குரு உத்ஸவ்

குரு உத்ஸவ் என்ற பெயர் மாற்றம் ஏன் கூடாது என்பதற்கு நாராயணன் எழுதியிருக்கும் இப்பதிவே, குரு உத்ஸவ் ஏன் தேவை என்பதை விளக்கப் போதுமானதாகிவிடுகிறது. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவனை வானுறையும் தெய்வத்துள் வைப்பதே நம் மரபு. மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்பதே நம்மை வழிநடத்தும் கருவி. (நீ த்வைதி இல்லையா என்பவர்கள் விலகி நிற்க. த்வைதமும் அத்வைதமும் மிக மெல்லிய வகையில், தெய்வத்து நிகராகலாம், தெய்வமாகவே ஆகலாம் என்பதில் மட்டுமே முரண்படுகிறது என்று மிக எளிமையாக எடுத்துக்கொண்டுவிட்டேன் என்றும் என்னளவில் இரண்டும் ஒன்றுதான் என்று புரிந்துகொள்க!) எனவே மனிதனை தெய்வமாக்குவது ஹிந்து, எனவே இந்திய, முறைமை. இதில் மேன்மையே உள்ளது. மனிதன் எக்காரணத்தினாலும் தெய்வமாக முடியாது என்பதும் தெய்வம் ஒன்றே என்பதும் நம்க்கு ஒவ்வாத ஆபிரஹாமிய சிந்தனைகள். இந்த சிந்தனைகளில் இருந்து வெளிவர குரு உத்ஸவ் என்ற வார்த்தை மாற்றமே உத்வேகம் அளிக்கக்கூடியது என்பதை நான் நம்பவில்லை என்றாலும், இந்தப் பெயர் மாற்றத்தை எதிர்ப்பவர்கள் நம்புவதால் அந்தப் பெயர் மாற்றத்தை நான் வரவேற்கிறேன். மனிதன் என்பவன் நிச்சயம் தெய்வமாகலாம்.

குரு என்பதற்கும் ஆசிரியர் என்பதற்கும் நானாகவே ஒரு பொருளைக் கொண்டிருக்கிறேன். ஆசிரியர்கள் குருவாகவே வேண்டும் என்பதே என் ஆசை. குரு என்னும் வார்த்தை (அது தமிழா சம்ஸ்க்ருதமா என்பது தேவையற்றது. தமிழில் பெருவகையில் புழங்கியபின்னர் இது தமிழ் வார்த்தையாகவே இருக்கட்டும் என்பதே என் கருத்து) பெரிய அளவில் பரந்த அளவில் ஆழமான அளவில் ஒரு பொருளைக் கொண்டுவிடுகிறது என்று தோன்றுகிறது. ஆசிரியர் என்பது நம் இயல்பான வாழ்க்கையில் அதிகம் புழங்கிவிட்டதால், எதையேனும் கற்றுத் தருபவர் ஆசிரியர் என்ற பொருளில் பழக்க அளவில் சுருங்கிவிட்டது என்றும் எனக்குத் தோன்றுகிறது. இவை தோற்ற மயக்கங்களாகவே இருக்கலாம். ஆனால் இன்று இப்படித்தான் தோன்றுகிறது என்பதைப் புறக்கணித்துவிட்டு எப்படி யோசிக்கமுடியும்?

