ஜெயமோகனின் ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதலாம் கட்டுரை தொடர்பாக

லத்தின் வரிவடிவில் தமிழை எழுதலாம் என்று ஜெயமோகன் சொன்னார். நிச்சயம் அது எனக்கு ஏற்புடையதல்ல. தமிழ் என்னும் மொழியின் அழிவாகவே இது அமையும் என்றுதான் இப்போதும் நினைக்கிறேன். ஆனால் இந்தக் கருத்தைச் சொல்ல, ஒரு விவாதத்தை உருவாக்க யாருக்கும் உரிமையுள்ளது. சொன்னது ஜெயமோகன் என்பதற்காகவே இந்த விவாதம் எப்படி எதிர்கொள்ளப்பட்டது என்று பார்க்கும்போது எரிச்சலே மிஞ்சுகிறது. மனநோயாளி, மலையாளி, தமிழை அழிக்கப் பார்க்கிறார், அவரது புத்தகத்தை இப்படி வெளியிடவேண்டியதுதானே, அவரது வலைத்தளத்தை இப்படி நடத்தவேண்டியதுதானே, சம்ஸ்கிருதத்தை இப்படிச் சொல்வாரா, மலையாளத்தைச் சொல்வாரா, தன் கவன ஈர்ப்புக்காகச் செய்கிறார் என்பது போன்ற சில்லுண்டித்தனமான எதிர்வினைகளே முன்வைக்கப்பட்டன. 

நான் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜெயமோகனிடம் ஒருமுறை, கருணாநிதி இலக்கியவாதியல்ல என்று சொல்லிவிட்டீர்களே என்று கேட்டேன். நான் எதைச் சொன்னாலும் அது குறித்து நூறு பக்கங்களாவது என்னால் எழுதமுடியும் என்றால்தான் சொல்வேன் என்றார். இன்றுவரை அவர் அப்படியேதான் இருக்கிறார். வெறும் கவன ஈர்ப்புக்காக எதையும் சொல்லிவிட்டு அவர் ஓடி ஒளிவதில்லை. அவர் நம்பும் கருத்துகளையே அவர் சொல்கிறார். அது கவன ஈர்ப்பாகவும் அமைந்துவிடுவது அவரது சிறப்பு. இதைக் கருத்தால் எதிர்கொள்ள வழியில்லாதவர்களே அவரை வேறு வழிகளில் ஏசத் தொடங்குகிறார்கள்.

சிலர் ஒரு படி மேலே போய் இது ஜெயமோகனின் கருத்து அல்ல, அவர் காப்பி அடிக்கிறார் என்றும் சொன்னார்கள். ஆனால் இந்த விவாதத்தை ஒழுங்காக அவர்கள் எதிர்கொள்ளவில்லை. ஜெயமோகனின் காப்பி என்பதோடு அவர்களும் நின்றுகொண்டார்கள். இதையெல்லாம் எதிர்பார்த்தேதான் ஜெயமோகன் முன்பே எதிர்வினையை எழுதி வைத்ததாகச் சொல்லி ஒரு பதிலை அவரது தளத்தில் வெளியிட்டார். வழக்கம்போல அந்தப் பதிலில் அவரது விவாதத்துக்கு மேம்போக்காகப் பதில் சொன்னவர்களை இடது கையால் நிராகரித்திருந்தார். 

இன்று தி தமிழ் ஹிந்துவில் வரும் செய்தியைப் பார்த்தபோது ஜெயமோகனின் இடதுகை நிராகரிப்பு சரிதான் என்று நினைக்க வைக்கிறது.

தமிழறிஞ்சர்கள் ஒன்றுகூடி கண்டுபிடித்தது, ஜெயமோகன் மலையாளி, நாயர், தமிழின் உடலை அழித்து மொழியை அழிக்கப் பார்க்கிறார் என்பதுதான். யாராவது எதாவது பதிலடி கட்டுரைகளைத் தந்திருக்கிறார்களா என்றால் அப்படி எதுவும் வெளியாகவில்லை. 

இந்த தமிழறிஞ்சர்கள் நாயர் என்ற சாதிக் கண்டுபிடிப்பை வெளிப்படுத்த எந்தத் தகுதியாவது இருக்கிறதா என்று அவர்களை அவர்களே கேட்டுக்கொள்வது நல்லது. ஜெயமோகனை நாயராகத்தான் பார்ப்பார்கள் என்றால், அந்த ’நாயர்’ அளவுக்கு எந்த நாயகராவது (நாகரிகத்தொடை கருதி இப்படி எழுதவேண்டியிருக்கிறது) தமிழுக்குப் பங்களிப்பு அளித்திருப்பார்களா என்ன? ஜெயமோகனின் தமிழ்ப் பங்களிப்பு வார்த்தைகளில் அடங்காதது. இதே வேகத்தில் ஜெயமோகன் எழுதிக்கொண்டிருந்தால், காந்திக்கும் அம்பேத்கருக்கும் அடுத்து எழுதிக் குவித்தவர் ஜெயமோகனாகவே இருப்பார் என்று நினைக்கிறேன். எனவே அவர் தமிழ் பற்றிப் பேசவும் விவாதத்தை முன்னெடுக்கவும் சகல தகுதியும் உள்ளவர். நாயர் உள்ளிட்ட சாதிகளை இவர்கள் புறக்கணிக்கத் தொடங்கினால், அவர்கள் அதை நீதிக்கட்சியின் வரலாற்றில் இருந்து தொடங்கட்டும். பிறமொழி வெறுப்பில் இருந்து தொடங்கினால் அதை ஈவெராவில் தொடங்கட்டும். 

