என்றென்றும் புன்னகை திரைப்படத்தைக் கடந்த வாரம் பார்த்தேன். விமர்சனம் எழுதும் அளவுக்குப் படத்தில் ஒன்றும் இல்லை என்பதால் விட்டுவிட்டேன். படத்தின் முதல் பாதியில், மூன்று ஆண்கள் நட்பின் போர்வையில் அடித்துக் கொள்ளும் கூத்துகள் ஆபாசமானவை. ஆனால் தமிழ்த் திரையுலகத்துக்கு ஆபாசம் ஒன்று புதிதல்ல என்பதால், அதைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை. ஆபாசத் திரைப்படங்களுக்கு மத்தியிலேயே வளர்ந்ததால், சிறிய முகச்சுளிப்போடு இவற்றைக் கடந்துசெல்ல பழகிவிட்டதால், இதெல்லாம் ஆபாசமா என்ற எதிர்க்கேள்விகளுக்குப் பதிலளிக்கும் திராணி இல்லாமல் அமைதியாக இருக்கப் பழகிவிட்டதால், இப்படத்தையும் அப்படியே கடந்தேன். இரட்டை அர்த்த வசனமெல்லாம் மலையேறிப்போய், பார்த்திபன் பாணியில் – ஒரே அர்த்தம்தான், அது அதுதான் – என்று இன்றைய தமிழ் வணிக சினிமா மாறிவிட்டிருக்கிறது. இதில் என்றென்றும் புன்னகையை மட்டும் வைத்து வருத்தப்படத் தேவையில்லை என நினைத்தேன்.
டிவிட்டரில் ஒருவர், அது மருத்துவர் ராமதாஸின் தயாரிப்பில் வந்த படம் என்று சொல்லியிருந்தார். முதலில் அதைப் பகடி என்று நினைத்துவிட்டேன். பின்னர் கூகிளிட்டபோதுதான் தெரிந்தது, படத்தை தயாரித்தவர் பாமக அரசியல்வாதிகளுள் ஒருவரான ஜி.கே. மணியின் மகன் என்பது! அப்படியானால் என்றென்றும் புன்னகை முன்வைக்கும் ஆபாசங்களைப் பற்றியும் அதன் தொடர்ச்சியான அரசியலைப் பற்றியும் பேச வார்த்தைகள் இருக்கின்றன. படத்தை இயக்கியவர் அஹ்மத். அவர் இப்படி இயக்கியது பற்றி எனக்குப் பொதுவான கருத்துகள் உண்டென்றாலும், தனியாகச் சொல்ல எதுவுமில்லை.
பாபா திரைப்படம் வந்தபோது அதில் குடிக்காட்சிகளும் சிகரெட் புகைக்கும் காட்சிகளும் வருவதால் அதனைத் தடைசெய்ய அராஜகமான வழியில் போராடியது பாமக. குடிக்காட்சிகள் வரக்கூடாது, புகைக்கும் காட்சிகள் வரக்கூடாது என்று பாமக போராட சகல உரிமையும் உள்ளது. ஆனால் அது பயமுறுத்தும் வன்முறையைக் கைக்கொள்ளும் வகையிலும் மிரட்டும் தோரணையிலும் அமையக்கூடாது. ஆனால் அன்று பாபா திரையிடப்பட்ட திரையரங்குகளில் கலாட்டா செய்வோம் என்று பாமக மிரட்டியது. அதிகார பலம் தன் பக்கம் இருப்பதால் தான் என்னவேண்டுமானாலும் செய்யலாம், ஜாதி ஓட்டுக்காக அரசு வாய்மூடி இருக்கும் என்று பாமக நம்பியது. அதுதான் நடக்கவும் செய்தது. இதனாலும் (வேறு காரணங்களாலும்) பாபா தோல்வி கண்டது. ரஜினி தயாரிப்பாளர்களுக்கு பணத்தைத் திருப்பித் தந்தார். இதற்கெல்லாம் காரணம், சமூக அக்கறை என்று காட்டிக்கொண்டது பாமக.
இன்று பாமகவின் அரசியல்வாதிகளுள் ஒருவரான ஜி.கே. மணியின் புதல்வர் ஜி.கே.எம். தமிழ்குமரன் எடுத்திருக்கும் படம் முன்வைக்கும் கருத்துகள் என்ன என்று பார்ப்போம். மூன்று இளைஞர்கள் எப்போதும் குடித்துக்கொண்டே இருக்கிறார்கள். பப்பில் ஆபாச நடனம் ஆடுகிறவர்களுக்கு மத்தியில் குடிக்கிறார்கள். ஒருவர் ஆண்குறியை இன்னொருவர் பார்ப்பது சகஜம் என்பதுபோல பார்த்துக்கொண்டே பேசுகிறார்கள். ஹோமோ போல நடந்துகொள்கிறார்கள்.
