புத்தக விற்பனை குறித்து

இரா நடராசன் அந்திமழை செப்டம்பர் இதழில் அவருடைய புத்தகங்கள் 20,000 முதல் 30,000 வரை விற்பதாகச் சொல்லியிருக்கிறார். அதை ஒட்டி எழுந்த சிந்தனைகளின் தொகுப்பு இது. மற்றபடி, இரா நடராசனின் புத்தகங்கள் இத்தனை விற்பது உண்மையிலேயே மிக்க மகிழ்ச்சி. ஒரு பதிப்பகத்துக்கும் எழுத்தாளருக்கும் இதைவிடக் கொண்டாட்டமான விஷயம் வேறு எதுவும் இருக்கமுடியாது. தமிழ்நாட்டின் மக்கள் தொகையோடு ஒப்பிட்டால் ஒவ்வொரு புத்தகமும் இந்த எண்ணிக்கையில் விற்கவேண்டும். மிக நல்ல அல்லது புகழ்பெற்ற புத்தகங்கள் லட்சக்கணக்கில் விற்கவேண்டும் என்றே நான் விரும்புகிறேன். இனி எழுதப்போவதெல்லாம் என் அனுபவங்கள் தரும் சித்திரத்தை மட்டுமே. இது மட்டுமே உண்மையாக இருக்கவேண்டும் என்பதில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதேசமயம் நான் உண்மையாக இருக்கும் என்று நம்புவதை மட்டுமே இங்கே சொல்கிறேன். இதற்குத் தரவுகள் கிடையாது என்ற போதிலும்.

சாரு நிவேதிதா தனது புத்தகங்கள் லட்சக்கணக்கில் விற்றிருக்கவேண்டும் என்று அடிக்கடி எழுதுவதைப் பார்க்கலாம். ஆனால் யதார்த்தத்தில் அவரது புத்தகங்கள் 3000 தான் விற்கின்றன என்பதையும் எழுத அவர் தவறுவதில்லை. இது முக்கியமானது. நமது லட்சியம் கனவு ஆசை வேறு. யதார்த்தம் வேறு. யதார்த்தத்தைப் புரிந்துகொண்டால்தான் நாம் கனவை அடைய என்ன செய்யவேண்டும் என்று யோசிக்கவாவது முடியும். 

புத்தக விற்பனையில் பலவகை உண்டு. ஒரு சில புத்தகங்கள் மட்டும் பல்லாயிரம் விற்பதுண்டு. சில புத்தகங்களைக் கல்லூரிகள் பள்ளிகளில் வாங்குவதால் அதன் விற்பனை ஆயிரக்கணக்கில் விற்பதுண்டு. கல்லூரியில் பாடப்புத்தகமாக வைக்கப்படும் புத்தகங்களும் இப்படி விற்பனையாவதுண்டு. இவற்றையெல்லாம் தேவை சார்ந்த விற்பனை என்று வரையறுக்க இயலாது. தேவை ஏற்படுத்தப்பட்ட புத்தகங்கள் இவை. மக்களிடையே தானாக ஏற்பட்ட தேவை காரணமாக விறப்னையான புத்தகங்களே ஒரு சமூகத்தின் புத்தக விருப்பத்தைச் சொல்ல வல்லது. திணிக்கப்பட்ட விற்ப்னை எவ்விதத்திலும் சமூகத்தின் புத்தகத் தேவையைச் சொல்வதாகாது. ஒரு எழுத்தாளருக்குத் தன் புத்தகங்கள் பல்லாயிரக்கணக்கில் விற்பது மட்டுமே மகிழ்ச்சி தரக்கூடியதா என்றால் இல்லை என்றே நான் சொல்வேன். தானாக ஏற்பட்ட தேவை காரணமாக அவ்விற்பனை நடந்திருந்தால் அது ஓர் எழுத்தாளனுக்குக் கொண்டாட்டத்துக்குரிய ஒரு சாதனையே.

விற்பனையை முன்வைத்து தமிழின் நட்சத்திர எழுத்தாளர்கள் என்று நமக்கே சில மனப்பதிவுகள் இருக்கலாம். கல்கி, சுஜாதா, ஜெயகாந்தன், வைரமுத்து, மதன், இப்படிச் சிலர். இவர்கள் புத்தகங்களின் விற்பனையைப் பற்றி நாம் தெரிந்துகொண்டாலே நமக்கு இருக்கும் மயக்கங்கள் தெளியலாம். 