சில ஃபேஸ்புக் டிவிட்டர் இடுகைகள் இன்னும் கேவலமானதாக இருந்தன. இதே கருத்தை ஜெயமோகன் மலையாளத்துக்கோ கன்னடத்துக்கோ சொல்லியிருந்தால் அவரை முட்டி போட வைத்திருப்பார்கள் என்ற கருத்தெல்லாம் சொல்லப்பட்டன. ஒரு கருத்தைச் சொன்னதற்காக முட்டி வைக்கப்படவேண்டும் என்பது பாசிஸம். இதை யார் எந்த வடிவில் எந்த சாதி மதப் போர்வையில் செய்தாலும் அதைக் கண்டிக்கவே செய்யவேண்டும். மலையாளிகளும் கன்னடர்களும் அப்படி நடந்துகொண்டால் அவர்களது கண்மூடித்தனமான வெறியைத்தான் நாம் கண்டிக்கவேண்டுமே அன்றி, அப்படித் தமிழர்கள் நடந்துகொள்வதில்லை என்பது தமிழர்களின் முதிர்ச்சியைக் காட்டுகிறது என்று அவர்களைக் கொண்டாடவேண்டுமே அன்றி, தமிழர்கள் இப்படி நடந்துகொள்ளவில்லையே என்று நொந்துகொள்ளக்கூடாது. பக்குவம் என்பது நாம் தொடர்ந்து முதிர்ச்சி அடைவதில்தான் உள்ளது, அன்றி வன்முறையாக ஒரு கருத்தை முடக்குவதில் அல்ல.

அ.மார்க்ஸ் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு படி மேலே போய் இது ஆர் எஸ் எஸ் சார்பு என்று சொல்லியுள்ளார். ஏனென்றால், இந்திய மொழிகள் அனைத்துக்குமான வரிவடிவம் தேவநாகரியாக இருக்கவேண்டும் என்பது ஆர் எஸ் எஸ் கொள்கையாம். வட இந்திய வடகிழக்கு இந்தியப் பகுதிகளில் மதமாற்றம் நிகழ்ந்தபோது, கிறித்துவ அமைப்புகள் மிகவும் உக்கிரமாக அங்கிருந்த வட்டார மொழிகளின் வரிவடிவத்தை அழித்து, அவற்றை லத்தின் வரிவடிவில் எழுத வற்புறுத்தினார்களாம். இதை ஒரு நண்பர் சொன்னார். இதை வைத்துக்கொண்டு பார்த்தால், ஜெயமோகன் செய்தது அப்பட்டமான ஆர் எஸ் எஸ் எதிர்ப்பு விவாதம்! ஆனால் மார்க்ஸோ இதை ஆர் எஸ் எஸ் ஆதரவு என்கிறார்! விநோதம்தான். மதமாற்றக் கும்பல்கள் செய்த வரிவடிவ அழிப்பைப் பற்றி அ.மார்க்ஸ் எதுவும் பேசப்போவதில்லை என்பது நமக்குத் தெரிந்ததுதான்.

மதமாற்ற இங்கே வந்து தமிழறிஞராகக் கொண்டாடப்படும் வீரமாமுனிவரையெல்லாம் விட்டுவிட்டு, உண்மையில் தமிழுக்குப் பெரிய பங்களிப்பை அளித்துக்கொண்டிருக்கும் ஜெயமோகனை மதவாதி என்பதுதான் இவர்கள் ஞானத்தின் உச்சம்.

இன்றைய தி தமிழ் ஹிந்துவில் தமிழறிஞ்சர்கள் கூட்டமைப்பு கொடுத்த அறிக்கையில் ஒரு விஷயம், பிராமி என்பது தமிழின் மூலமல்ல, அது வேறு; தமிழ்பிராமி வேறாம். முதல் குரங்குக்குத் தொத்தாமல் இருக்க இவர்களால் முடியாது.

தமிழறிஞ்சர்களின் எதிர்வினை இங்கே.

ஜெயமோகனின் கட்டுரை இங்கே.

ஜெயமோகனின் எதிர்வினை இங்கே.

அ.மார்க்ஸின் ஃபேஸ்புக் இடுகை இங்கே.

Share

Comments Closed