முதல் பகுதியை வாசிக்க இங்கே செல்லவும்.
சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் படிப்பில் கவனம் செலுத்துவதே இல்லை என்றால், இன்னும் சிலர் எப்போதும் பிள்ளைகளின் படிப்பில் கவனம் செலுத்திக்கொண்டே இருக்கிறார்கள். அதாவது ஒவ்வொரு நொடியும் அவர்கள் கவனம் பிள்ளைகளின் படிப்பின் மீதே இருக்கிறது. இது அந்தக் குழந்தைகளுக்குத் தரும் மன நெருக்கடியை வார்த்தைகளில் சொல்லமுடியாது. என் அண்ணா பையன் ஒரு தடவை தன் அம்மாவிடம், ‘எப்பவாவது நல்லா சாப்பிட்டியா என்ன படம் பாத்தன்னு கேக்கியா, எப்பவும் படிப்பு படிப்பு படிப்புத்தானா’ என்று கேட்டதாக என் அண்ணி சொன்னார். இத்தனைக்கும் இந்தப் பையனுக்கு பெரிய நெருக்கடியெல்லாம் தரப்படவில்லை. அப்படி இருந்தும் படி படி என்று சொல்வது ஒரு பையனுக்கு எரிச்சலைத்தான் தருகிறது. அதையே எப்போதும் சொல்லிக்கொண்டிருந்தால் அதை எதிர்க்கமுடியாத குழந்தைகள் பெரிய சோர்வை நோக்கியே செல்கின்றன.
1ம் வகுப்பு படிக்க ஒரு தாய் தன் மகளைச் சேர்க்க வந்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் என் மனைவியிடம் பேசினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 1ம் வகுப்பு படிக்கும் குழந்தைக்கு டியூஷன் எதற்கு என்பது முதல் கேள்வி. இரண்டாவது, அந்தக் குழந்தையைச் சேர்க்க ஒரு மணி நேரம் என்ன பேசத் தேவை இருக்கிறது என்பது. சேர்த்த சமயம் அவர் சொன்னது, அவரது மகள் ஐ ஏ எஸ் ஆகவேண்டும் என்பது அவரது கனவாம், அவரே ஐ ஏ எஸ் ஆக இன்னும் முயன்றுகொண்டுதான் இருக்கிறாராம், அவரது சிறிய வயதில் அவர் ஒழுங்காகப் படிக்காமல் விட்டதால் இப்போது திணறுகிறாராம், அத்தவறை அவரது மகள் செய்துவிடக்கூடாதாம். எப்போதும் படிப்பு மட்டுமே அவளது கவனமாக இருக்கவேண்டுமாம். அந்தக் குழந்தையின் வயது 6. முதன்முதலாக அந்தக் குழந்தை டியூஷனுக்கு வந்தபோது, நான் உள்ளே நுழைந்தவுடன் என் மனைவியிடம் ‘என்ன ஒரு பெரிய கொசு ஒண்ணு உக்காந்திருக்கு’ என்று கேட்டேன். உருவத்தில் கொஞ்சம் பெரிய கொசு போலத்தான் அக்குழந்தை இருந்தது. பள்ளி விட்டு வந்த உடனே அந்தத் தாய் அவரது போதனையைத் தொடங்கிவிடுவார். டியூஷனுக்கு வரும்போதெல்லாம் அரை மணி நேரம் என் மனைவியிடம் பேசுவார். அதைப் படிக்கணும், இதைப் படிக்கணும், யார்கூடயும் பேசவிடாதீங்க, விளையாடக்கூடாது, சிரிக்கக்கூடாது, ஒழுக்கம் முக்கியம், தூங்கினா தண்டனை தாங்க, என்று இப்படி நிறைய சொல்லுவார். சில நாள்கள் நான் கேட்டுக்கொண்டிருந்தேன். பிறகு எனக்குப் பொறுமை போய்விட்டது. ஒரு கட்டத்தில் என் மனைவிக்கு இதைக் கேட்க கேட்க ரத்தக் கொதிப்பே வர ஆரம்பித்துவிட்டது. தினம் வார்த்தை மாறாமல் இதையே ஒருவரால் எப்படிச் சொல்லமுடிகிறது என்றெல்ல்லாம் ஆச்சரியப்பட்டிருக்கிறோம்.
