டியூஷன் (1)

என் மனைவி கடந்த இரண்டு வருடங்களாக டியூஷன் எடுத்துக்கொண்டிருக்கிறாள். அதில் வரும் சில மாணவர்களைப் பார்க்கவே பாவமாக இருக்கிறது. இவர்கள் இந்த உலகத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதே புரியவில்லை.

ஒரு மாணவன், கடந்த வருடம் 6ம்வகுப்பில் படிக்கும்போது டியூஷனுக்கு வந்தான். ஒரு வாரம் பாடம் எடுத்த என் மனைவி, என்னிடம் இயற்பியலில் ஒரே ஒரு பாடம் எடுத்துப் பாருங்க என்றாள். நானும் ஆவலாக அவனுக்கு மிக ஆழமாக விரிவாக இயற்பியலில் ஒரு பாடம் எடுத்தேன். பையன் ஒரு தனியார் பள்ளியில் சி பி எஸ் ஈ பாடத்திட்டத்தில் படித்துக்கொண்டிருந்தான். அவன் நான் நடத்தியதை மிகவும் ஆர்வமாகக் கேட்டான். அதை ஒட்டிய சில யூடியூப் வீடியோக்களைக் காட்டினேன். மிகவும் ஆர்வமாகப் பார்த்தான். அன்றைய வகுப்பு முடிந்ததும், மறுநாள் அந்தப் பாடத்தை எழுதிக் காண்பிக்கவேண்டும் என்று சொல்லி, வீட்டில் வைத்துப் படித்துவிட்டு வருமாறு சொல்லி அனுப்பினேன். என் மனைவி அமைதியாக இருந்தாள்.

மறுநாள் அந்தப் பையன் வந்தான். கேள்விகளை எழுதிக் கொடுத்தேன். அவன் பதில் எழுதித் தரவே இல்லை. என்னதான் எழுதியிருக்கிறான் என்று பார்க்கலாம் என வாங்கிப் பார்த்தபோது, அவன் எழுதிய விதமும் எழுத்தும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒரு ஆங்கில வார்த்தையைக் கூட அவனால் ஒழுங்காக எழுத இயலவில்லை. ஒரு கேள்விக்கும் சரியான பதிலை எழுதத் தெரியவில்லை. எழுதிய அனைத்துப் பதில்களும், அனைத்து வார்த்தைகளும் தவறு. ஆறாவது படிக்கும் பையனுக்கு ஒரு வரி கூட ஆங்கிலத்தில் மனப்பாடம் செய்து எழுதத் தெரியவில்லை என்பது அதிர்ச்சியாக இருந்தது. இப்படிப்பட்ட ஒரு பையனுக்கு நேரடியாக ஒரு பாடத்தை எப்படி விழுந்து விழுந்து எடுத்தாலும் அது பயன் தரப்போவது கிடையாது. தமிழ் எப்படி படிப்பாய் என்று கேட்டேன். அவன் பெயரில்கூடத் தமிழ் உண்டு. தமிழ் நல்லா வரும் என்றான். முதல் மனப்பாடச் செய்யுளை எழுதச் சொன்னேன்.

நான்கு வரி உள்ள அந்த மனப்பாடச் செய்யுளை எழுதிக் காண்பித்தான். நான்கைந்து வார்த்தைகள் தவிர அனைத்தும் பிழையுடன் இருந்தன. சரி, ஒருமுறை பார்த்து எழுதிவிட்டு வா என்றேன். அப்போதும் கிட்டத்தட்ட அதே பிழைகள் அப்படியே இருந்தன. பார்த்துத்தானே எழுதினாய் என்று கேட்டேன். ஆமாம் என்றான். என்னால் இதை ஜீரணிக்கவே முடியவில்லை. அடுத்த இரண்டு நாள்கள் அவனுக்கு அ, ஆ மற்றும் க ங ச நடத்தினாள் என் மனைவி. அதில் சில எழுத்துகளை எழுதச் சொன்னபோதும் அவனுக்கு எழுதத் தெரியவில்லை. உயிரெழுத்து, மெய்யெழுத்து என எதையும் சரியாக எழுதத் தெரியவில்லை.