இதில் இன்னொரு முக்கிய விஷயத்தையும் சொல்லவேண்டி உள்ளது. தமிழில் இதுவரை எந்தப் பதிப்பகமும் தெளிவான விற்பனை விவரங்களை முன்வைத்ததில்லை. எனவே இவற்றையும் புத்தகச் சந்தையிலிருந்து வரும் செவிவழிச் செய்தி வழியாகவும் அனுபவம் வழியாகவே மதிப்பிடவேண்டி உள்ளது. நாளை ஏதேனும் ஒரு பதிப்பகம், நான் சொல்லப்போகும் இக்கூற்றையெல்லாம் ஆதாரப்பூர்வமாக மறுத்து, தங்கள் புத்தகங்களின் சிறப்பான விற்பனையை நிரூபிக்குமானால், எனக்கு அது மகிழ்ச்சியான தோல்வியாகவும், சிறந்த பாடமாகவும் இருக்கும் என்றே சொல்லிக்கொள்கிறேன். எனக்கு மட்டுமல்ல, என்னைப் போன்ற பல விற்பனை/பதிப்பக நண்பர்களுக்கும் இது பொருந்தும்.

ஒட்டுமொத்தமாக பொன்னியின் செல்வன் ஒரு வருடத்துக்கு ஒரு லட்சம் பிரதிகள் விற்கலாம் என்று அனுமானிக்கிறேன். தமிழில் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் பொன்னியின் செல்வன் புத்தகமே விற்பனையில் சாதனை படைத்த நூலாக இருக்கமுடியும். இதைத் தொடர்ந்து கல்கியின் சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு நூல்கள் விற்றிருக்கலாம். அதேபோல், புத்தகம் வெளிவந்த வேளையில் அக்னிச் சிறகுகள் பெரிய சாதனை படைத்திருக்கும் என்றே நினைக்கிறேன். இதுவரை ஒட்டுமொத்தமாக ஆறு லட்சம் பிரதிகள் விற்றிருக்கலாம் என்று நினைக்கிறேன். 

இதற்கடுத்து வைரமுத்துவின் நாவல்கள் இந்த இடத்துக்கு வர வாய்ப்புள்ளது. மூன்றாம் உலகப்போர் நாவல் வெளிவந்த 6வது வாரத்தில் 30,000 பிரதிகள் விற்றிருந்தது. வைரமுத்துவின் கவிதை நூல்கள் இந்த அளவு விற்பனை ஆவதில்லை. வைரமுத்துவின் மற்ற இரண்டு நாவல்களும் இதைவிட அதிகமாக விற்றிருக்க வாய்ப்புண்டு.

மதன் எழுதிய வந்தார்கள் வென்றார்கள், கிமுகிபி, மனிதனும் மர்மங்களும் போன்றவை வருடம் ஆயிரக்கணக்கில் விற்கும் புத்தகங்கள்.

எழுத்துலகின் சூப்பர் ஸ்டாரான சுஜாதாவின் சூப்பர் ஹிட் புத்தகங்கள் ஒவ்வொரு வருடமும் 6,000 பிரதிகள் விற்கலாம் என்று நினைக்கிறேன். சூப்பர் ஹிட் புத்தகங்கள் மட்டுமே இப்படி. மற்ற புத்தகங்கள் சராசரியாக வருடத்துக்கு ஆயிரம் விற்கலாம்.

இவை இல்லாமல் எழுத்தாளர் யாரென்றே தெரியாமல், அந்த புத்தகப் பெயர் தரும் ஆர்வம் மற்றும் அதன் உள்ளடக்கம் தரும் அனுபவம் ஆகியவற்றுக்காக விற்கும் புத்தகங்கள் உண்டு. (ராஜிவ் கொலை வழக்கு, ஹிட்லர், முசோலினி வகையறா.) துறை சார்ந்த புத்தகங்கள் அதிகம் விற்பதுண்டு. (அள்ள அள்ள பணம் வகையறா.) தொடராக வந்து விற்பனையில் கொடிகட்டும் புத்தகங்கள் உண்டு. (விகடனின் பல புத்தகங்கள்.) இவை எல்லாம் தானாக எழுந்த தேவை சார்ந்து விற்கும் புத்தகங்கள். இதில் பெருமைகொள்ள எழுத்தாளருக்கும் பதிப்பாளருக்கும் எல்லாவித உரிமையும் உண்டு.