இப்படி ஒரு பிரிவை வைத்துக்கொண்டோமானால், இதை ஏற்றுக்கொண்டோமானால், எனக்கு குரு என்று யாருமில்லை. இதில் ஆணவம் எதுவும் இல்லை. ஒரு குருவை அடையும் குறைந்தபட்ச தகுதிகூட எனக்கில்லை என்ற அளவில் நான் இதை என்னை மட்டம்தட்டித்தான் சொல்கிறேன். குரு இல்லை என்பதல்ல, குருவைக் கண்டுணர்ந்து குருவை ஏற்கத்தக்கவனாக நான் இன்னும் தயாராகவில்லை என்றே சொல்கிறேன். நம்புங்கள். ஆனால் ஆசிரியர்கள் பலர் இருந்திருக்கிறார்கள். மிருதஞ்ஜெயன் என்ற ஆசிரியர் அடிக்கடிச் சொல்வார், கல்லூரியில் படிப்புக்குப் பின்னர் தேர்வு ஆனால் வாழ்விலோ தினம் தினம் தேர்வுக்குப் பின்னர்தான் படிப்பு என்று. அப்படி எனக்குப் பலப்பல விஷயங்களைக் கற்றுத் தந்த, கற்றுத் தந்துகொண்டிருக்கும் ஒவ்வொருவரும் வணக்கத்துக்குரியவரே. (க்ளிஷே போதும்.)

குரு இல்லை என்றாலும் குருத்துவத்தில் சில பரிமாணங்களை சில பொழுதுகளில் காட்டிய ஆசிரியர்கள் இருந்திருக்கிறார்கள். அந்த ஆசிரியர்கள் அனைவரும் வணக்கத்துக்குரியவர்கள்.

நான் மூன்றாம் வகுப்புப் படிக்கும்போது எனக்கு வகுப்பெடுத்த முத்துலக்ஷ்மி டீச்சர் நினைவுக்கு வருகிறார். மாணவர்கள் வீட்டுப் பாடம் செய்யாமல் வருவது பாவமல்ல, சேட்டை செய்வது குற்றமல்ல, எதிர்த்துப் பேசுவது தவறல்ல என்று செயல்பட்ட அந்த ஆசிரியர் எப்போதுமே எங்களிடம் (என்னிடம்) அன்பாகவே இருந்தார். அவருடன் வேலை பார்த்த மற்ற ஆசிரியர்கள் முகத்தில் எள்ளும் கடுகும் வெடித்தபோது (அப்போது அந்த வயதில் அப்படித் தோன்றியது) இவர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார். பின்னாளில் என்னுடன் டேக்-கில் வேலை செய்த மந்திரமூர்த்தி இந்த ஆசிரியரின் மகன் என்று அறிந்தபோது, முத்துலக்ஷ்மி டீச்சரின் மேல் இருந்த பிரியும் மந்திரமூர்த்தி அண்ணனின் மேலும் வந்தது என்றால், எனக்கு முத்துலக்ஷ்மி டீச்சரை எவ்வளவு பிடித்தது என்று பார்த்துக்கொள்ளுங்கள். சேரன்மகாதேவியில் இருந்த அந்த பஞ்சாயத்து போர்ட் ஸ்கூல் முத்துலக்ஷ்மி டீச்சரின் முகம் இன்னும் நினைவில் இருக்கிறது. நான் ஆசிரியராக இருந்தால் என்னால் முத்துலக்ஷ்மி டீச்சர் போல இருந்திருக்கமுடியாது என்பதே இந்த டீச்சரின்மேல் மரியாதையை வரவழைக்கிறது.

9ம் வகுப்பை மதுரையில் எம் எல் டபுள்யூ ஏ பள்ளியில் படித்தேன். அப்போது எனக்குத் தமிழாசிரியராக இருந்தவர் லக்ஷ்மணன் ஐயா. இவர் இல்லாவிட்டால் தமிழின் இலக்கணத்தை என் வாழ்நாள் எதிரியாக நினைத்திருப்பேன். தமிழ் இலக்கணம் என்பது எளிமையானது, அழகானது, ஆர்வத்துடன் படிக்க வல்லது என்பதை நிரூபித்தவர் அவர். இன்று வரை எனக்குத் தெரிந்த தமிழுக்கு அடிப்படை வித்து லக்ஷ்மணன் ஐயா இட்டதே.