அந்தப் பையனின் தந்தையை அழைத்துப் பேசினேன். மிகவும் அதிர்ச்சியாக இருந்தது அவருக்கு. பார்த்துமா எழுதத் தெரியலை என்று கேட்டார். அவன் எழுதியதை வாங்கிப் பார்க்குமாறு சொன்னேன். உடனே அவனை ஐந்தாம் வகுப்பில் சேர்ப்பது நல்லது என்று சொன்னேன். அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏற்கெனவே நான்காம் வகுப்பில் இரண்டு முறை இருந்துவிட்டான், இனியும் அப்படிச் செய்யமுடியாது என்றார். இவனுக்கு ஆறாம் வகுப்பின் பாடங்களை நடத்துவது சரியாக வராது என்றேன். முதலில் தமிழிலும் ஆங்கிலத்திலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்புக்கான பாடங்களைத் தொடங்கவேண்டும், அதுவரை அவனது பள்ளியை நீங்களே சமாளித்துக்கொள்ளவேண்டும் என்றேன். சரி என்று சொல்லிவிட்டார். அடுத்த மூன்று மாதங்கள் அவனுக்கு தமிழிலும் ஆங்கிலத்திலும் அடிப்படைக் கல்வியை என் மனைவி நடத்தினாள். மெல்ல மெல்ல எழுத ஆரம்பித்தான். வேகமான முன்னேற்றமெல்லாம் திரைப்படங்களில் மட்டுமே சாத்தியம். மெதுவாக மிக மெதுவாக மெல்ல மெல்ல படிக்க ஆரம்பித்தான்.

படம் பட்டம் என்பதையெல்லாம் ஆறாம் வகுப்பு மாணவன் தவறுடன் எழுதுவது எனக்கு கடுமையான சோர்வை அளித்தது. இத்தனைக்க்கும் ஆறு வருடங்கள் முக்கியமான ஒரு தனியார்ப் பள்ளியில் வருடம் 40,000 ரூ கட்டிப் படித்திருக்கிறான். தனிப்பயிற்சியும் உண்டு. யாருமே இதைக் கண்டுகொள்ளவில்லையா? தெரியவில்லை. அவரது தந்தைக்கும் தாய்க்கும் அவர்களது தினப்படி வாழ்க்கையை எதிர்கொள்வதே பெரிய சவாலாக இருந்ததால் இவனைக் கவனிக்கமுடியவில்லை. மேலும் பணப் பிரச்சினை காரணமாக எப்படியாவது தன் மகன்களைப் (இந்தப் பையனுக்கு ஒரு தம்பியும் உண்டு, அவன் 3ம் வகுப்பு. அவனுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எந்த எழுத்தும் தெரியவில்லை. 3ம் வகுப்பு என்பதால் கொஞ்சம் தப்பித்தான்) படிக்கவைக்க கடுமையாக உழைப்பதை மட்டுமே இருவரும் முழுநோக்காகக் கொண்டுவிட்டார்கள். எனவே தன் மகன் எப்படிப் படிக்கிறான் என்பதில் கவனம் செலுத்தவில்லை. எப்படிப் படிக்கவைக்கவேண்டும் என்பதும் அவர்களுக்கு உண்மையிலேயே தெரியவில்லை.

ஒரு வழியாக ஆறு மாதங்களில் அந்தப் பையன் குறைவான பிழைகளுடன் எழுத ஆரம்பித்தான். நீண்ட கேள்விகளையெல்லாம் விட்டுவிட்டு, கோடிட்ட இடம் நிரப்புதல், பொருத்துதல், ஒரு வரிக் கேள்வி பதில், இருவரிக் கேள்வி பதில் இவற்றை மட்டும் படிக்க வைத்தாள் என் மனைவி. மெல்ல மெல்ல இரண்டு இலக்க மதிப்பெண்கள் வாங்கினான். அவனது வீட்டில் அதை ஒரு பெரிய சாதனையாகப் பார்த்தார்கள். இதுவரை அவன் எந்தத் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்கவில்லை. இதனால் பள்ளி அந்தப் பெற்றோர்களுக்குக் கடும் நெருக்கடியைத் தந்தது. பலவீனமான மாணவர்கள் அதிக நேரம் பள்ளியில் இருந்து படிக்க நிர்ப்பந்தம் செய்யப்பட்டார்கள். ஆனால் அந்த நேரத்தில் மாணவர்களால் படிக்க இயலாது என்பதே உண்மை. பள்ளி நிர்வாகம் பெற்றோர்களை நெருக்க ஆரம்பித்தது. இந்தப் பையனின் ஆசிரியர்கள் எப்படியாவது தன் வகுப்பில் இவன் சேராமல் இருக்கவேண்டும் என்றெல்லாம் பேசிக்கொண்டார்கள். ஏனென்றால் இவன் ஏன் இத்தனை குறைவாக  மதிப்பெண் பெறுகிறான் என்பதற்கு அவர்கள் நிர்வாகத்துக்கு விளக்கம் தரவேண்டியிருந்தது.