இப்படி வளர்ப்பதுதான் சரி என்று என் மனைவி நினைத்துவிடுவாளோ என்று நான் அஞ்சும் அளவுக்கு ஆகிப்போனது அந்தத் தாயின் தொடர் அறிவுரைகள்/கேள்விகள். அந்தக் குழந்தையிடம் கேட்டேன். ”விளையாடுவியா?” “எப்பவாச்சும். அம்மா திட்டுவாங்க.” “டிவி?” “எப்பவாச்சும். அம்மா திட்டுவாங்க.” நானும் என் மனைவியும் அந்தக் குழந்தையிடம் மெல்ல பேச ஆரம்பித்தோம். அந்தக் குழந்தை தனது துக்கங்களை அதன் மொழியில் சொல்லத் தொடங்கியது. விளையாடாததும், எப்போதும் தன் அம்மா தன்னைப் படிக்கச் சொல்லிக் கண்டிப்பதும் அந்தக் குழந்தைக்கு பெரிய மன நெருக்கடியைத் தந்திருந்தது. அதை விளக்கமாக அந்தக் குழந்தையின் அம்மாவிடம் என் மனைவி சொன்னாள். அவர் அதைப் பொருட்படுத்தவே இல்லை. “அவளுக்கு எப்பவும் விளையாடணும், டிவி பார்க்கணும், வேற வேலை இல்லை. நீங்க ஃபிரண்ட்லியா இருக்கதால உங்களை ஏய்க்கறா” என்று ஒரே வரியில் நாங்கள் சொன்னதை புறந்தள்ளிவிட்டார்.
எங்கள் வீட்டுக்கு வரும்போது நானும் என் மனைவியும் அந்தக் குழந்தையிடம் நன்றாகப் பேசுவதால் எங்களுடன் சிரிக்க ஆரம்பித்தது. அதையும் ஒரு குற்றச்சாட்டாக அந்த அம்மா சொன்னார். ”கண்டிஷனா இருங்க மிஸ்.” உடனே என் மனைவி, இது எங்க ஸ்டைல், இப்படித்தான் நாங்க பாடம் எடுப்போம், இருப்போம். உங்க பொண்ணு மார்க் குறைஞ்சா மட்டும் கேளுங்க என்று சொல்லிவிட்டாள். உடனே அவர், அதுக்கில்ல, அவளை ஐ ஏ எஸ் ஆக்கணும், அதுதான் என்றார். சலித்துப் போய்விட்டது. கடைசி வரை அந்த அம்மா மாறவே இல்லை. அந்தப் பெண்ணுக்கு விளையாட்டும் சக குழந்தைகளிடம் பேசுவது சேட்டை செய்வது என்பதெல்லாம் எங்கள் வீட்டில் இருக்கும் நேரத்தில் மட்டுமே கிடைத்தது. அதிலும் அந்த அம்மா, “நல்லா மூணு மணி நேரம் வெச்சி அனுப்புங்க” என்பார். எந்தக் குழந்தையும் ஒரு மணி நேரத்துக்கு மேல் படிக்க முடியாது. படிக்க என்ன இருக்கிறது என்பது அடுத்த கேள்வி! ஆனால் அந்தக் குழந்தையை மூன்று மணி நேரம் படிக்க வைக்கவேண்டுமாம். ஜஸ்ட் 1ம் வகுப்புப் படிக்கும் குழந்தைக்கு நேர்வதைப் பாருங்கள்.
என் மனைவி மிகத் தீர்மானமாகச் சொன்னாள். “உங்க பொண்ணு பாடத்தை படிக்க வைப்போம். ரொம்ப கெட்டிக்காரி. ஒரு மணி நேரமே அதிகம். எப்பவும் முதல் ரேங்க்தான். அப்புறம் என்ன? மீதி நேரம் விளையாடத்தான் செய்வாள்.” இப்படிச் சொல்லியும் அந்த அம்மா மீண்டும் மீண்டும் அவர் கருத்துகளைப் புகுத்திக்கொண்டே இருந்தார். ஏன் டியூஷனை மாற்றவில்லை என்று யோசித்தேன். அவரது கணவரே காரணம். இதையெல்லாம் அந்த அம்மா அவரது கணவரிடம் சொல்லி இருப்பார் போல. கணவருக்கு மகிழ்ச்சி தாளவில்லை. தன் மகள் சிரித்து விளையாடட்டும் என்று சொல்லி, என்ன ஆனாலும் டியூஷனை மட்டும் மாற்றக்கூடாது என்று உத்தரவிட்டுவிட்டார். அந்த அம்மாவுக்கு டியூஷனை மாற்றும் எண்ணமில்லை. ஆனால் எப்படியாவது தான் விரும்பும் டியூஷன் டீச்சராக என் மனைவியை மாற்றிவிட எண்ணம். அது நடக்கவில்லை. நாங்கள் இப்போது வீடு மாற்றிக்கொண்டு வந்துவிட்டோம்.
எங்கள் வீட்டுக்கு வரும்போது சிரித்துக்கொண்டும் என்னுடனும் என் மகளுடனும் விளையாடிக்கொண்டிருந்த அந்த பெரிய கொசு போன்ற குழந்தையை இப்போது எந்த டீச்சர் கசக்கி எறிந்திருக்கிறாரோ என்று தெரியவில்லை.