பொதுவாகக் காதல் திரைப்படங்களில் காதலர்கள் உறவுகொள்வதைக் காண்பிப்பதில்லை. ஆனாலும் பார்வையாளர்கள் தேவையெனில் அவர்கள் உறவுகொண்டதாகவே நினைத்துக்கொள்வார்கள். அதேபோல் இதில் ஹோமோ என்று நேரடியாகக் காண்பிக்காவிட்டாலும், அவர்கள் ஹோமோ என்று பார்வையாளர்கள் நினைத்துக்கொள்ளும் அளவிலேதான் காட்சிகள் உள்ளன. அதில் ஒரு காட்சியில் இந்த மூன்று நண்பர்களுள் ஒருவர், மற்ற இருவரை ஹோமோ என்று சொல்லிக் கலாய்க்கும் காட்சியும் உண்டு. (இந்தக் காட்சியில் ஹோமோ என்ற வசனத்தின் ஒலி நீக்கப்பட்டுள்ளது.) ஹோமோ பற்றித் திரைப்படங்களில் வரக்கூடாது என்பது என் நிலைப்பாடு அல்ல. அதை எப்படி எந்த சீரியஸ் உணர்வுடன் படமாக்கிறோம் என்பது முக்கியமானது. அதைவிட அதை யார் படமாக்குக்கிறார்கள், கடந்த காலங்களில் அவர்கள் செயல்பாடு என்ன என்பதும் எனக்கு முக்கியமானதே. இன்று இப்படி கலாய்க்கத் தொடங்கினால்தான் நாளை இதைப் பற்றி அலசும் முக்கியமான திரைப்படங்கள் வரும் என்றும் இங்கே நம்புவதற்கில்லை. ஏனென்றால் இன்றுவரை திருநங்கைகள் பற்றி ஒரு உருப்படியான திரைப்படமும் வந்ததில்லை. (சந்தோஷ் சிவன் ஒரு படம் எடுத்ததாக நினைவு, அதை நான் இன்னும் பார்க்கவில்லை.) ஆனால் திருநங்கைகள் தொடர்ந்து இப்படி திரைப்படங்களில் கேவலமாகக் கலாய்க்கப்பட்டுக்கொண்டே இருந்திருக்கிறார்கள். எனவே தமிழ்த் திரையுலகம் ஹோமோக்களைப் பற்றிய உருப்படியான படத்தை எடுத்துவிடும் என்றும் நம்புவதற்கில்லை.
என்றென்றும் புன்னகை திரைப்படத்தில் எப்போதும் ஆண்கள் குடித்துக்கொண்டே இருப்பதோடு, ஒரு காட்சியில் ஹீரோயினையும் குடிக்க அழைக்கிறார்கள். ஐடி கல்ச்சரைக் காண்பிக்கிறார்களாம். இதுதான் யதார்த்தம் என்றால், பாபா படத்தில் ஒரு ரௌடி குடிப்பது போலவும் புகைப்பது போலவும் காட்டுவது யதார்த்தம் இல்லையா? பொதுவாகவே தமிழ்த் திரையுலகம் கருப்பு-வெள்ளைக் காட்சிப்படுத்தலிலும், மக்களின் பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் கருத்துகளை அப்படியே படமாக்குவதால் அவர்களோடு எளிதில் நெருங்கமுடியும் வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்ளக்கூடியதுதான். எனவேதான் பாபா படத்தில், பின்னாளில் திருந்தி குடி இன்றி புகையின்றி இருக்கப்போகும் ஒருவனைக் காண்பிக்க, அவன் திருந்துவதற்கு முன்னால் குடி சீட்டு புகை என்று இருக்கிறான் என்று காட்டப்பட்டது. ஆனால் கலாசாரக் காவலர்களான பாமகவினருக்குப் பொறுக்கவில்லை. படத்துக்கு எதிராக வன்முறையை அரங்கேற்றினார்கள். ஆனால் இன்று அதே கட்சியைச் சேர்ந்த ஒருவரின் மகன் தயாரித்திருக்கும் படம், புதிய தமிழ்க் கலாசாரத்தைக் காட்டுகிறது. கூத்தடிக்கும் நண்பர்கள், கடைசி காட்சியில் குடிக்க மறுப்புத் தெரிவிக்காத கதாநாயகி, இஷ்டப்பட்ட பெண்களுடன் சுற்றும் ஒரு கதாபாத்திரம் என என்றென்றும் புன்னகைத் திரைப்படத்தை பாமகவும் ராமதாஸும் அன்புமணியும் ஏற்கிறார்களா என்பதைத் தெளிவுபடுத்தவேண்டும். இல்லையென்றால் அப்படத்தை அவர்கள் பகிரங்கமாக எதிர்க்கவேண்டும். (இந்த முறையாவது ஜனநாயக ரீதியில் வன்முறை இல்லாமல் யாரையும் மிரட்டாமல் எதிர்க்கட்டும்!) அப்படி எதிர்க்கமுடியவில்லை என்றால், பாபாவை எதிர்த்த தவறுக்கு ரஜினியிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்கவேண்டும்.
குடிக்காட்சிகளும் புகைக்காட்சிகளும் தவறு என்பதை ஏற்று, தனது அடுத்த படத்தில் ரஜினி சுவிங்கத்தை மென்றுகொண்டு வந்தார். அந்தப் பண்பாவது இவர்களிடம் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.