Thanga meengal review

தங்கமீன்கள்

உணர்ச்சிகரமான களத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். தந்தைக்கும் மகளுக்குமான உறவைக் காட்டியிருக்கிறார் இயக்குநர் ராம். தன் மகள் ஆசைப்பட்ட எதையும் செய்யத் துடிக்கும் ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையேயான பாசப் பரிமாறல்தான் தொடக்கக் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை.

இயற்கையான அறிவோடு இருக்கும் தன் மகள் பள்ளியில் மதிப்பெண்கள் பெறாத ஒரே காரணத்தால் புறக்கணிக்கப்படுவதை ராம் தன் பாணியில் சொல்லியிருக்கிறார். பல காட்சிகள் மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளன. பல இடங்களில் வசனம் பளிச். இது போன்ற ஒரு படத்துக்கு இத்தனை இடங்களில் மக்கள் கைத்தட்டுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.
இயக்குநர் ராமைத் தவிர எல்லாருமே நன்றாக நடித்திருக்கிறார்கள்.

இயக்குநர் ராம்கூட அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்றாலும், கொஞ்சம் அதிகமாக வாழ்ந்துவிட்டார். இயக்குநர் ராமின் மகளாக வரும் சுட்டிப் பெண் (சாதனா)  வெகு அழகாக நடித்திருக்கிறார். ஆரம்பக் காட்சிகளில் இந்தப் பெண்ணுடன் ஒன்றிக்கொள்ள கொஞ்சம் நேரமானாலும், போகப் போக ஒட்டிக்கொள்கிறார்.

அதேபோல் ’பூரி’ குழந்தையும். பள்ளியில் ஆசிரியர்களாக வரும் நடிகைகள் எல்லாருமே வெகு இயற்கையாக நடிக்கிறார்கள்.
ஒரே ஒரு காட்சியில் வரும் ஹெவிட்டா டீச்சர் (லக்ஷ்மி ராய்?), ராமின் தங்கையாக வரும் நடிகை, இருவரின் நடிப்பும் மிக இயல்பாக உள்ளது.

ராமின் மனைவியாக வரும் ஷெல்லி கிஷோரைப் பற்றித் தனியே குறிப்பிடவேண்டும். கொஞ்சம் கூட மிகை நடிப்பு ஆகிவிடாத அற்புதத்தை அவர் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் அவர் காண்பிக்கும் உணர்ச்சிகள் பிரமிக்க வைக்குகின்றன.

மிகச் சிறந்த பின்னணி இசை. நல்ல கேமரா. கூர்மையான வசனங்கள். இத்தனை இருந்தும், படம் ஏன் மனத்தை அள்ளிக்கொள்ளவில்லை? இயக்குநர் ராமின் குழப்பங்களே காரணம்.

பாசக்காரத் தந்தை ஏன் ஒரு சைக்கோ போல் நடிக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளமுடியவில்லை. ‘கற்றது தமிழ்’ சுமையை இந்தப் படத்திலும் தேவையில்லாமல் ராம் சுமந்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் பாசம் என்றாலே ஓவென்று கதறக் கதறத்தான் காட்சிப்படுத்தவேண்டும் என்ற தங்கர்பச்சான்தனத்தைத் தவிர்த்திருக்கலாம். இது படத்தின் மிகப் பெரிய குறை.

படம் தந்தை மகள் பாசத்தைச் சொல்கிறதா, கல்வி முறையின் போதாமையைச் சொல்கிறதா என்பதில் அடுத்த குழப்பம். இரண்டையும் ஒருசேரச் சொல்ல முயன்றதில், இப்படியுமில்லாமல் அப்படியுமில்லாமல் வந்து நிற்கிறது திரைப்படம். இதில் வறுமை தரும் அலைக்கழிப்புகளும் குடும்பச் சிக்கல்களும் உண்டு. இவையெல்லாம் இல்லாமல் நேர்க்கோடுபோல் எடுக்கமுடியாதுதான். ஆனால் நேரடியான கதையாக எதைச் சொல்கிறாரோ அதற்கு உதவுவது போல் இல்லாமல், அதைவிட வீரியமாக இவை வெளிப்பட்டுவிட்டன.