ஒருவழியாக இந்தப் பையன் அறிவியல் மற்றும் கணிதம் தவிர மற்ற பாடங்கள் தேர்ச்சி பெறத் தொடங்கினான். பெரிய சாதனை இது. ஆனால் இது அறிவு வளர்ந்ததற்கான முழுமையான அடையாளம் அல்ல. கொஞ்சம் வளர்ச்சி, அதோடு வினாக்கள் கேட்கப்படும் முறையைத் தெரிந்துகொண்டு, எதைப் படித்தால் மதிப்பெண்கள் எளிதாகப் பெறலாம் என்பதையும் சேர்த்து கிடைத்த வெற்றி. அதாவது மதிப்பெண்ணுக்காக படிக்கும் முறை. இதை வெற்றி என்று சொல்லமுடியாது. ஆனால் அந்தப் பெற்றோர்கள் தன் மகன் இப்படி மூன்று பாடங்களில் தேர்ச்சி பெற்றுவிட்டான் என்பதை பெரிய மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். பள்ளியிலும் இப்போது இந்தப் பையன் கொஞ்சம் பரவாயில்லை என்று சொல்ல ஆரம்பித்தார்கள். மதிப்பெண் என்ன ஆனாலும் பரவாயில்லை, அவன் முதலில் எழுத்துகளை வார்த்தைகளை மொழியைப் படிக்கட்டும் என்று விட்டுவிட பெற்றோரும் ஆசிரியரும் சமூகமும் தயாராக இல்லை. 

இதில் இன்னொரு விஷயம், இந்தப் பையன் எப்போதும் படித்துக்கொண்டே இருப்பான். மற்ற பையன்கள் போல ஏமாற்றுவது, படிக்காமல் இருப்பது, பார்த்து எழுதுவது என எதையும் செய்யமாட்டான். மூன்று மணி நேரம் தொடர்ந்து படிக்கச் சொன்னாலும் எவ்வித சுணக்கமும் இன்று படித்துக்கொண்டே இருப்பான். எத்தனை முறை எழுதச் சொன்னாலும் எழுதிக்கொண்டு வருவான்.  இப்படிச் சிலரை மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். அப்படிப் படித்தும் அவனால் பெரிய மதிப்பெண்கள் பெறமுடியவில்லை.

இந்த வருடம் மெட்ரிகுலேஷனுக்கு மாற்றிவிட்டார்கள். ஏழாம் வகுப்புக்கு எப்படியோ தேர்ச்சி பெற்று வந்துவிட்டான். சமச்சீர்க் கல்வி என்பதால் கொஞ்சம் எளிமையாக இருக்கிறது. ஆனால் பள்ளியின் நெருக்கடி அப்படியே தொடர்கிறது. இப்போதும் 3 பாடங்களில் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளான். கணக்கிலும் அறிவியலிலும் 35க்கும் குறைவான மதிப்பெண்களே பெறுகிறான். கேள்வித்தாள் ப்ளூ பிரிண்ட்டை வைத்துத்தான் மதிப்பெண்கள் வாங்க வைக்க முடிகிறது. ஒட்டுமொத்தமாக இந்தக் கல்வியினால் அவன் பெறப்போவது என்ன என்று யோசிக்கும்போது வேதனையே மிஞ்சுகிறது. 

இவன் இப்படி ஆன விஷயத்தில் பள்ளிக்கும் பெற்றோர்க்கும் சம பங்கு பொறுப்பு உள்ளது. பள்ளிகள் அதனை மிக எளிதாகக் கடந்துவிடும். பெற்றோர்கள் மாட்டிக்கொள்வார்கள். தன் மகன் எப்படி என்ன எதற்காகப் படிக்கிறான் என்பதை நிச்சயம் ஒரு பெற்றோர் கவனிக்க வேண்டும். இல்லையென்றால் இப்படிப்பட்ட நிலைக்குத்தான் எந்த ஒரு பையனும் போய்ச்சேர வேண்டியிருக்கும். இந்தப் பெற்றோரின் மன நெருக்கடியும் பண நெருக்கடியும் சாமானியமானதல்ல. வருடம் இரண்டு பையன்களுக்கும் சேர்த்து குறைந்தது 70,000 ரூபாய் செலவு செய்தும் பையன்களின் படிப்பின் நிலை இப்படித்தான் என்றால் அந்தப் பெற்றோரின் நிலை இப்படி என்றால், யோசித்துப் பாருங்கள்.

இப்படி ஒரு வகை பெற்றோர் என்றால், இன்னொரு வகை பெற்றோர் உண்டு. அவர்களைப் பற்றி அடுத்து.

Share

Comments Closed