10ம் வகுப்பில் எம் எல் டபுள்யூ ஏ பள்ளியில் நார்மன் சார் எனக்கு வகுப்பாசிரியராக வந்தார். இவர் என் மேல் வைத்திருந்த பாசம் இப்போதும் எனக்குப் புரியாததாக இருக்கிறது. குள்ளப்பையா என்றுதான் என்னை அழைப்பார். கிறித்துவ இறைவழிபாட்டில் தீவிர நம்பிக்கை கொண்டவர் என்று இப்போது தோன்றுகிறது. வகுப்பு முடிந்ததும் இசை நிகழ்ச்சி ஒன்று நடக்கும் என்று சொல்லி, சிலரை அழைத்துவந்தார். அவர்கள் கிறித்துவ இறைப் பாடல்களைப் பாடினார்கள். கண்ணை மூடி இறைவனை நினைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். நான் மறுநாள் நார்மன் சாரிடம் எனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை என்று சொன்னேன். நான் ஹிந்து என்றோ, நடப்பது கிறித்துவத்தைப் புகுத்தும் செயல் என்றோ அன்று எனக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால் எனக்கு ஒப்பவில்லை. என் தெய்வம் ஏசுவல்ல என்று மட்டும் மனத்தில் பட்டது. இப்ப என்ன, நீ உனக்குப் பிடிச்ச சாமியை நினைச்சுக்கோ என்றார். நான் தலைமை ஆசிரியரான தர்மராஜ் சாரிடம் சென்று சொன்னேன். (இவரைப் பற்றி அடுத்து.) அவர் அமைதியாகக் கேட்டுக்கொண்டார். அதற்குப் பின்னர் அதுபோன்ற வகுப்பு நடக்கவில்லை. ஆனால் நார்மன் சார் எப்போதும் போல் என்னிடம் அன்பாகவே இருந்தார். பள்ளி இறுதித் தேர்வின்போது மிகச் சிறிய பைபிள் ஒன்றை (ஒரு குழந்தையின் கை அகலத்துக்கும் குறைவானது) அனைவருக்கும் பரிசளித்தார். எனக்குத் தரும்போது, உனக்கு வேண்டாம்னா பரவாயில்லை என்றார். இல்லை, தாங்க சார் என்று வாங்கி வைத்துக்கொண்டேன். பல நாள் அதனுள்ளே ஓம் டாலரை வைத்திருந்தேன். பள்ளி சமயத்தில் திடீரென்று ஒருநாள் அவரை ஒரு சாலையில் பார்க்க நேர்ந்தது. வாடா என்று அழைத்துக்கொண்டு போய் எனக்கு பஜ்ஜி வாங்கித் தந்தார். இப்போது நினைத்தாலும் அன்று பட்ட கூச்சம் இப்போதும் வருகிறது. ஆனாலும் எந்த ஆசிரியர் இப்படிச் செய்வார் என்பதும் நினைவுக்கு வருகிறது. என் வாழ்வில் நான் நன்றாக இருக்கவேண்டும் என எனக்காகப் பிரார்த்தித்த நார்மன் சாரை இன்றும் நினைத்துக்கொள்கிறேன்.

