர் பந்தல் போட்டிருந்தார்கள். யார் யாரோ துக்கம் கேட்டுக்கொண்டிருந்தார்கள். நான்காம் நாள் வழக்கம்போல காலையில் செட்டியார் கடையைத் திறந்து வியாபாரத்துக்கு வந்திருந்தார். எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாகவும், இவ்ளோதானா பாசம் என்று ஏமாற்றமாகவும் இருந்தது. இன்னும் ஒரு வாரத்தில் அந்தப் பையன் வந்து நிற்பான் என்று ஏனோ உறுதியாக நம்பினேன்.

ஒரு சில நாள்களில் இதை மறந்துபோனேன். ஒரு நாள் செட்டியாரின் கடை மூடி இருந்தது. என்னவென்று விசாரித்தபோது, அன்று அந்தப் பையனின் பதினாறாம் நாள் காரியமாம். நான் பட்ட ஏமாற்றம் சொல்லி முடியாது. எப்படி அப்படி அவன் வரமாட்டான் என்று நம்பி காரியம் செய்கிறார் இந்தச் செட்டியார் என்று கோபமாக வந்தது. ஆனால் இன்றுவரை அந்தப் பையன் வரவே இல்லை.

வாழ்க்கையில் ஏதோ ஒன்றை அன்று கற்றிருக்கிறேன். அது என்னவென்றே தெரியாமல்.

குறிப்பு: விவேகா விவேக் என்பவர் நெல்லை மாநகரம் என்ற ஃபேஸ்புக் குழுவில் இப்படி திருநெல்வேலி போட்டோவாகப் போட்டு வெறுப்பேற்றிக்கொண்டிருக்கிறார். பார்வையிட: https://www.facebook.com/groups/nellaimaanagaram/

Share

Comments Closed