குழந்தை நூல்களின் விற்பனை பற்றி யோசித்தால் ஏமாற்றமே மிஞ்சும். தமிழில் 6 வயதுக்குட்பட்ட குழந்தை நூல்கள் இல்லவே இல்லை என்று சொல்லிவிடலாம். எங்காவது தேடித் தேடி சில புத்தகங்களை வாங்கினால்தான் உண்டு. அதற்கு மேற்பட்ட வயதுக்கான புத்தகங்கள் இன்னது என்ற வகையில்லாமல் நிறையவே உள்ளன. பாரதிப் புத்தகாலயம் நிறைய புத்தகங்களை குழந்தைகளுக்கென வெளியிட்டுள்ளது. ஆனால் அவற்றின் தேவை சார்ந்த விற்பனை குறித்த ஐயம் எனக்கு எப்போதும் உண்டு.

இந்த அடிப்படையில்தான் நாம் புத்தக விற்பனையை அணுகமுடியும். தமிழகத்தில் இருக்கும் 200 கடைகளின் வழியாகவும் ஆன்லைன் வழியாகவும் போன் மூலமும்தான் இந்த விற்பனை நடந்திருக்கமுடியும். எனவே விற்பனையாளர்கள் மிக எளிதாக எந்தப் புத்தகங்களுக்குத் தேவை இருக்கிறது என்பதனைக் கண்டுகொள்வார்கள். திடீரென ஒரு புத்தகம் தேவை இருப்பதாகச் சொல்லப்பட்டால், அது இந்த விற்பனையாளர்களின் வழியே விற்கப்படாமல் இருந்தால், அது தானாக எழுந்த தேவையைச் சார்ந்து நிகழ்ந்த புத்தக விற்பனை அல்ல என்றே பொருள்.

இந்த நோக்கில்தான் நாம் புத்தக விற்பனையை அணுகமுடியும். நாளையே ஒரு சாதிச் சங்கமோ மத அமைப்போ ஒரு புத்தகத்தை வெள்யிட்டு, அவற்றை லட்சக்கணக்கில் விற்றுக் காண்பிக்கமுடியும். இது ஏற்கெனவே நிகழ்ந்தும் இருக்கிறது. இவை புத்தக விற்பனையின் மேன்மையைச் சொல்வதாக நான் நம்பவில்லை. எப்படி இருந்தாலும் அது விற்பனைதானே என்று நினைப்பவர்கள் இதை ஏற்றுக்கொள்ளக்கூடும். என்னால் இயலாது.

இன்றிருக்கும் நிலை மாறி ஒவ்வொரு புத்தகமும் லட்சக்கணக்கில் விற்கவேண்டும் என்றே நினைக்கிறேன். அதை முன்னெடுக்க இன்று என்ன விற்கிறது என்பதை உண்மையாக நாம் அறிந்துகொள்ளும் ஒரு நிலை வரவேண்டும். அதோடு நல்ல புத்தகங்களுக்கும் நன்றாக விற்கும் புத்தகங்களுக்குமான தூரம் குறையவேண்டும். 

இரா. நடராசனின் ஆயிஷா புத்தகம் இப்படி விற்றிருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் எல்லாப் புத்தகங்களும் இப்படி விற்கிறது என்று என்னால் நம்பமுடியவில்லை. நான் ந்ம்பாத ஒன்று உண்மையாக இருக்கமுடியாது என்று நிச்சயம் சொல்லமாட்டேன். அப்படி அது உண்மையாக இருக்குமானால், நான் இன்னும் தெரிந்துகொள்ளவேண்டியது நிறைய உள்ளது என்றே பொருள். இரா. நடராசனின் புத்தகங்கள் மேலும் மேலும் விற்க வாழ்த்துகள்.

Share

Comments Closed