எம் எல் டபுள்யூ ஏ பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த தர்மராஜ் சார். வாழ்நாளில் என்னால் இவரை மறக்கவே முடியாது. நான் அங்குப் படித்த மூன்று ஆண்டுகளும் என் மீது மிகுந்த பாசத்தையும் நம்பிக்கையையும் வைத்திருந்தவர் தர்மராஜ் சார். நார்மன் சார் கிறித்துவப் பாடல் குழுவைக் கூட்டிக்கொண்டு வந்தபோது இவரிடம் சொன்னேன். அமைதியாகக் கேட்டுக்கொண்டார். பின்னர் இவர் தலையீட்டின்பேரில்தான் அது நிறுத்தப்பட்டது என்பதைப் புரிந்துகொண்டேன். பத்தாம் வகுப்பு முடிந்ததும் டிசி வாங்கப் போயிருந்தேன். ஐயரே இங்கயே படி, என் வீட்ல தங்கிப் படி என்றார். நான் திருநெல்வேலிக்குப் போகவேண்டி இருந்தது. மனதில்லாமல் டிசி கொடுத்து வாழ்த்தி அனுப்பினார். அவரது முகவரியைக் கேட்டேன். ஜார்ஜ் தர்மராஜ்னு போட்டு, ஸ்கூல் அட்ரஸுக்கு போஸ்ட்கார்ட் போடு, சரியா எனக்கு வந்துரும் என்று சொன்னார். அப்போதுதான் அவரும் கிறித்துவர் என்றே தெரிந்தது. அதுவரை அன்றுவரை அவர் கிறித்துவர் என்று எனக்குத் தெரியாது. அவரிடமே சென்று நார்மன் சாரின் கிறித்துவக் குழுவின் பாடலைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். ஆனால் அவரும் இதைப் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. பத்தாம் வகுப்பில் நாங்கள் நல்ல மதிப்பெண்கள் எடுக்க தர்மராஜ் சார் பட்ட பாடு சொல்லமுடியாதது. எங்களுக்குகாக எதையும் செய்ய அவர் தயாராக இருந்தார். அவர் இல்லையென்றால் எங்கள் பள்ளியே இல்லை என்னும் அளவுக்கு அவர் பள்ளியின் மேல் ஈடுபாட்டோடு இருந்தார். அவரை மறக்கமுடியாது.

பத்தாம் வகுப்பில் வரலாறு புவியியல் சமூகவியல் எடுத்த கிருஷ்ணன் சார். உட்கார்ந்த இடத்திலேயே கண்முன் அத்தனையையும் படமாக விரித்து பாடம் நடத்த வல்லவர். அவரைப் போன்ற ஒருவர் பாடம் எடுத்தால் வரலாறெல்லாம் இனிக்கும். புவியியலெல்லாம் பிடிக்கும். சமூகவியல் சலிக்காது. பத்தாம் வகுப்புப் பரிட்சைக்கு முன்னர் அவர் பயன்படுத்திக்கொண்டிருந்த பேனாவை எனக்குப் பரிசாகத் தந்தார். அன்றோடு அவரது பணி நிறைவடைந்து பள்ளியை விட்டும் விடைபெற்றுக்கொண்டார். மிக நல்ல ஆசிரியர்.

பத்தாம் வகுப்பில் ஜான் சார். கணித ஆசிரியர். இத்தனை நன்றாக கணிதம் எடுக்கமுடியுமா என்று வியக்க வைத்தவர். எதையும் விடாமல் புத்தக அட்டை டூ அட்டை நடத்திய முதல் ஆசிரியர். நண்பனைப் போல என்னிடம் பழகியவர். தினமும் மதியம் தன் வீட்டுக்குச் சாப்பிடச் செல்லும்போது சைக்கிளில் டபிள்ஸ் என்னை ஏற்றிக்கொண்டு சென்று என் வீட்டில் இறக்கிவிட்டுவிட்டுப் போனவர். இதெல்லாம் ஒரு ஆசிரியர் செய்வாரா என்று என்னை ஆச்சரியப்பட வைத்தவர். நான் நிச்சயம் நல்ல மதிப்பெண் பெறுவேன் என என்னைவிட அதிகம் நம்பியவர்.

பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் திருநெல்வேலி மதிதா பள்ளியில் எனக்குத் தமிழ் கற்பித்த சோமசுந்தரம் ஐயா. இவரைப் பற்றிய சில மதிப்பீடுகள் வயதின் காரணமாக பின்னர் சற்றே மாறி, மீண்டும் அதே வயதின் காரணமாக சரிந்த மதிப்பீடு மீண்டும் உயர்ந்தது என்பதைச் சொல்ல்த்தான் வேண்டும். இவர் தமிழ் இலக்கணம் கற்பித்த முறை மறக்கமுடியாதது. பல இலக்கண விதிகளை அப்படியே ஒப்பிப்பார். மிக அழகாக விளக்குவார். மற்ற மாணவர்கள் எல்லாம் எரிச்சலில் இருக்க, நானும் அவரும் மட்டும் விடாமல் இலக்கணம் பற்றிப் பேசிக்கொண்டிருப்போம். நீங்க ரெண்டு பேரும் தனியா போய் பேசுங்கல என்று நண்பர்கள் அலறுவார்கள். பனிரெண்டாம் வகுப்புக்கான ஃபைனல் ரிவிஷன் தேர்வில் தமிழில் 197 மதிப்பெண்கள் எடுத்திருந்தேன். தன் வாழ்நாளில் தமிழை இத்தனை ஆர்வமாகக் கற்ற மாணவனைப் பார்த்ததில்லை என்று சொல்லி, எனக்கு நன்னூல் ஒன்றைப் பரிசளித்தார். 

மற்ற ஆசிரியர்கள் பாடம் எடுக்காமல் உதார் விட்டுத் திரிந்தபோது, பள்ளியில் பாடம் எடுப்பதைத் தன் சத்தியச் செயலாகக் கடைப்பிடித்த சுப்பையா சார். கணித ஆசிரியர். நான் அவரிடம் டியூஷன் சேர்ந்தபோது, ஒனக்கு என்ன இங்க தனியாவா எடுக்கபோறேன், அங்க எடுக்கதுதான் இங்கயும், ஒனக்கு டியூஷன் வேண்டாம்ல என்று சொன்னவர். பள்ளியில் 45 நிமிடங்கள் கொண்ட ஒரு வகுப்பில் 45வது நிமிடம் வரை பாடம் நடத்தியவர். கணிதத்தின் மேல் காதல் வரக் காரணமாய் இருந்த ஆசிரியர் சுப்பையா சார். இன்றும் மதிதா பள்ளியில் பணியில் இருக்கிறார்.

மதிதா கல்லூரியில் வேதியியல் கற்பித்த மிருதஞ்ஜெயன் சார், விஸ்வநாதன் சார், கந்தசாமி சார். இவர்கள் மூவரும் முக்கண்களாக இருந்து எங்களை வழிநடத்தினார்கள். வேதியியலைக் காதலோடு படிக்க் வைத்த விற்பன்னர்கள் இவர்கள். எங்கள் வயதைப் புரிந்துகொண்டு எங்களிடம் பழகியவர்கள். எங்களின் விளையாட்டுத்தனத்தையும் விடலைத்தனத்தையும் மன்னித்தவர்கள்.

இவர்கள் அத்தனை பேரையும் தன்னுள்ளே கொண்டு எனக்குக் கல்வி கற்றுத் தந்த என் தாத்தா என் வாழ்நாளின் மிக முக்கியமான ஆசிரியர். இவர் இல்லாவிட்டால் நான் இல்லை.

இத்தனை ஆசிரியர்களுக்கும் என் குரு வணக்கம். ஆசிரியர் தினம் என்றதால் இன்று கொஞ்சம் சிறப்பாக நினைக்கிறேன். ஆனாலும் மற்ற எல்லா தினங்களிலும் இவர்களை நினைத்துக்கொண்டுதான் இருக்கிறேன். கண்ணில் நீருடன் அவர்கள் அனைவருமே தெய்வத்துள் வைக்கத் தக்கவர்கள் என்றெண்ணி அவர்கள் அனைவரின் பாதம்தொட்டு நமஸ்கரிக்கிறேன். என் திமிரினாலும் அறியாமையாலும் இவர்களுக்கு எந்த வகையிலேனும் மரியாதைக் குறைவை ஏற்படுத்தியிருந்தால் பெருந்தன்மை கொண்ட இவர்கள் என்னை மன்னித்துவிடுவார்கள் என்பது எனக்குத் தெரியும். குரு உத்ஸவ் தொடரட்டும்.

Share

Comments Closed