இப்போது ஒரு மாதத்துக்கு முன்பு இன்னொரு பையன் டியூஷனுக்கு சேர்ந்தான். 2ம் வகுப்பு. அந்தப் பையனின் அம்மாவின் கண்டிஷன்: யாருடனும் விளையாடக்கூடாது. தெருவில் விளையாடவே கூடாது. டியூஷன் விட்ட உடன் காத்திருந்து அந்த அம்மா வந்ததும்தான் வீட்டுக்குச் செல்லவேண்டும். (அந்தப் பையனின் வீடு பக்கத்து வீடுதான்.) தனியாக வரக்கூடாது. ஆங்கிலம் ஹிந்தி தமிழ் இன்னும் என்ன என்ன உண்டோ அத்தனையிலும் தேர்ச்சி பெறவேண்டும். பாடப் புத்தகங்கள் தவிர எதையும் படிக்கக்கூடாது. (நான் காமிக்ஸ் படி என்று அந்தப் பையனிடம் சொல்லி இருந்தேன். மறுநாள் வந்து பையன் சொன்னது, அதெல்லாம் அம்மா படிக்கக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க.) டிக்ஷ்னரி தேவையற்ற ஒரு பொருள். டீச்சர் சொல்லித் தந்தால் போதுமானது.
அந்தப் பையனிடம் மெல்ல சொன்னேன். “வீட்டுக்கு போய் அம்மாகிட்ட அங்கிள் சொன்னாங்கன்னு சொல்லுப்பா. தினமும் வெளிய விளையாடு.” மறுநாள் வந்து சொன்னான், நான் சொன்னேன் அங்கிள், எங்க அம்மா திட்டறாங்க என்றான். யாரை என்று கேட்கவில்லை. மறுநாள் அந்த அம்மா வந்தபோது அந்தப் பையன் ஓடி வந்து என்னிடம், அங்கிள் நீங்களே எங்க அம்மாகிட்ட சொல்லுங்க என்றான். என் மனைவியைச் சொல்லச் சொன்னேன். பாச்சா பலிக்கவில்லை. “தம்பி உன் அதிர்ஷ்டம் அவ்ளோதான்” என்று சொல்லிவிட்டேன். 🙁
நேற்றிலிருந்து டியூஷனையும் நிறுத்திவிட்டார்கள். காரணம், என் மனைவி சொன்ன பழைய கண்டிஷன்களே. விளையாட விடுங்க, நல்லா படிக்கறான், அது போதும், ரொம்ப கஷ்டப்படுத்த வேண்டாம், நல்லா ஜாலியா இருக்கட்டும் – இவைதான் அந்தப் பையன் டியூஷன் நிற்கக் காரணம். இங்கேயும் அந்தப் பையனின் அப்பா, தன் மகன் விளையாடுவதை விரும்புகிறார். ஆனால் அம்மா செம ஸ்ட்ரிக்ட். “தெருவுல கண்டவனோட சேர்ந்தா புள்ள கெட்டுடுவான். அவனுக்கு உடம்புக்கும் முடியலை, விளையாண்டா எதாவது ஆயிடும். இத்யாதி இத்யாதி.”
இப்படி நிறைய பெற்றோர்கள். ஒரு இரட்டையர்கள் டியூஷன் வருகிறார்கள். அவர்களிடம் நாம் படத்துக்குப் போவோம் என்று அழைத்தேன். இதுவரை தியேட்டரில் சினிமாவே பார்த்ததில்லை என்றார்கள். அவர்கள் வயது 15! நான் அதிர்ந்துவிட்டேன். ஏனென்றால் படம் பார்ப்பது தவறு என்பது அவர்கள் பெற்றோர்கள் சொல்லித் தந்தது. தமிழ்ப்படங்கள் இப்படித்தான் இருக்கின்றன என்றாலும், தேர்ந்தெடுத்துப் படங்களைக் காட்டியிருக்கலாமே! நான் அந்தப் பெற்றோர்களை அழைத்துப் பேசினேன். படம் மட்டும் வேண்டாம் ப்ளீஸ் என்று சொல்லிவிட்டார்கள். மற்ற வகைகளில் இந்தப் பெற்றோர்கள் தங்கள் மகன்களின் உணர்வுகளை மதிக்கிறார்கள் என்பதால், இதில் ஏதோ காரணம் உள்ளது என்று நினைத்துக்கொண்டு, நானும் அத்தோடு அதை விட்டுவிட்டேன்.