நாடகத்தனம் அடுத்த பிரச்சினை. புனைவு என்பதே எப்படியும் ஒரு நாடகத்தன்மையைக் கொண்டதுதான். அதற்காக இத்தனை நாடகத்தனமா? ஒரு நாய்க்குட்டியை வாங்குவதற்காக, மகள் கேட்டுவிட்டாள் என்பதற்காக அதனை வாங்கியே தீரவேண்டிய கட்டாயத்துக்காக, ராம் மலையேறி இறங்கும் காட்சிகள் எல்லாம் சிவாஜி காலத்தவை.

கடைசி காட்சியில் எங்கே அந்தக் குழந்தை இறந்துவிடுமோ என்ற பதைபதைப்பில், அப்படி ஒருவேளை இறந்துவிட்டால் இந்தத் தமிழ்நாடு அதை எப்படித் தாங்குமோ என்ற நொடியில், ஆசுவாசப்படுத்தினார் இயக்குநர் ராம். இதற்காக அவரைப் பாராட்டவேண்டும்.

பள்ளியில் ஆசிரியரைக் குறை சொல்கிறார் ராம். ஆனால் பள்ளி ஆசிரியர்கள் அப்படி எதுவுமே தப்பாகச் செய்துவிடவில்லை! ஏன் ராம் கொந்தளிக்கிறார் என்று புரியவில்லை. அதிலும் அந்தப் பெண், இந்தப் பள்ளி வேண்டாம், அரசுப் பள்ளி போதும் என்கிறாள். அப்போது அதனை மறுக்கும் ராம், கடைசிக் காட்சியில் அதையே செய்தியாக வைக்கிறார். தன் மகள் படும் அத்தனை சிரமங்களையும் தெரிந்து வைத்திருக்கும் ஒரு ஆப்பா அப்போது ஏன் மறுத்தார், பின்னர் ஏன் மாறினார் என்பதற்கான காட்சிகளை விவரித்திருக்கலாம். விட்டுவிட்டார்கள்.

உண்மையில் இத்திரைப்படம் ஒவ்வொரு பெற்றோரும் பார்க்கவேண்டிய படம். எப்படி தப்பாக நடந்துகொள்ளக்கூடாது என்பதற்காக. ஒவ்வொரு தந்தையும் பார்க்கவேண்டிய படம். எப்படி ஒரு குழந்தையை வளர்க்கக்கூடாது என்பதற்காக.

பெண் குழந்தையைப் பெற்ற ஒவ்வொரு தந்தையும் என்ற வசனம் இப்படம் வருவதற்கு முன்பே வெகு பிரசித்தம். ஆனால் இப்படத்தின் கதையமைப்பைப் பொருத்தவரை அக்குழந்தை பெண் குழந்தையாக இருந்தாகவேண்டிய கட்டாயம் எங்குமே தென்படவில்லை. ஆண் குழந்தையாக இருந்திருந்தாலும் இத்தனை கஷ்டங்களும் அப்படியே செல்லுபடியாகும். எனவே ஆனந்த யாழை மீட்டுகிறாயைப் பார்த்துவிட்டு உணர்ச்சிவசப்பட்டு பெண் குழந்தைகளைத் தூக்கிச் செல்லும் அப்பாக்கள், ஆண் குழந்தைகளையும் (இருந்தால்) தூக்கிச் செல்லுங்கள்.

கதையை ஒருமுகப்படுத்தி, தான் சொல்ல வரும் செய்திக்கான எதிர் நிலையை வலிமையாகச் சொல்லும் காட்சிகளை மனதில் வைத்து அதற்கு நிகரான இயக்குநரின் வாதங்களை முன்வைத்து, சலிக்க வைக்கும் சில காட்சிகளை நீக்கியிருந்தால் இன்னும் மனதில் ஒட்டியிருக்கும் இந்தப் படம். ஆனாலும் வீட்டோடு பார்க்கத்தக்க, சில பிரச்சினைகளைப் பேச நினைக்கும் ஒரு படத்தை எடுத்ததற்காக இயக்குநர் ராமையும், இது போன்ற படத்தைத் தயாரிக்க நினைக்கும் கௌதம் மேனனையும் பாராட்டவேண்டும்.

தங்கமீன்கள் – 42%

(தமிழ் பேப்பர் திரைப்பட விமர்சனக் குழு என்ற பெயரில் எழுதியது.)

Share

Comments Closed