இந்த ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு படிக்கும் பையன்களின் நிலைமையைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. தினமும் அரை மணி நேரம் மேல் படிக்க அவர்களுக்கு ஒன்றும் இல்லை. மீதி நேரத்தில் டிவி பார்க்கலாம், தெருவில் களைத்துப் போகும் அளவுக்கு விளையாடலாம். சைக்கிள் ஓட்டலாம். திருடன் போலிஸ் ஆடலாம். ஷட்டில் ஆடலாம். படம் பார்க்கலாம். என்ன என்ன இருக்கிறது! அதைவிட்டுவிட்டு எப்போதும் படிப்பு படிப்பு என்று ஏன் கட்டிக்கொண்டு அழுகிறார்கள். இந்தப் பெற்றோர்கள்?
எல்லோரும் 90+ மதிப்பெண்கள் வாங்கிவிட்டால், 70+ மற்றும் 40+களையெல்லாம் வாழவைப்பது யார்? என் மனைவியிடம் நான் தீர்மானமாகச் சொன்னது, எப்பவும் படி படி என்று சொல்லக்கூடாது, மதிப்பெண்கள் குறைந்துவிட்டால் ஜஸ்ட் ஓர் எச்சரிக்கை போதும், தண்டனை கூடாது என்பது. (என் மகன் இதை அவன் டீச்சரிடமே சொல்லி, அவர் எங்களை அழைத்து, “அதை நீங்க மனசுக்குள்ள வெச்சிக்கோங்க, பையன்கிட்ட சொல்லாதீங்க, ஏண்டா மார்க் குறைஞ்சதுன்னா எங்க அப்பா திட்டமாட்டாங்கன்னு என்கிட்டயே சொல்றான்” என்று சொன்னது உபரிக்கதை.)
மிக முக்கியமாக, காமிக்ஸ், குழந்தைகள் நூல்களைப் படிக்க வைப்பது. படிப்பது என்பது சுவாரஸ்யமானது என்பதை உணர இதுதான் வழி. உண்மையில் இந்த காமிக்ஸைப் படிக்கவே என் மகன் முகம் சுழிக்கிறான். இருந்தாலும் கட்டாயப்படுத்தி வாராவாரம் படிக்க வைக்கிறேன். அதுவும் மிகக் குறைவான நேரத்துக்கு மட்டுமே. மற்ற நேரம் முழுக்க அவன் விளையாடிகொண்டுதான் இருப்பான். எனக்கு இப்போது 38 வயது. என்னால் விளையாட முடியவில்லை. 🙁
விளையாடும் நேரத்தில் விளையாடும் வயதில் குழந்தைகளை விளையாட விடுங்கள். ஒருவன் ஐ ஏ எஸ் கனவைப் பெறுவதற்கு 5 வயது ஏற்றதல்ல. 🙁 எப்போதும் படித்துக்கொண்டே இருப்பதற்கு குழந்தைகள் சாவி முடுக்கிவிடப்பட்ட குழந்தைகள் அல்ல. தமிழ் பேசுவது பாவமல்ல. ஆங்கிலம் தெரியாதது அவமானமல்ல. ஐயோ, எத்தனை எத்தனை கற்பிதங்கள் இந்தப் பெற்றோர்களுக்கு. நீங்கள் தோற்றுப் போனதை ஜீரணிக்க உங்கள் குழந்தைகளைப் பந்தயம் வைக்காதீர்கள். எங்காவது சென்று இதையெல்லாம் சொல்லி கத்த வேண்டும் போல் உள்ளது.
உண்மையில் குழந்தைகளுக்கு டியூஷன் தேவையே இல்லை. வேறு வழி இல்லை என்றால் மட்டும் டியூஷன் சேர்த்துவிடுங்கள். சனி ஞாயிறுகள் குழந்தைகளின் விளையாட்டுக்கு உருவாக்கப்பட்டவை என்று புரிந்துகொள்ளுங்கள். ஒரே நேரத்தில் ஆங்கிலம் தமிழ் ஹிந்தி சம்ஸ்கிருந்தத்தில் ஆறு வயதில் குழந்தைகள் புலைமை பெற்றுவிடும் என்று நம்பாதீர்கள். பக்கத்து வீட்டுப் பையன் செய்கிறான், என் பையன் ஏன் செய்யக்கூடாது என்று ஒருக்காலும் கேட்காதீர்கள். ஒரு குழந்தைக்கு ஒரு திறமை இருக்கும், இன்னொரு குழந்தைக்கு இன்னொரு திறமை இருக்கும் என்பதைவிட முக்கியமானது, இயல்பிலேயே திறமை குறைவான குழந்தைகளும் இருக்கலாம் என்று புரிந்துகொள்ளுங்கள். அது உங்கள் குழந்தையாகவே இருக்கலாம். ஏனென்றால் நாம் அப்படித்தான் இருந்தோம்.
(தொடரும்)